சென்னை 9-வது வெற்றி பெறுமா?: பெங்களூர் அணியுடன் நாளை மோதல்

570

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 41 ஆட்டங்கள் நடந்து முடிந்து உள்ளன. பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக நேற்றும், இன்றும் ஆட்டங்கள் நடத்தப்படவில்லை.

42–வது ஆட்டம் நாளை மாலை 4 மணிக்கு ராஞ்சியில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்– பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி 10 ஆட்டத்தில் 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு (பிளேஆப்) தகுதி பெற்றுவிட்டது.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணி 9–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. சென்னை அணி பேட்டிங்கில் வெய்ன் சுமித், மேக்குல்லம், டோனி, டுபெலிசிஸ், ரெய்னா போன்ற அதிரடி பேட்ஸ் மேன்களும், மொகித்சர்மா, ஜடேஜா, அஸ்வின், ஈஸ்வர் பாண்டே போன்ற பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

பெங்களூர் அணி 10 ஆட்டத்தில் 4 வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் நாளைய ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அந்த அணியில் கெய்ல், கோலி, டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் ஸ்டார்க், முரளிதரன் போன்ற பவுலர்களும் உள்ளனர். இருந்த போதிலும் பலம் வாய்ந்த சென்னை அணியை வெல்ல பெங்களூர் கடுமையாக போராட வேண்டியதிருக்கும்.

கெய்ல் இதுவரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாதது அந்த அணிக்கு பாதிப்பாக இருக்கிறது.

நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்– சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா 10 ஆட்டத்தில் 5 வெற்றியும், ஐதராபாத் 10 ஆட்டத்தில் 4 வெற்றியும் பெற்றுள்ளன.

இரு அணிகளுக்கும் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது கட்டாயமாகும். இதில் வென்றால் மட்டும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

SHARE