நியூசிலாந்து வீரர் மார்க் சாப்மேன் அதிரடி ஆட்டத்தினால் தொடர்ந்து இரண்டு முறை ஆட்டநாயகன் விருது பெற்று மிரட்டினார்.
நியூசிலாந்து – ஸ்கட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாளை போட்டி எடின்பர்க்கில் நடந்தது. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி 49.4 ஓவர்களில் 306 ஓட்டங்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
மைக்கேல் லீஸ்க் அதிரடியாக 55 பந்துகளில் 85 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும். மேத்யூ கிராஸ் 53 ஓட்டங்களும், ஜோன்ஸ் 36 ஓட்டங்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி தரப்பில் டுஃபி, பிரேஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பெர்குசன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கப்தில் 47 ஓட்டங்களும், ஆலன் 50 ஓட்டங்களும் விளாசினர். அடுத்து வந்த கிளேவர் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து சாப்மேன், மிட்செல் இருவரும் அதிரடி கூட்டணியில், நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 7 சிக்ஸர்களை விளாசி வாணவேடிக்கை காட்டிய சாப்மேன், 75 பந்துகளில் 101 ஓட்டங்கள் எடுத்தார். மிட்செல் 62 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில் 45.5 ஓவர்களில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளை கைப்பற்றிய நியூசிலாந்து அணி, ஒரேயொரு ஒருநாள் போட்டியையும் வென்றது.
சாப்மேன் 2வது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற நிலையில், ஒருநாள் போட்டியில் சதம் விளாசி மீண்டும் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.