சரணடைந்த கிழக்கு போராளிகள் மீது படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. பெண் போராளிகளின் அவலக்குரல் கதிரவெளி கடலோரமெங்கும் எதிரொலித்தது-பிள்ளையான்.

706

நாங்கள் மண் மீது கொண்டிருந்த பற்று காரணமாகவே வருடக்கணக்கில் போரிட்டோம். வடக்கு மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகளே அதற்கு சாட்சியாகும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வெருகலில் நடைபெற்ற வெருகல் படுகொலை நினைவு தினத்தின் நினைவுரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஒஸ்லோ உடன்படிக்கையையும் 2002 சமாதான ஒப்பந்தத்தையும் கிழித்தெறிய வழிசமைத்த முதலாவது யுத்த நிறுத்த மீறல் தமிழீழ விடுதலை புலிகளால் நடாத்தப்பட்ட இந்த வெருகல் படுகொலையேயாகும் என சர்வதேசத்துக்கு பறை சாற்றுகின்றேன்.

கிழக்கு மாகாண மக்களின் வரலாற்றில் இரத்தகறை படிந்த தினமான சிவப்பு சித்திரை பத்தாம் நாளாகிய இன்று இந்த மண்ணிலே நடந்தேறிய என்றுமே மன்னிக்க முடியாத அந்த கொடூரத்தின் பெயரால் நாமனைவரும் இங்கு கூடியிருக்கின்றோம்.

இலங்கையில் நடந்தேறிய வெலிக்கடை படுகொலை,கொக்கட்டிச்சோலை படுகொலை,குமுதினிப்படகு படுகொலை,கந்தன் கருணை படுகொலை, வெருகல் படுகொலையும் எம் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்றுவிடாதவொன்றாகும்.

ஆனால் ஏனைய படுகொலை நினைவுகளை பேசுவது போலவோ, அதையிட்டு எழுதுவது போலவோ அத்தினங்களை நினைவுகூருவது போலவோ இந்த வெருகல் படுகொலை பற்றி தமிழ் கூறும் இந்த நல்லுலகம் கண்டுகொள்வதில்லை.

அது ஏன் என்றும் எமது மக்கள் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை. கேள்வி எழுப்புவதுமில்லை. எமது மக்கள் இன்னும் வளர்ச்சி காணாதிருப்பதற்கும் முன்னேறமுடியாதிருப்பதற்கும் இந்த மெத்தனபோக்கே காரணமாகும்.

இந்த படுகொலை நிகழ்ந்த வரலாறு உங்களுக்கு மட்டுமல்ல எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச்செல்லப்பட வேண்டும். தமிழனை தமிழனே வெட்டிவீழ்த்திய, சுட்டு வீசிய வரலாற்றையிட்டு இன்றைய இளம் சமூகம் கேள்வியெழுப்ப வேண்டும்.

2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வந்தபோது உருவாக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாகத்துக்காக தெரிவான 32 துறை செயலாளர்களில் ஒருவரை கூட கிழக்கு மாகாணத்திலிருந்து நியமிக்கும் அளவிற்கு அவர்களின் நெஞ்சில் ஈரம் இருக்கவில்லை.

அதை தட்டிகேட்டது குற்றமா? எமது மக்களின் உரிமைகளை கேட்டது எந்த வகையில் குற்றமாகும்? நாம் போராடும் பொழுதுகளில் எம்மை பாராட்டினார்கள், மட்டக்களப்பு வீர விளை நிலம் என்று சான்று தந்தார்கள்.

எமது கல்லறைகளில் தென்தமிழீழத்து மாவீரன் என்று கல்வெட்டு எழுதினார்கள்.ஆனால் நாம் எமது உரிமைகளை கேட்ட மாத்திரத்தில் ஒரே நாளில் துரோகிகளாக்கப்பட்டோம். அப்படி என்றால் பிரிந்து செல்கின்றோம் என்றோம். படையெடுத்து வந்து படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.

சரணடைந்த கிழக்கு போராளிகள் மீது படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. பெண் போராளிகளின் அவலக்குரல் கதிரவெளி கடலோரமெங்கும் எதிரொலித்தது.

சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட போராளிகளின் உயிர் பறிக்கப்பட்டது. சித்திரை வெயிலில் வெம்பி வெடித்து கதிரவெளி கடற்கரை மணலெங்கும் எமது போராளிகளின் உடலங்கள் நாற்றமெடுத்து கிடந்தன. அவற்றை அடக்கம் செய்ய கூடாதென்ற கட்டளை வன்னிப் புலிகளால் விடுக்கப்பட்டிருந்தது.

எமது மக்களே இது எதிரி செய்த படுகொலையல்ல. நாம் யாரை சொந்த தமிழர்கள் என்று நம்பினோமோ எமது தலைவர்கள் என்றோமோ, எம்மை வழிநடாத்துவார்கள், எமக்கு விடுதலை வாங்கி தருவார்கள் என்று நம்பியிருந்தோமோ அவர்களால் நடாத்தப்பட்ட படுகொலைதான் இது. படைகொண்டு தீர்வுக்கான வடக்கும் கிழக்கும் என்ன அந்நிய தேசங்களா? யார் இந்த அநியாயத்தை பற்றி கேள்வி எழுப்பினார்கள்?

2004ம் ஆண்டு இந்த வெருகல் படுகொலை நடந்தபோது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததை உங்களுக்கு ஞாபகம் ஊட்ட விரும்புகின்றேன். அதுமட்டுமா நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்த கண்காணிப்புகுழு கடமையிலிருந்ததே அப்படியிருக்க எப்படி இந்த படுகொலை சாத்தியமாகும்.

வன்னியிலிருந்து ஒமந்தையூடாகவும் கடல் வழியாகவும் எப்படி வன்னிப் புலிகள் இந்த வாகரை பிரதேசம்வரை ஆயுதங்கள் சகிதம் வந்து சேர்ந்தனர்? இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்? அன்றைய அரசுடன் வன்னிப் புலிகளுக்காக தூது சென்ற தமிழ் தேசிய தலைவர்கள் யார்? இந்த உண்மைகள் அம்பலமாக்கப்பட வேண்டும்.

இந்த படுகொலையிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பித்த வாழும் சாட்சியாக நானிருக்கின்றேன். இந்த படுகொலை நடந்த போது தமிழ் மக்களின் காவலர்கள் என்று இன்று வலம் வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏன் மௌனம் காத்தார்கள்? இன்று ஜெனிவாவுக்கு படையெடுக்கும் இந்த கூட்டமைப்பினரும் புகலிடத்தமிழர்களும் இந்த வெருகல் படுகொலைக்கு ஏன் நீதி கேட்பதில்லை என தெரிவித்தார்.

 

SHARE