சம்பந்தனே எதிர்க்கட்சி தலைவருக்கு தகுதியானவர்-கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன

234
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க நாட்டின் பிரதான இரண்டு கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில், நாட்டின் சட்ட திட்டங்களுக்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

மூவின மக்களினதும் ஆதரவை பெற்ற பிரதான இரண்டு கட்சிகள் இணக்கப்பாட்டுடன் கூடிய, நாட்டின் முன்னேற்றத்தை கொண்டு செயற்பட உத்தேசித்துள்ளன. இத்தருணத்தில்
13 திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவதில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே நவசம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

மூவின மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இணக்கப்பாட்டுடன் கூடிய, நாட்டின் முன்னேற்றத்துக்கான தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளமையை நாம் வரவேற்கின்றோம்.

அந்தவகையில் எமது நாட்டில் பலவருடகாலமாக காணப்படுகின்ற தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மூவின மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்துள்ள இந்நிலையில் சட்ட விதிமுறைகளுக்கமைய நாட்டின் பிரதானமான பலம் பொருந்திய மூன்றாவது கட்சியாக தொழிற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்கட்சிக்கான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

SHARE