சீன துறைமுக வெடிவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 112 ஆக அதிகரிப்பு: 85 தீயணைப்பு வீரர்கள் மாயம்

230
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டியான்ஜின் நகர துறைமுக சேமிப்பு கிடங்கில் கடந்த 12-ம் திகதி திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை அடுக்கி வைத்திருந்த பகுதியில் (வேர் ஹவுஸ்) அதிகாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து வெகு தூரம்வரை சிதறி விழுந்த தீக்கோளங்களால் அருகாமையில் உள்ள சில நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால், அந்த துறைமுகப் பகுதி முழுவதும் பெருந்தீ மற்றும் புகை மூட்டத்தால் சூழப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை கட்டுப்படுத்த கடுமையான முயற்சி செய்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ரசாயனப் பொருட்கள் பற்றி எரிந்துகொண்டிருப்பதால் தீயணைப்பு வீரர்களால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. வீடுகளில் வசித்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

உள்ளே சென்று சிக்கிக்கொண்ட பல தீயணைப்பு வீரர்களும் பலியாகி உள்ளனர். கடைசியாக கிடைத்த தகவலின் படி பலி எண்ணிக்கை 104-லிருந்து 112 ஆக அதிகரித்துள்ளது. 722 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 58 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலங்களில் 24 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 88 பேரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்தில் 21 பேர் தீயணைப்பு படையினர் இறந்துள்ளதாகவும், காணாமல் போன 95 பேர்களில் 85 பேர் தீயணைப்பு வீரர்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE