
சிறுபான்மை கட்சிகளுக்கு பதவிகளை வழங்குவதற்காக தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் சிலர் பதவி விலக நேரிட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
சிறுபான்மை கட்சி ஒன்றுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அரசாங்கத்துடன் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக கிழக்கு மாகாணத்தின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகிய அமீர் அலிக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் அவர் இதுவரை அந்த பதவியை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் உட்பட சிறுபான்மை மக்களின் வாக்குகள் எதிரணி வேட்பாளருக்கு கிடைக்கும் என்பதால், அதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.