சூதாட்ட சர்ச்சை: மீண்டும் ஆய்வு செய்யப்படும் தண்டனை விவரம்

167
ஐபிஎல் சூதாட்ட வழக்கில், நீதிபதி ஆர்.எம்.லோதா குழுவின் தீர்ப்பு குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிப்பதற்காக, தனியாக குழு அமைக்க ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் போட்டியை தொடர்ந்து சிறப்பாக நடத்து வதற்கான அடுத்த கட்ட நடவடிக் கைகள் குறித்து விவாதிப்பதற் காக ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு நேற்று மும்பையில் கூடி விவாதித்தது.

ஐபிஎல் தலைவர் சுக்லா, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் சவுரவ் கங்குலி, பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகுர், பொருளாளர் அனிருத் சவுத்ரி, தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுந்தர் ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

லோதா குழுவின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பிசிசிஐ, அந்த தீர்ப்பை ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை ஆறு வாரத்துக்குள் தாக்கல் செய்யும் வகையில் தனிக் குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

இப்பரிந்துரைகள், பிசிசிஐ செயற்குழுவுக்கு அனுப்பப்படும், இக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.

ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறும்போது, “ஐபிஎல் 9-வது சீசனில் 8 அணிகள் நிச்சயம் பங்கேற்கும்” என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

SHARE