சுவாமிநாதன், விஜயகலாவினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!- சபையில் ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

164

 

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலி சந்தேக நபர்களை விடுவிக்க முயற்சிக்கின்றார். மறுபுறம் காயப்பட்ட புலிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று அமைச்சர் சுவாமிநாதன் கூறுகிறார்.இவ்வாறு நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென்று ஜீ.எல்.பீரிஸ் எம்.பி நேற்று சபையில் தெரிவித்தார்.

அத்துடன், யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அரசாங்கத்தின் தேசிய பொறிமுறையை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இவ்விடயத்தில் சர்வதேசம் தலையிடும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

செப்டெம்பர் மாதத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கைகள் தொடர்பாகவும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எம்.பி. சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபையில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் உரையாற்றுகையில்,

அமெரிக்காவின் செனட் சபையில் வெளிநாட்டுக் கொள்கையை தயாரிக்கும் முக்கிய செனட் சபை உறுப்பினரான பெட்றிக் லேனி ஜூன் 9ம் திகதி இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத்தில், யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கையின் உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நான் நிராகரிக்கின்றேன். எனவே உள்ளக விசாரணைகளில் சர்வதேச நிபுணர்களுக்கும் இடமளிக்கப்படவேண்டும். அத்தோடு கண்காணிப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

அதில் அவர் முக்கியமாக தெரிப்பது சாட்சியங்களை பெற்றுக்கொள்ளல், சாட்சியங்களை முன்வைப்பதற்கு தொழில்நுட்ப ரீதியான பங்களிப்பு வழங்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். இந்த கருத்து பயங்கரமானது. வக்கிரமாக எமது உள்ளக விசாரணையில் தலையிடும் சர்வதேசத்தின் கருத்தே இதுவாகும். எனவே இதற்கு இடமளிக்கக் கூடாது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு இலங்கை தொடர்பாக அறிக்கையை வெளியிடவுள்ளது.

அத்தோடு இலங்கையின் தேசிய விசாரணை பொறிமுறை தொடர்பாக கவனம் செலுத்தி வருவதாகவும் ஐ.நா . மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கம் மெத்தனப்போக்கை கடைப்பிடிக்காது உடனடியாக தேசிய விசாரணை பொறிமுறையை தயாரிக்கவேண்டும். இல்லாவிட்டால் உள்ளக விசாரணையில் சர்வதேசம் தலையிடும் ஆபத்து உருவாகும். இன்று நாட்டில் என்ன நடக்கின்றது? உலகில் நடக்காத அதிசயங்கள் இடம்பெறுகின்றன.

காயமடைந்த விடுதலை புலி பயங்கரவாதிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சரவைக்கு அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்தார். இதற்கு கடும் எதிர்ப்புக்கள் விமர்சனங்கள் எழுந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மறுபுறம் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அநுராதபுர சிறையிலுள்ள புலி சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்கிறார். கடும் போக்குடைய புலி சந்தேக நபர்களை எவ்வாறு விடுதலை செய்ய முடியும்-?

எனவே இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு பயங்கரமான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. அது மட்டுமல்ல இலங்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் வடமாகாணசபை முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் வடக்கில் இராணுவத்தினர் போதை பொருட்களை விற்பனை செய்வதாகவும் வடக்கில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகவும் இது தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் எனத் தெரிவிக்கின்றார்.

அது மட்டுமல்லாது வடக்கிலிருந்து இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டுமென்கிறார். ஏன்? எதற்காக? முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்.

அது தான் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு செப்டெம்பர் மாதம் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் மேற்கண்ட கருத்துக்களையும் இணைத்துக் கொள்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள், அமைப்பினர் அவர்கள் வாழும் நாடுகளின் அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க கூடிய விதத்தில் பலம் பெற்றவர்கள் அதிக நிதி, வசதியுடையவர்கள். ஈழக்கனவை கைவிடாதவர்கள். அத்தோடு வெளிநாடுகளும் இந்த தமிழ் அமைப்புக்களின் ஆதரவை எதிர்ப்பார்க்கின்றன.

எனவே புலம் பெயர் தமிழர்கள் அமைப்புக்களை இலேசாக கருதிவிடக்கூடாது. அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் விடுதலைப் புலிகள் தொடர்பான அறிக்கையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் எமது நாடு தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் நாமனைவரும் இணைந்து தேசிய பொறிமுறையை தயாரிப்போம். காலத்தை இனியும் கடத்த வேண்டாம் என்றும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

SHARE