செட்டிக்குளம் பீடியாபார்ம், மடுக்கரை, தம்பனைக்குளம் கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கின. இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஆனந்தன் எம்.பியும், வடமாகாணசபை உறுப்பினர்களும்.

515
கடும் மழை காரணமாக மல்பத்து ஓயா பெருக்கெடுத்து பாய்வதால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், வவுனியா செட்டிக்குளம் பீடியாபார்ம் மற்றும் மடுக்கரை, தம்பனைக்குளம் கிராமங்களுக்குள் 10 அடிக்கும் மேலாக வெள்ளநீர் புகுந்து அக்கிராமங்கள் முழுதாக வெள்ளத்துள் மூழ்கியுள்ளன.
unnamed (12) unnamed (13) unnamed (14) unnamed (15) unnamed (16)  unnamed (18)
வெள்ளப்பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்து அங்குள்ள மேட்டுநில காட்டுப்பகுதி ஓரமாக தற்காலிக குடில்களை அமைத்து தங்கியுள்ள பீடியாபார்ம் மக்களையும், நானாட்டான் மகாவித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ள மடுக்கரை மக்களையும், சின்ன பன்றிவிரிச்சான், பெரிய பன்றிவிரிச்சான் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ள தம்பனைக்குளம் கிராம மக்களையும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் வைத்தியகலாநிதி சி.சிவமோகன், இ.இந்திரராசா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
1975ம் ஆண்டு படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் 25பேருக்கு செட்டிக்குளம் பீடியாபார்ம் கிராமத்தில் காணிகள் வழங்கப்பட்டிருந்தன. இன்று உபகுடும்பங்கள் எல்லாமாக சேர்த்து 14 குடும்பங்களைச்சேர்ந்த 54பேர் அங்கு வசித்து வருகின்றனர்.
கடந்த நாற்பது ஆண்டு காலமாக இக்கிராமத்துக்கான போக்குவரத்து பாதைகள் அமைத்துக்கொடுக்கப்படாமை, மின்சாரம், வீடு, மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படாமை, காட்டு யானைகளின் தொல்லை, போர்ச்சூழல் என்று பல்வேறு பிரச்சினைகளுக்கும் இடம்பெயராத கிராமத்தலைவர் கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் உட்பட கிராம மக்கள் இன்று பாரிய வெள்ளப்பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்து அங்குள்ள மேட்டுநில காட்டோரங்களில் தற்காலிக குடில்களை அமைத்து குடியிருக்கின்றனர்.
அத்துடன் இம்மக்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியை அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ கையகப்படுத்தியிருப்பதால், அமைச்சர் கையகப்படுத்தியுள்ள தமது காணியை மீள பெற்றுத்தருமாறும், ஏனையவர்களுக்கும் குடியிருப்பதற்கு பொருத்தமான மாற்றுக்காணிகளை வழங்குமாறும் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செட்டிக்குளம் பிரதேசத்தில் வடகாடு, கண்ணாட்டி, கணேசபுரம், துட்டுவாகை கந்தன்குளம் கிராமங்களிலும், மன்னார் சின்ன பன்றிவிரிச்சான், பெரிய பன்றிவிரிச்சான் கிராமங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களையும் நாடாளுமன்ற உறுப்பினரும், மாகாணசபை உறுப்பினர்களும் நேரில் சென்று பார்வையிட்டு அவசர அத்தியாவசிய பொருள்களுக்கு தேவையான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.
வெள்ளநீரால் பெருந்தொகையான வயல்நிலங்களும், மேட்டுநிலப்பயிர்களும் அழிவடைந்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ள ஆனந்தன் எம்.பி, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கும், இடம்பெயர முடியாவிட்டாலும் தொழில்களை இழந்து சேறும் சகதியுமாக உள்ள தற்காலிக கொட்டில்களில் வசித்துவரும் மக்களுக்கும் உலர் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்க அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் மக்களுக்கு நுளம்புவலைகள், பாய்கள், போர்வைகள் உள்ளிட்ட பாதுகாப்பு பராமரிப்பு பொருள்கள் தேவைப்படுவதாகவும் கருணை உள்ளம் கொண்டோரை விரைந்து உதவ முன்வருமாறும் ஆனந்தன் எம்.பி அழைப்பு விடுத்துள்ளார்.
SHARE