சுதந்திரமாக திரிகின்றனர் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள்-ஹக்கீம்.

583

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் தண்டிக்கப்பட்டு நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலைமை உறுதி செய்யப்பட வேண்டுமென நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர்.

வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

எனினும், வன்முறைகளைத் தூண்டிய அமைப்போ அல்லது தூண்டிய நபரோ இதுவரையில் தண்டிக்கப்படவில்லை .

அடிப்படைவாத அமைப்பு ஒன்றே இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் முஸ்லிம்கள் நாட்டில் அமைதியான முறையில் வாழ முடியாது.

அண்மைய சம்பவங்களின் பின்னர், பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளாக குறித்த அடிப்படைவாத அமைப்பு, முஸ்லிம்கள் மீதும், அவர்களின் மத வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

எவ்வாறெனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் நிவாரணங்களை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டியது என ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE