சயனைட் குப்பி போராளிகளின் கழுத்தில் தொங்குவதற்கு வழிகோலிய நாள் ஜூன் 5

345

 

ஜூன் 5 ஈழத்தமிழினத்தின் அரசியல் போராட்ட வரலாற்றில் பல பதிவுகளைக் கொண்ட நாளாகும். ஜூன் 5 தான் பல திருப்பு முனைகளை ஏற்படுத்திய நாளாகும்.

ஆயுதப் போராட்ட காலத்திலும் பல சாதனைகளை வெற்றிச் சமர்களைக் கண்ட நாளாக ஜூன் 5 திகழ்கின்றது. ஆயுதப் போராட்டம் எழுச்சி பெறவும் சயனைட் என்கின்ற கொடிய நஞ்சு போராளிகளின் கழுத்தில் தொங்குவதற்கும் இந்த நாள் தான் வழிகோலியது என்பதில் மிகையில்லை.

மலையகத்தில் வாழ்ந்த மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் ஜக்கிய தேசியக் கட்சி 1948 ல் பறித்து மக்களை நாடற்றவர்களாக்கியதுடன் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உறுப்பினர் எண்ணிக்கையையும் குறைத்தது.

இந் நேரத்தில் தான் தந்தை செல்வா ‘ இன்று மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கும் சிங்கள அரசு நாளை மொழி உரிமையிலும் கை வைக்கும் முழுத் தமிழினத்தின் உரிமைகளும் பறிக்கப்படும் ” என எதிர்வு கூறியிருந்தார்.

அவர் கூறியது போன்று 1956 ஜூன் 5 இல்; சிறீலங்கா நாடாளுமன்றில் ‘சிங்களம் மட்டும”; தான் நாட்டின் உத்தியோக மொழி என்ற சட்ட மூலம் கொண்டு வரப்பட்டது.

26_047

1944 இல் ஜே.ஆர் ஜெயவர்த்தனா நாட்டின் உத்தியோக மொழி சிங்களமாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்ட நகல் கொண்டு வந்த பொழுது அதை எதிர்த்து நாட்டின் ஆட்சி மொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்க வேண்டும் என்று வாதாடி ஜே.ஆரின் தீர்மானத்தைத் தோற்கடிக்க உழைத்த பண்டாரநாயக்க 1956 ஜூன் 5ல் சிங்களம் மட்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே சிந்தனையிலேயே உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தினார்.

அப்பொழுது நாடாளுமன்றம் காலிமுகத்திடலுக்கு முன்பாக தற்பொழுது ஜனாதிபதி அலுவலகமாக இருக்கின்ற கட்டிடத்திலே இருந்தது. சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வா தலைமையில் தமது எதிர்ப்பை அறவழியில் காட்டுவதற்காக நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்தனர்.

அறவழியில் அமைதி வழியில் தமது எதிர்ப்பைக் காட்டியவர்கள் மீது சிங்களக் காடையர் கும்பல் காடைத்தனத்தைக் காண்பித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் மோசமாகத் தாக்கப்பட்டனர்.

இதைப் பார்த்துக் கொண்டே நாடாளுமன்றப் படிகளில் ஏறிய பண்டாரநாயக்கா அறவழியில் இருந்தவர்களைக் கேலியாகப் பேசியதுடன் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார். இப் போராட்டத்தில் ஜீ.ஜீ. பொன்னம்பலம். சி.சுந்தரலிங்கம் ஆகியோரும் சிறிது நேரம் பங்குபற்றியிருந்தனர். தவத்திரு தனிநாயகம் அடிகளாரும் இவ்வெதிர்ப்பு நிகழ்வில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

நாடாளுமன்றத்தின் முன்னால் நடத்தப்பட்ட இத் தாக்குதல் படிப்படியாகக் கொழும்பையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. தமிழ் மக்கள் மிகவும் மோசமாகத் தாக்கப்படடனர். தமிழ் மக்களது பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இவை கொழும்பில் நடைபெற்ற வேளையில் தென் தமிழீழத்தில் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர்களால் அம்பாறை மாவட்டத்திருந்து முழுத் தமிழர்களும் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் இருந்து முற்றாக விரட்டியடிக்கப்பட்ட நாளும் இதே ஜூன் 5 தான். இந்தக் கொடுமையைப் பார்க்க உடனடியாக அங்கு சென்றார் அப்போதைய கோப்பாய்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கு.வன்னியசிங்கம்.

அவர் அங்கு சென்ற பொழுது அந்தத் தமிழ் மண்ணில் இரண்டே இரண்டு தமிழர்கள் இருந்தனர். அதில் ஒருவர் வன்னியசிங்கம் மற்றவர் அங்கிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான தமிழரேயாகும். அங்கு நடந்த கொடுமைகளை வன்னியசிங்கம் பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றி வெளிக்கொணர்ந்தார் என்பது வரலாற்றுப் பதிவாகும்.

இந்தக் கொடூரங்களைத் தான் வடமாகாண சபை கடந்த 2015 -2- 10ம் நாள் நிறைவேற்றிய தீர்மானத்தில் முதலாவது இன அழிப்புத் தாக்குதலாக இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதே 1956 ஜூன் 5ல் இன்னுமொரு நிகழ்வும் இடம்பெற்றது. அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.. கண்டுகொள்ள வேண்டிய இடதுசாரிகள் குறிப்பாக அன்றைய லங்கா சமசமாசக் கட்சியினர் அதனையிட்டு கவலைப்படவுமில்லை. லங்கா சமசமாசக் கட்சியின் தொழிற்சங்கத்தில் இருந்த வட்டுக்கோட்டை வாசியான வேலுப்பிள்ளை கந்தசாமி என்பவரது சிலை தெமட்டக்கொடவில் இருந்தது.

அந்தத் தமிழரின் சிலையும் அடித்து நொருக்கப்பட்டது ஜூன் 5 1956 ல் தான். இதனைப் பற்றி என்றைக்கும் எவரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அச் சிலையை மீள நிறுவ அவர்கள் முன்வரவில்லை. ஏனெனில் கந்தசாமி ஒரு தமிழராகி விட்டார் என்பதேயாகும்.

யார் இந்தக் கந்தசாமி.

அந்தக் காலத்தில் தொழிற்சங்கங்கள் லங்கா சமசமாசக் கட்சி —கொம்யூனிஸ்ட் கட்சி என்பனவற்றின் கட்டுப்பாட்டில் இருந்தன. இன மத வேறுபாடின்றித் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்திருந்த காலம் அந்;தக் காலம். 1947ல் அரசாங்க எழுதுவினைஞர்கள் தங்கள் உரிமைகளுக்காக ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த அறிவித்தல் கொடுத்து உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் 1947 ஜூன் 5ல் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.

வேலை நிறுத்தக்காரர்கள் 50,000 பேர் வரை வன்முறைகளற்ற வழியில் தங்கள் கோரிக்கைகளை முழங்கியவாறு பேரணியாகச் சென்றனர். ஆனால் அன்றைய ஆட்சி அமைதியாகச் சென்றவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அதில் சூடுபட்ட வேலுப்பிள்ளை கந்தசாமி என்ற எழுதுவினைஞர் அவ்விடத்திலேயே இறந்து விடுகிறார். இதில் வேறு 19 பேர் காயமடைகின்றனர். இது நடந்ததும் ஜூன் 5 தான். அவர் இறந்த இடத்தில் அவருக்குச் சிலை வைக்க முற்பட்ட பொழுது தமிழனுக்குக் கொழும்பில் சிலையா என்ற குரல்கள் எழுந்தன. புல தடைகளுக்கு மத்தியில் அவர் சூடுபட்டு இறந்த இடத்தில் சிலை வைக்கப்பட்டது.

1947 ஜூன் 5ல் தொழிலாளரின் உரிமைகளுக்காக உயிர் நீத்த கந்தசாமியின் சிலை 1956 ஜூன் 5ல் தமிழன் என்ற காரணத்தினால் அடித்து நொருக்கப்பட்டது. என்னே பொருத்தம் இந்த ஜூன் 5 ற்கும் தமிழினத்திற்கும் என்பது தெரிகின்றதல்லவா?

இதற்கும் அப்பால் இதே ஜூன் 5 தான் தமிழ் மக்களுடைய போராட்டத்திற்குப் பெரிய திருப்பு முனையைக் கொடுத்த நாளாகவும் அமைந்துள்ளது. அறவழிப் போராட்டம் தமிழ் மக்களுக்கு வெற்றியைத் தரமாட்டாது. நாம் அறவழியில் போராடினாலும் ஆயுத வழிமூலம் இராணுவ பலத்தால் அப் போராட்டங்;கள் அடக்கப்பட்ட வரலாறு இளைஞர்களைப் புதிய சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தியது.

உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்ட பொழுது உயர்கல்வியிலும் அரசு கைவைத்தது. இந் நேரத்தில் இளைஞர்கள் தமது வழியை மாற்றினால் தான் விடிவு காணலாம் என்ற சிந்தனைக்குள் தள்ளப்பட்டனர்.

தரப்படுத்தலை எதிர்த்த மாணவர்களுக்கு 1972ல் கொண்டுவரப்பட்ட சிறீலங்காவின் புதிய குடியரசு யாப்பு மேலும் கோபத்தையும் எழுச்சியையும் கொடுத்தது. அந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு முதல்வனாகத் தோன்றினான் சிவகுமாரன்.

சிவகுமார் தனது போராட்டப் பாதையைத் தானே தேடிக் கொண்டான். புல தாக்குதல்களைத் தனியாகவே மேற்கொண்டான். மக்களிடையே பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இளைஞர்கள் அவனுடன் இணைந்தனர். அரசு அவனை வேட்டையாடத் தொடங்கியது. அவன் தலைமறைவாகவும் செயற்பட்டான்.

அவனது முதற் தாக்குதல் அவனது சொந்த ஊரான உரும்பிராயிலேயே இடம்பெற்றது. 1970 ல் ஆட்சிக்கு வந்த ஜக்கிய முன்னணி அரசின் பிரதி அமைச்சர் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் நடந்த பொது நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த பொழுது அவரது காருக்குக் குண்டு வைத்ததிலிருந்து தொடங்குகின்றது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு குற்றம் நிறுவப்படாததால் விடுதலையாகிறான். அதன் பின்னர் அவனது போராட்ட குணம் தீவிரமடைகின்றது. பல தாக்குதல்களை மேற்கொள்கிறான். அவ்வாறு தான் 1974 ஜூன் 5ம் நாள் வீட்டிலே நண்பகல் உணவு உண்ணத் தொடங்கும் பொழுது அவனது நண்பன் ஒருவன் அழைக்கவும் சாப்பாட்டை குறையில் விட்டுவிட்டு நண்பனுடன் சென்று விடுகிறான்.

அன்று கோப்பாய் கிராமிய வங்கியில் போராட்டச் செலவுக்காகக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பொழுது அது வெற்றியளிக்காத நிலையில் சிறீலங்கா காவல்துறையினர் அவ்விடத்திற்கு வரவே தப்பி ஓடுகிறான். காவல்துறையினரும் துரத்திச் செல்கின்றனர். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் அவனைப் பிடிக்க அவன் தான் வைத்திருந்த சயனைட்டை உண்டு யாழ் மருத்துவமனையில் தனது உயிரை மாய்த்துக் கொள்கின்றான்.

உயிருடன் முன்னர் பிடிபட்ட பொழுது ஏற்பட்ட சித்திரவதைகளும் அவ்வாறான சித்திரவதைகளால் சில உண்மைகளைக் கக்கவேண்டி வரும் என்பதாலும் அவை மற்றவர்களையும் கைது செய்ய வழி செய்து விடும் என்பதாலும் சயனைட் நஞ்சுதான் ஒரே வழி என்று முடிவெடுத்து அதனிடம் தன்னை ஒப்படைக்கிறான் சிவகுமாரன். எனவே தான் ஜூன் 5 தமிழின வரலாற்றில் மிகவும் முக்கிய நாளாகப் பதியப்பட்டுள்ளது.

1947 ஜூன் 5 ல் அனைத்துத் தொழிலாளர்களுக்காகவும் உயிர் துறக்கிறான் துப்பாக்கிச் சூட்டில் குண்டுபட்டு வேலுப்பிள்ளை கந்தசாமி என்ற தமிழன்.

1956 ஜூன் 5 ல் அந்தக் கந்தசாமியின் சிலையை உடைத்து எறிகின்றனர் சிங்களவர்கள். முதலில் தமிழனுக்குக் கொழும்பில் சிலையா என்றவர்கள் பின்னர் இடித்துத் தள்ளிவிட்டனர் தங்களுக்காகவும் உயிர் கொடுத்த தமிழனின் சிலையை.

1956 ஜூன் 5 சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழையும் தமிழினத்தையும் இரண்டாந்தர மக்களாக மாற்ற முனைந்த நாள். முதலாவது இனஅழிப்பு நடந்த நாளும் இதே யூன் 5 தான்.
1974 ஜூன் 5 தமிழினம் தொடர்ந்தும் ஏமாற்றப்படவும் அடக்கு முறைகளுக்குள் துன்பப்படவும் கூடாது.

அறப்போர் பலன் தராது ஆயுதமே உரிமைகளுக்கான ஒரே வழி எனவும் தன்னுயிரை எதிரியிடம் கொடாது பிடிபட்டால் தாமே உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்று சயனைட்டை ஆயுதமாக்கிய சிவகுமாரனின் நினைவு நாளுமாகும். ஜூன் 5 தமிழின வரலாற்றில் பல நினைவுகளையும் பல திருப்பங்களையும் ஏற்படுத்திய நாளாகும்.

நப்பின்னை

sinnaththambypa@gmail.com

SHARE