ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் தாயகத் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இணைந்து தமிழீழத்தில் சிங்கள அரசால் நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை ஒரே குரலாக எடுத்துரைக்க முற்பட்டவேளையில், கனடாவில் வசித்துவரும் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையிலான ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் இனப்படுகொலை எனும் பதத்தினைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஏனையோருக்கு பாரியளவில் அழுத்தம் கொடுத்திருந்தனர்.
இதன்போது ஐ.நா.வில் உரையாற்ற வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களும் பல அழுத்தங்களை திரு. கரி ஆனந்தசங்கரியினால் எதிர்நோக்கியிருந்தார்.
இதுபற்றி அண்மையில் கனடா சி.ரி.ஆர். வானொலியில் திருமதி. அனந்தி சசிதரன் அவர்கள் நேயர்கள் கேள்வி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றி அவர்களின் கேள்விக்குப் பதிலளித்திருந்தார்.
அதில், நேயர் ஒருவரால், ‘கனடாவில் இருந்து சென்ற திரு. கரி ஆனந்தசங்கரி அவர்களால் நீங்கள் இனப்படுகொலை என்ற சொற்பதத்தினைப் பயன்படுத்த வேண்டாம் என்று அழுத்தங்கொடுக்கப்பட்டதாக அறிகின்றோம். அது உண்மையா?’ எனக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அனந்தி அவர்கள், ‘ஆம். தான் அழுத்தம்கொடுக்கப்பட்டது உண்மையே. அது ஒரு துரதிஸ்டவசமானது’ எனத் தெரிவித்திருந்தார்.
இது கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் அடுத்த கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக லிபரல் கட்சியின் வேட்பாளர் தகுதிபெறும் உட்கட்சித் தேர்தலில் மக்கள் ஆதரவை வேண்டி வாக்குச் சேகரித்துவரும் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் மீது எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தமிழ் மக்கள் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்களின் உண்மை முகத்தினைத் தெரிவிக்கும் வகையில் அவர் போட்டியிட உத்தேசித்துள்ள தொகுதியில் மக்களுக்கு விளக்கப் பிரசாரம் ஒன்றினை நடத்தியிருந்தனர்.
இதன்போது மூன்று ஜீப் வண்டிகளில் தனது அடியாட்களுடன் வந்திறங்கிய திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள், அங்கு பிரசாரம் செய்துகொண்டிருந்த இளையோர்களைத் தாக்க முற்பட்டதுடன் கொலை அச்சுறுத்தலையும் விடுத்திருந்தனர்.
அதன்போது, அவர்களை நோக்கி ‘சிறிலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல. அங்கு நடைபெற்றது வெறும் போர்க்குற்றம் மட்டுமே. உங்களை இங்குள்ளவர்கள் இனப்படுகொலை என்று சொல்லித் தவறாக வழிநடத்துகின்றார்கள். இளையோர்கள் உங்களுக்கு இனப்படுகொலை என்றால் என்ன என்று தெரியுமா? இனப்படுகொலை என்பதன் விளக்கம் தெரியாமலே எவ்வாறு சிறிலங்கா அரசு தமிழர் மீது இனப்படுகொலை செய்தது என்று சொல்கிறீர்கள்’ எனக் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.
இதேபோன்ற தாக்குதல்களே தமிழீழத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீதும் மக்கள் மீதும் சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த குண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இன்று கனடா, ஸ்காபரோவில் நடைபெற்ற இந்நிகழ்வும் தாயகத்தில் நடைபெறும் இவ்வாறான தாக்குதல்களையே தமக்கு நினைவூட்டியதாக அங்கு நின்றிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள், சிங்கள அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக இயங்கிவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. ஆனந்தசங்கரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது சுய அரசியல் அடித்தளத்துக்காகவே தமிழர் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்துவதாக தன்னைக் காட்டிக்கொள்வதுடன் இங்கு இயங்கும் {CTC }தமிழர் அமைப்பொன்றினைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து செயற்பட்டு வருகிறாரோ என்று மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.