சிறப்பு விமானத்தில் சென்னை புறப்பட்டார் ஜெயலலிதா

381

ஜாமீனில் விடுதலையானதை தொடர்ந்து, 22 நாள் சிறைவாசத்துக்கு பின் ஜெயலலிதா இன்று மாலை 3.15 மணி அளவில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்தார். பெங்களூரு விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் ஜெயலலிதா சென்னை புறப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாமீன் பெற்ற ஜெயலலிதா நேற்றே சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதில், உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு நகல் கிடைத்து அதை கர்நாடக நீதிமன்றத்தில் அளிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து நேற்று அவர் விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் தீர்ப்பு நகல் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 4 பேரும் தலா 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பிணை பத்திரம் தாக்கல் செய்தனர். இதையடுத்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இந்த ஆணையை சிறைத்துறை அதிகாரியிடம் வழக்கறிஞர்கள் வழங்கினர். இதனையடுத்து அவர் பிற்பகல் 3.15 மணி அளவில், பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்தார்.

ஜெயலலிதாவுடன் இதே வழக்கில் ஜாமீன் பெற்ற சசிகலா மற்றும் இளவரசியும் ஒரே காரில் பயணம் செய்தனர். ஆனால் சுதாகரன் மட்டும் தனியாக புறப்பட்டார்.

சிறையிலிருந்து காரில் புறப்பட்ட ஜெயலலிதாவின் கார், பெங்களூரு ஹெச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தது. அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த தனி விமானம் மூலம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் சென்னை புறப்பட்டனர்.

வழிநெடுக உற்சாக வரவேற்பு

முன்னதாக சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயலலிதாவை ஏற்கனவே அங்கு சென்று முகாமிட்டிருந்த தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.

ஜெயலலிதாவுக்கு வழிநெடுகிலும் திரண்டிருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஜெயலலிதாவை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பி, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதேபோன்று ஜெயலலிதாவை வரவேற்க, சென்னை விமான நிலையம், போயஸ் கார்டனிலும் ஏராளமான அதிமுகவினர் திரண்டுள்ளனர்.

 

SHARE