சவூதியில் இலங்கை பணிப்பெண் கொலை! சடலத்தை கையளிக்குமாறு கணவன் கோரிக்கை

306
சவூதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அப்பெண்ணின் கணவரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே இவ்வாறு சவூதிக்கு பணிபெண்ணாக சென்று அங்கு உயிரிழந்துள்ளார். அவரது கணவரான டபிள்யூ.ஏ.வசந்த குமார என்பவரே மேற்படி பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக மேற்படி பெண், இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரொருவரின் உதவியில் சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அப்பெண் பணிபுரிந்த வீட்டிலிருந்து கடந்த 2014.8.24ஆம் திகதி காணாமல் போயுள்ளார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு அவரது சடலம் பண்ணையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், குறித்த பண்ணையின் உரிமையாளரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சவூதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

தனது மனைவி தொடர்பில் அறிந்து கொள்வதற்கு தனக்கு உதவுமாறு குறித்த பெண்ணின் கணவர், வெளிவிவகார அமைச்சிடம் கோரியிருந்தார்.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக்கமையவே, அவர் இந்த பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார். தனது மனைவியை சவூதிக்கு அனுப்பிய வெளிநாட்டு முகவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE