சமூக வலைதளங்களில் வெளியான காணொளி போலியானது -இலங்கை இராணுவ படை

39

 

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மகள் துவாரகா தொடர்பில் வெளியான காணொளியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் எனவும், சமூக வலைதளங்களில் வெளியான காணொளி போலியானது என்றும் இலங்கை இராணுவ படை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இது தொடர்பான காணொளி வெளியானதும் உலகம் முழுவதும் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்களிடத்தில் பெருமளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாள் அன்று மாலை வெளியான குறித்த காணொளி , ஏ.ஐ. தொழிநுட்பத்தின்மூலம் வடிவமைக்கப்பட்டது என இலங்கை இராணுவ படையால் கூறப்படுகிறது.

இலங்கை இராணுவ தகவல்
எனினும், இது தொடர்பான காணொளியை பாதுகாப்பு தரப்பினர் கண்காணித்து வரும் நிலையில், அந்த காணொளியை பார்த்த வடக்கின் சமூக ஊடக ஆர்வலர்கள் பலர் இது ஒரு போலியான விடயம் என கூறியுள்ளனர்.

தனது வாழ்நாளில் அரசியல் ரீதியாக தனது குடும்ப உறுப்பினர்களை எந்த வகையிலும் அவர் ஊக்குவிக்கவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போரின் போது இறந்துவிட்டார்கள் என்றும் இந்தியாவின் அரசியல் ஆதாயத்திற்காக இந்த காணொளி உருவாக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு போரில் பிரபாகரன் 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார் எனவும், இப்போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

இந்நிலையில் பிரபாகரன் மகள் துவாரகா பெயரில் காணொளி வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக மற்றொரு நபர்களை முழுமையாக பிரதி எடுக்கும் விதமான பல்வேறு காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

இதுவும் அத்தகைய ஏ.ஐ காணொளி அல்லது உண்மையானதா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

சர்ச்சை காணொளி
இது தொடர்பில் இந்திய சைபர் குற்றத்தடுப்பு அதிகாரிகள் கூறுகையில்,

“தற்போதைய செயற்கை நுண்ணறிவின் ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பத்தில் நாம் விரும்பும் காணொளிகளை துல்லியமாக உருவாக்க முடியும்.

அவை போலியானவை என்பது கண்டறிவது சற்று கடினமான பணியாகும். இதுபோன்ற காணொளிகள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையாகின.

அதன்படி தற்போது வெளியான துவாரகா காணொளி விவகாரத்திலும் அவற்றை துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு ஆராய வேண்டும். இதன்போது மட்டுமே உண்மைநிலை தெரியவரும்” என கூறியுள்ளனர்.

எனினும் இந்த காணொளியை உண்மை எனக்கூறி விரைவில் பிரபாகரன் வெளியே வருவார் என்று தமிழீழ ஆதராவளர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு பிரிவினரும், சில தமிழர் அமைப்புகளும் இதை ஏற்க மறுக்கின்றனர்.

அதேபால், இந்த காணொளியின் உண்மைத்தன்மையை சர்வதேச மற்றும் இந்திய உளவு அமைப்புகள் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE