செத்த வீட்டு அரசியல் – நடராஜா குருபரன்:-

361

 

செத்த வீட்டு அரசியல் - நடராஜா குருபரன்:-

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் அனைவவரையும் உலுக்கியுள்ளது. அதிர்வுகள் தொடர்கின்றன. உயிருக்கு உயிரானவளின் மரணம் தந்த வலியால் பெற்றவரும் உற்றவரும் துடிக்கின்றனர். முள்ளிவாய்க்காலில் சுமந்த வலியை  நினைவு கூரும் மாதத்தில் மீண்டும் ஒரு துயர் தமிழ் மக்களை சூழ்ந்து கொள்கிறது.

பாடசாலைக்கு காலை புறப்பட்ட வித்தியா மறுநாள் காலை பாழடைந்த வீட்டில் பிணமாக மீண்டாள். வித்தியாவின் கொலைக்கான காரணங்கள் இப்போ வெளிவந்துகொண்டு இருக்கின்றன. வித்தியாவின் படுகொலைக்கு காரணமானவர்கள் எனச் சந்தேகிக்கப் படுபவர்கள் மூவர் கைதாகி உள்ளனர் என இலங்கைப் பொலிசும் கூறுகிறது. வித்தியா இறுதிக் கணங்களில் எதிர்கொண்ட நரக வேதனைகள், கொடூரங்களை வைத்தியசாலையின் பிரேதபரிசோதனை அறிக்கை தெளிவாக்குகிறது.
நான்கு புறமும் கடல் சூழ்ந்துள்ள நம் தீவுகளை அவற்றின் இருப்புகளைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இத்தகைய காட்டுமிராண்டித் தனங்களும் படுகொலைகளும் தமது சமூகத்தில் உள்ளவர்களாலேயே புரியப்படுவது அச்சம் தருவதாக உள்ளது. இச்சம்பவங்கள் பெண்பிள்ளைகளின் இருப்பின் மீதான அச்சங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன.

தேர்தல் காலங்களில் மட்டுமே கமராக்களுக்கு காட்சிகொடுத்துப் பெரும் ஆரவாரத்துடன் அதிகாலையில் படகுகளில் தீவுப்பகுதிக்குப் பயணித்து மாலைக்குள் யாழ்ப்பாணம் திரும்பும் அரசியல் வாதிகள் அம்மக்களில் எவராவது அவலச் சாவடைந்தால் அச்சாவீட்டில் செத்த வீட்டு அரசியல் செய்யப் பறந்தோடிப் போகிறார்கள்.
அதுமட்டுமன்றி வட்டுக் கோட்டைத் தீர்மானகாலத்தில் அன்றைய தலைவர்கள் முழங்கிய வீர வசனங்களை கிளிநொச்சியில் மாணவர்களுக்கு எழுதிக்கொடுத்து இச்சம்பவத்திற்கு எதிர்ப்புச் செய்கையில் முழங்கச் செய்கிறார்கள். அதனை படம்பிடித்து ஊடகங்களில் வெளியிட்டு அரசியல் பிழைப்பு  நடத்துகிறார்கள்.

அர்பணிப்புள்ள, பொறுப்புவாய்ந்த தொலைநோக்குள்ள அரசியல் தெளிவுள்ள தலைமை நம்மிடத்தில் இல்லை. பின் கதவால் அரசாங்கத்துடன் நெருங்கியிருந்து கொண்டு, பாதுகாப்புக்கு பாராளுமன்ற வரப்பிரசாதங்களை தமதாக்கிக் கொண்டு, உணர்வும் துடிப்பும் உள்ள மாணவர்களை வீதியில் இறக்கியிருக்கிறார்கள்.அந்த மாணவர்களோ  மாபெரும் மாணவர் புரட்சி வெடிக்கும்.போராட்டங்கள் வெடிக்கும். என்றெல்லாம் எழுதிக் கொடுத்தவற்றை முழங்குகிறார்கள்.
கடந்த பெப்ரவரி மாதம்  கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட படு கொலை செய்யப்பட்ட கனகராயன்குளம் சிறுமி சரண்யாவின் மரணம், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடந்த ஏப்பிரலில் நிகழ்ந்த வாள்வெட்டு போன்ற சம்பவங்களிலும் எமது அரசியல்வாதிகள் செத்தவீட்டு அரசியல் செயத்தவறவில்லை.

ஒவ்வாரு தடவையும் இப்படி நடக்கும் போது அரசியல் வாதிகளின் வெற்று முழக்கங்கள் ஊடகங்களை நிரப்புகின்றன. வெற்று முழக்கங்கள் அறிக்கைகள் கூட தனியே தமிழில் தான் வெளிவரும். இவற்றை ஆங்கிலத்திலோ சிங்களத்திலோ வெளியிடுவதில்லை. காணம் இவர்களது இரத்தம் கொதிக்கும் முழக்கங்கள் அரசாங்க தரப்பினருக்கோ சர்வதேசத்திற்கோ தெரிய வந்தால் அவர்களது பிழைப்பில் மண் விழுந்து விடும்.

முன்பு ஆளும் தரப்பில் இருந்த தமிழ் அரசியல்வாதிகளும் தற்போது எதிர்த்தரப்பிற்கு வந்தவுடன் இத்தகைய சம்பவங்களில் அறிக்கைப் போரையே செய்கிறார்கள்.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாகவும் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இவர்கள் இருந்த காலத்தில் நடைபெற்ற கொலைகள், பாலியல் வன்முறைகளுக்கு இன்றுவரை தீர்விருக்கிறதா? அப்போதும் இவர்கள் வாயை மூடிக்கொண்டுதானே இருந்தார்கள் இப்போ மட்டும் அரசாங்கத்திற்கும் பொலிஸ்மா அதிபருக்கும் கடிதம் எழுதித் தமது தமிழினப் பற்றை வெளிப்படுத்தலாமென்று நினைக்கிறார்கள்.

யாழ். குடாநாட்டில் நிகழும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் கைதாவோர்களில் அடிதடி, குழுமோதல், கைகலப்பு போன்ற குற்றங்களுக்காக கைதாகுவோரே அதிகம் என்றும் பொலிசார்கூறுகின்றனர்.
2015 இல் பெப்ரவரிக்கும் மார்ச்சுக்கும் இடையில் மட்டும் நூற்றுக்கணக்கான சட்டத்திற்கு முரணான குற்றங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

வித்தியாவின் கொலை உட்பட வடக்கில் இதுவரை பாலியல் வன்முறைகளும், வாள் வெட்டுகளும், சமூக வன்முறைகளும் நடந்தேறி இருக்கின்றன.

இத்தகைய சம்பவங்கள் சமூகப்பிரச்சனைகள். இவற்றுக்கான பொறுப்பு எங்களிடமே பெருமளவுக்கு இருக்கிறது.

வித்தியா உன்மரணம் இறுதியாக இருக்க வேண்டும் என்ற எம் கவனம் எப்படி முதன்மையானதோ அப்படியே இப் பிழைப்பு அரசியல்வாதிகளிடம் சிக்கி இந்த மாணவ சமூகம் சின்னாபின்னமாகக் கூடாது என்ற கவனமும் முதன்மையானது.
இன்று இடம்பெறும் அனைத்து தவறுகளுக்கும் படையினரும், பேரினவாத அரசுமதான் காரணம் எனப் பொத்தாம் பொதுவாக சொல்லுவதே வழமையாகிவிட்டது. தமிழ் அரசியல் என்பது இன்று செத்த வீட்டு அரசியலாகப் போனது… மரணத்தையும், இழப்பையும், காயங்களையும், துயரங்களையும் அரசியலாக்கி கூலிக்கு மாரடிக்கும் இந்த அரசியல்வாதிகளிடம் இருந்து முதலில் மக்கள் விடுதலை பெற வேண்டும்.

கடந்த கால வன்முறைக் கலாசாரமும், திடீர் வெளியுலக இணைப்பால் இளைஞர்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாறங்களும் இத்தகைய பிரச்சனைகளுக்கு காரணமாகஇருக்கக்கூடும்

நம் சமூகத்தில் இருக்கும் குறைபாடுகளுக்கு நிவர்த்தி தேடும் பொறுப்பை எடுத்துக்கொள்ளாமல் இத்தைய சம்பவங்களுக்கு அரசியல்சாயம்பூசி மாணவர்களை வீதியில் இறங்கி கத்தச்  செய்வது  மோசமான  சாவீட்டு அரசியல்.

SHARE