சிரியாவின் ஐ.எஸ்.படையில் சேர்ந்து போரிட்ட அமெரிக்கர் பலி

408
சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.

ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் முதல்கட்டமாக சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிருஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்  வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இதன் அடுத்தகட்டமாக, அலெப்போ மாகாணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டர்க்மென், பரே, அக்தரின் ஆகிய நகரங்களையும் அவற்றை ஒட்டியுள்ள சில கிராமங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். என்றிருந்த தங்களது இயக்கத்தின் பெயரை ஐ.எஸ். என்று சமீபத்தில் சுருக்கிக் கொண்ட இவர்களது படையில் இணைய பலரும் முயன்று வருவதாக தெரிகின்றது.

இந்த ஐ.எஸ்.படையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களும் சேர்ந்து சிரியா மற்றும் ஈராக் ராணுவத்தினருடன் போரிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவை சேர்ந்த சுமார் 100 இஸ்லாமிய இளைஞர்களும் இந்தப் படையில் சமீபத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிரியாவில் உள்ள ஐ.எஸ். படியில் இணைந்து போரிட்டு வந்த டோகுலாஸ் மெக்கெய்ன் என்ற அமெரிக்கர் கடந்த வாரம் சிரியா படைகளுக்கும், ஐ.எஸ்.படைகளுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பலியானவரின் குடும்பத்தாரும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்தவாறே ஜிஹாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த டோகுலாஸ் மெக்கெய்ன்-ஐ அமெரிக்க உளவுத்துறையும் நீண்ட நாட்களாக கண்காணித்து வந்ததாக செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.

பலியான டோகுலாஸ் மெக்கெய்ன், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் பிறந்து, மின்னெஸோட்டா மாநிலத்தில் வளர்ந்து, கலிபோர்னியாவில் வாழ்ந்து வந்ததாகவும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாம் மதத்தை தழுவிய அவர் துருக்கிக்குச் சென்று, அங்குள்ள ஐ.எஸ்.போராளிகளுடன் இணைந்து, சிரியாவின் அரசுப்படைகளுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டபோது கடந்த வாரம் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE