சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்

413
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்காவும், அதன் அரபு கூட்டாளிகளும் வான்வழி தாக்குதல் நடத்தின. இதில் தீவிரவாதிகள் பலர் பலியாயினர். பாரசீக வளைகுடா மற்றும் செங்கடலில் இருந்து அமெரிக்க ராணுவம் ஏவுகணைகளை வீசியுள்ளது.
terroe

ஈராக், சிரியாவில் முக்கிய நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதுமட்டுமின்றி இஸ்லாமிய தேசம் என்ற நாட்டினையும் அவர்கள் பிரகடனம் செய்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் பிணைய கைதியாக சிக்கியுள்ளவர்களை தலையை துண்டித்து கொன்று வருகின்றனர். ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் தாக்குதல் தொடுத்து வருகின்றன. இந்த நிலையில் சிரியாவின் மீது அமெரிக்கா மற்றும் அதன் அரபு கூட்டாளிகள் பார்வை திரும்பி உள்ளது. சிரியாவில் நேற்று அமெரிக்காவும், அரபு நாடுகளும் கூட்டாக வான்வழி தாக்குதல்களை நடத்தின.

‘சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வலுவாக உள்ள ரக்கா உள்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவும், அதன் அரபு கூட்டாளிகளும் வான்வழி தாக்குதல்கள் நடத்தின. (ரக்கா நகரைத்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் தலைநகரமாகக் கருதுகிறது.) இதில் போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தின. இந்த தாக்குதலில் டோமஹாக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டன’ என்று அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.

ரக்கா நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் 2 நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டுமே 20-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் கூறுகிறது.  மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்த கட்டிடங்கள், ஆயுதக்கிடங்குகள், சோதனை சாவடிகளும், ஈராக்-சிரியா எல்லையும் குறி வைத்து தாக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதல்களில் ஏராளமானோர் பலியானதுடன், பலர் காயம் அடைந்ததாகவும் சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் சொல்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு, ஜோர்டான், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகள் தாக்குதலில் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்கா மற்றும் அரபு கூட்டாளிகள் பாரசீக வளைகுடா மற்றும் செங்கடலில் இருந்து சிரியாவில் தீவிரவாதிகள் கையில் உள்ள பகுதியை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்படுகிறது. சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அமெரிக்காவின் தாக்குதலில் கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உலக நாடுகளின் அதிரடியால் கதிகலங்கியுள்ள தீவிரவாதிகள் தங்கள் பிடியில் உள்ள மற்றோரு பிரிட்டன் பிணை கைதியை கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர்.

SHARE