செம்மரங்களை வெட்ட வந்தார்கள், சுட்டுக்கொன்றார்கள். இதில் என்ன தவறு?

310

 

நடந்தது என்ன? – ஐ விட்னஸ் சேகர் பேட்டி

நடந்தது என்ன? – ஐ விட்னஸ் சேகர் பேட்டி

கடந்த 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலைப் பொழுது.. கர்ணகொடூரமாகத்தான் விடிந்திருக்க வேண்டும், அந்த 20 குடும்பங்களுக்கும்..!

செடிகொடிகள், சிறு விலங்குகளை வதைத்தால் கூட குய்யோமுறையோ எனக் கூப்பாடு போடும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், இருபது மனிதர்களை வேட்டையாடியதைப் போலக் கொன்று போட்டிருக்கிறது, ஆந்திர மாநில தனி ஆயுதப் படை.

அன்று காலை 9மணியளவில் தொலைக்காட்சிகளில் எரியும் செய்தியாக.. பார்க்கும் எல்லாரையும் கொதிக்க வைத்தது, ’செம்மரம் வெட்டிய தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் என்கவுன்ட்டரில் பலி”’என்ற ஆந்திர டி.ஐ.ஜி. தகவல்.

செம்மரம் வெட்டிக் கடத்தியவர்களை சுற்றிவளைத்துப் பிடிக்கத் திட்டமிட்டோம். அவர்கள் 150 பேர். நாங்கள் 24 பேர்தான். எங்களைக் கல்வீசித் தாக்கினார்கள். பௌர்ணமி வெளிச்சத்தில் யார் யார் தாக்கியது எனத் தெரிந்ததால், அவர்களைச் சுட்டோம். அதில் இறந்து போனார்கள்” என சர்வசாதாரணமாகச் சொன்னார், ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி. காந்தாராவ்.

தகவலையடுத்து தாக்குதல் நடந்ததாகச் சொல்லப்பட்ட பகுதிக்குச் சென்றோம். திருப்பதியிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது சீனுவாச மங்களாபுரம். இங்கிருந்து 7 கி.மீ. தொலைவில் இருப்பதுதான் சிறீமொட்டு. ( திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்துசெல்லும் பாதையில் இருக்கிறது)

சீனுவாசமங்களாபுரத்தில் இருந்து சிறீமொட்டுக்குச் செல்லும் வழியில் மூன்றாவது கி.மீட்டரில் பாதையிலிருந்து விலகி, காட்டுக்குள் 3 கிலோமீட்டரில் சச்சினவபண்டா என்ற பகுதியில், 11 பேர் சடலமாகக் கிடந்தனர். அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் ஈத்தகாயபண்டா என்ற பகுதியில் 9 பேர் கொல்லப்பட்டு உருட்டிவிட்டதைப் போலக் கிடந்தனர்.

ஒவ்வொருவரின் அருகிலும் செம்மரக்கட்டைகள் கிடந்தன. அந்தக் கட்டைகளில் ஒன்றைக்கூட, ஒரே ஆளால் தூக்க முடியாது. மேலும், சிவப்புமையால் காவல்நிலையக் குற்றஎண்கள் எழுதப்பட்டும், செதுக்கப்பட்டும் இருந்தன. அதாவது, செம்மரத்திலிருந்து அந்தக் கட்டைகள், வெட்டி எடுக்கப்பட்டு, மூன்று மாதங்களாவது இருக்கவேண்டும்.

மோதல் இடத்தில்’ இருந்து 7 கி.மீ. சுற்றளவுக்கு எந்த இடத்திலும் ஒரு செம்மரத்தைக்கூட நம்மால் பார்க்க முடியவில்லை. மேலும், அது அடர்ந்த வனப் பகுதியும் இல்லை. சிறுசிறு மரங்கள், புதர்கள் அதிகமாக இருக்கின்றன. ஆந்திரப் போலீஸ் சொல்வதைப் போல, ஓடும்போது சுட்டிருந்தால் கொல்லப்பட்டவர்கள் விழும் நிலை, வேறுமாதிரியாகத்தான் இருந்திருக்கும்.

அந்த உடல்கள் கிடந்தநிலையைப் பார்க்கும் போது, வேறு எங்கோதான் 20 பேரையும் சுட்டு, இங்கு கொண்டுவந்திருக்க முடியும் என்பதை உறுதியாகச் சொல்லும்படி இருந்தது.

செய்தியாளர்களின் நேரடித் தகவலை அடுத்து, தமிழக செய்தி ஊடகங்கள் மட்டுமின்றி, ஆந்திர ஊடகங்களும் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்றன. அனைத்து கட்சிகளும் கண்டனக்குரல் எழுப்பின. வேலூர், சென்னை உட்பட நாடெங்கும் பல இடங்களில் 20 பேர் படுகொலையைக் கண்டித்து, மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன.

ஆந்திர மாநிலப் பேருந்துகள் மீது கல்வீச்சும் நடந்தது. உடனே, தமிழகத்துக்குள் வரும் ஆந்திரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மாநிலத்தின் பல இடங்களில் ஆந்திரம் தொடர்புடைய பல தனியார் நிறுவனங்கள் முன்பாக, போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசினார், மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங். இரண்டு வாரங்களில் விளக்கம் தர உத்தரவிட்டது தேசிய மனித உரிமை ஆணையம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையில், சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரின் உடல்களும் ஏழாம் தேதி இரவு, திருப்பதி வெங்கடேசுவரா ராமநாராயண் ரூயா அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டன. அதற்கு முன்பிருந்தே, செய்தியாளர்களை சடலக்கிடங்குப் பக்கமே விடவில்லை. மறுநாள் 8-ம் தேதி பிற்பகலில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.

தமிழகத்திலிருந்து “மனித உரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம்’ சார்பில் உண்மை அறியும் குழுவாக வந்த மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம், “”திட்டமிட்டு சுட்டுக்கொன்று விட்டு என்கவுன்ட்டர் என நாடகமாடுவதை நிரூபிப்போம்” என்றார் நம்மிடம்.

கொல்லப்பட்ட முருகாபாடியைச் சேர்ந்த முனுசாமியின் தாயார் பத்மா நம்மிடம், ’’வேலைக்குப் போய்ட்டு வர்றன்னு சொன்னான். இப்படி அநியாயமா சுட்டுப் போட்டுட்டாங்களே.. அவுங்க நல்லாயிருப்பாங்களா.. மண்ணாப் போவ, நாசமாப் போவ” என வயிறெரிந்து சொன்னார்.

கொலைசெய்யப்பட்டவரான வேட்னகிரி பாளையம் பெருமாளின் அக்கா லட்சுமி, ’ஊர்ல வந்து போட்டோவ போலீஸ் காட்டுனப்பதான் சுட்டுக்கொன்னதே தெரியும். வேலையில்லாம இருந்தவங்கள, வேலைக்குக் கூப்புட்டாங்களேன்னு கௌம்பி வந்தாங்க.

பெழைப்புக்கு வந்தவங்கள, மரம் வெட்ட வந்தாங்கன்னு சுட்டுக் கொன்னுட்டாங்களே.. நியாயமாய்யா..?” என வெடிக்கும் அழுகையுடன் கேட்க.. அவருக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திகைத்து நின்றோம்.

அனந்தபுரத்தைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் மூர்த்தி, கருணாகரன் இருவரும் நம்மிடம், “எங்க ஊர்ல யிருந்து வேலைக்கு வாங்கன்னு 8 பேரை கூப்புட்டுப் போயிருக்காங்க. திங்கக்கிழமை காலையில நகரி பக்கத்துல ஆந்திரா போலீசு பஸ்ச நிறுத்தி, விசாரிக்கணும்னு 7 பேரை பஸ்ச விட்டு இறக்கியிருக்கு.

அதுல 50 வயசு சேகர் மட்டும், பொம்பள சீட்டுல உட்கார்ந்து இருந்ததால, சாமி கும்பிடபோறாருன்னு நினைச்சி, அவரை உட்டுட்டாங்க. அவரு ஊருக்குவந்து சொல்லவும்தான் ஆந்திரா போலீஸ் புடிச்சிக்கினு போச்சின்னு தெரிஞ்சது. அந்த குடும்பத்து ஆளுங்க, பெயில் எடுக்கப் போறாங்கனு நினைச்சிக்கிட்டு இருந்தோம்.

மறுநாளு என்கவுன்ட்டர் பண்ணிட்டாங்கன்னு செய்தியில பாத்தோம். போலீஸ் வந்து போட்டோவக் காட்டுனதும் அதிர்ச்சியாப் போச்சி. மரம் கடத்தறவன், கூப்புட்டுப் போறவனை வுட்டுட்டு கூலித் தொழிலாளிங்களைப் பிடிச்சி சுட்றது என்னாங்க நியாயம்?”’என நியாயம் கேட்டனர்.

மாலை 5 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், தமிழகத்தின் வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா ஆகியோர் வந்து, சித்தூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த்ஜெயினிடம் விவரங்களைக் கேட்டறிந்தனர். அவர்கள் வரவும், 20 பேரின் சடலக்கூறாய்வு முடியவும் சரியாக இருந்தது.

ஆனால், சடலங்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் வராமல் இருந்தனர். முதலில் திருவண்ணாமலை கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த 7 பேரின் குடும்பத்தினரே வந்தனர். ஏழு ஆம்புலன்சு வண்டிகளில் சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இரவு 7 மணிவாக்கில்தான் போளூர் பகுதியைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் வந்தனர். காரணம், ஏற்கனவே இந்தப் பகுதியிலிருந்து வந்து ஆந்திரப் போலீசால் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைப் பெறச் சென்ற உறவினர்களையும், வழக்கில் சிக்கவைத்து, சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

தாமதத்தை அடுத்து, உதவி மையம் அமைக்கப்பட்டு, திருப்பதி தாசில்தார் மூலம், தமிழ் ஊடகங்களுக்கு மட்டும் தனி அழைப்பு விடுக்கப்பட்டு, சடலங்களைப் பெற வருவோர் பயப்படவேண்டாம் என அறிவிப்பு செய்யப்பட்டது.

பிறகுதான் போளூர் நம்மியம்பட்டுக்காரர்கள் வந்து சடலங்களைப் பெற்றுக் கொண்டனர். பிறகு, தருமபுரி, சேலம் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சடலங்களைப் பெற்றுக்கொண்டனர். சடலங்களை அனுப்பிமுடிக்க 9-ம் தேதி அதிகாலை 3.15 மணி ஆனது.

ஆந்திரத்தில் நேசக்குரல்!

தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திரத்திலும் அரசியல் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தன. ஆந்திர சி.பி.எம். மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தனித் தனியாக, சந்திரபாபு நாயுடுவைக் கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான மகேந்திரனை, படுகொலை நடந்ததாகச் சொல்லப்படும் செவ்வாய்க்கு முந்தைய நாளன்று, ஆந்திரப் போலீசார் பிடித்துச் செல்லும் போது உடனிருந்த சாட்சியான அர்ஜூனாபுரம் புதூரைச் சேர்ந்த சேகரை, நீண்ட முயற்சிக்குப் பிறகு பிடித்தோம்.

படபடப்பு குறையாமல் நம்மிடம் பேசத் தொடங்கியவர், “”எனக்கு அர்ஜூனாபுரம் புதூருங்க. போன திங்கக்கெழமை பக்கத்து வூட்டுப் பையன் மகேந்திரன், மேஸ்திரி வேலைக்குப் போலாமுன்னு இட்டுகினு போனான்.

எங்க ஊருல இருந்து கௌம்பி.. படவேடு.. வேலூர்.. ஆற்காடு.. வழியா திருத்தணிக்குப் போனோம். அங்க இருந்து ஆந்திரா பஸ்சுல ஏறுனோம். நாங்க டைவருக்குப் பின்னால மூணாவது சீட்டுல உக்காந்திருந்தம். ஜன்னல் ஓரமா மகேந்திரனும், நடுவுல நானும், ஓரத்துல ஒரு பொம்பளையாளுமா உக்காந்திருந்தம்.

திருத்தணியில இருந்து முக்கா மணி நேரப் பயணத்துல.. திடீர்னு பஸ்ச நிறுத்தி, யாரோ வந்து, மகேந்திரன்கிட்ட.. நீ எறங்குனாங்க.. நானும் யாரோ தெரிஞ்சவங்க கூப்பிடச் சொல்லத்தான் அவனும் போறான்னு வுட்டுட்டன்.. எனக்குப் படிக்கத் தெரியாது.. அடுத்த எடத்துல எறங்கி, மறுக்கா திருத்தணிக்கா பஸ் புடிச்சு வந்துட்டன்.

ஆற்காடு.. வேலூர் வழியா கண்ணமங்கலம் வந்து.. அங்கயிருந்து நடந்தே(12 கிமீ) ஊருக்குப் போனேன். ஊருல போய் தகவல் சொல்லவும்.. மறுநாளுக்கா லோக்கல் போலீசு வந்து, மகேந்திரன சுட்டுக்கொன்னதா படத்தக் காட்டுனதும்.. என்னால அதப் பாக்கமுடியாம மயங்கி வுழுந்துட்டன்.. ஊருல இருந்தா மேக்கொண்டு பிரச்சினை வந்துருமோனு பயமா இருக்க.. அங்கயிருந்து கௌம்பிட்டன்..”’என்றார் 55 வயதான சேகர்.

என்ன நடந்தது?

திருப்பதி முன்னாள் எம்.பி. காங்கிரசின் சிந்தாமோகன் நம்மிடம், “”திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைகள் இவை. குடோன்களில் இருந்து எடுத்துவந்து செம்மரங்களைப் போட்டுள்ளனர். அந்த கட்டைகளின் மீது எழுதப்பட்டிருந்த வழக்கு எண்கள், செதுக்கி எடுக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்கள் எல்லாரும் 500 மீட்டர் சுற்றளவுக்குள் விழுந்து கிடக்கின்றனர். போலீஸ் முட்டிக்குக் கீழேதானே சுடவேண்டும். ஏன் தலையில் சுட்டார்கள்? இது பற்றி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தவேண்டும்”’என்றார்.

ஆந்திரா மாநில மனித உரிமைக் கழகம் அமைப்பின் தலைவர் கிராந்திசைதன்யா, “”சுடப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தில் இரத்தகறையே இல்லை. இறந்தவர்களின் உடல்களில் இருந்து இரத்தமும் வெளியே வந்திருக்கவில்லை. திட்டம்போட்டு கூலித் தொழிலாளிகளைச் சுட்டுத் தள்ளியிருக்கிறது, போலீஸ்.

அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் இப்படி செய்ய வாய்ப்பில்லை. கை, கால்களைக் கட்டி வைத்துச் சுட்டுள்ளனர். மோதலில் சுட்டுக் கொன்றார்கள் என்றால், அடிபட்ட காவல்துறையினர் எங்கே?” என சந்தேகங்களையும் கேள்விகளையும் அடுக்கினார்.

ஆனால், தெலுங்குதேசக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காலிமுத்து கிருஷ்ணம நாயுடு, ’”என்.டி.ராமாராவ் ஆட்சிக் காலத்தில் செம்மர விதைகளைத் தூவி, அதை வளர்த்தோம். அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு தெலுங்குதேசக் கட்சிக்குதான் உண்டு.

செம்மரங்களை வெட்ட வந்தார்கள், சுட்டுக்கொன்றார்கள். இதில் என்ன தவறு? எங்கள் சொத்தை நாங்கள் பாதுகாக்கிறோம். தமிழகத்தில் ஆந்திரத் தொழிலாளர்கள் தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். சட்டப்படி நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தில் அடைத்தால் வெளியே வந்து மீண்டும் அதேதொழிலைச் செய்கிறார்கள். மரம் வெட்டவந்து, தடுத்த அதிகாரிகளைத் தாக்கியும் இருக்கிறார்கள். அதனால் சுட்டார்கள், இதில் தவறே இல்லை”’என்றார் வெறித்தனமாக.

இந்த சூழலில், படுகொலைகள் குறித்து சித்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்சந்தர் விசாரணை நடத்துவார் என சித்தூர் கலெக்டர் சித்தார்த்ஜெயின் அறிவித்தார். ஆந்திர மாநில போலீஸ் அதிகாரிகள் சொல்வதை மீறி, ஆந்திர அரசின் இன்னொரு அதிகாரி என்ன விசாரணை நடத்துவார்; என்னவென்று அறிக்கை கொடுப்பார் என்பது ஊகிக்கக் கூடியதுதானே!

ஆந்திரம் மற்றும் தமிழக வனம், காவல்துறையினர் உட்பட பல தரப்பினரிடமும் புலனாய்வு செய்ததில், இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட, அப்பட்டமான படுகொலை என முடிவுக்கு வரமுடிகிறது.

அதாவது, ஆந்திர போலீஸ் டி.ஐ.ஜி.யின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடந்த என்கவுன்ட்டரில் 20 பேரும் பலியானார்கள் என்பது நம்பும்படியாக இல்லை என்பது உறுதி. அடுத்து, சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்காரர்கள் என அதே டி.ஐ.ஜி. எந்த விவரமும் இல்லாமல் மொட்டையாக அறிவிப்பு செய்கிறார். ’சம்பவ இடங்கள் இரண்டு; அந்த இடங்களுக்குப் போய், தமிழ்நாட்டுக்காரர்கள்தான் என அவரால் சில மணி நேரங்களுக்குள்ளேயே உறுதிப்படுத்த முடிவது எப்படி சாத்தியமோ?

அடுத்து, செவ்வாய்க்கிழமையன்று தமிழக அதிகாரிகளுக்கு ஆந்திரப் போலீஸ் தரப்பிலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் படங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்தப் படங்களை வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட தமிழக போலீசாரும், சரியாக கொல்லப்பட்டவர்களின் ஊர்களுக்கு மட்டும் போய், இறந்து போனவர் இன்ன ஊர்க்காரர்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

கவனியுங்கள், தமிழகத்தைச் சேர்ந்த ஆந்திர எல்லையோரத்தைச் சேர்ந்த பல மாவட்டங்களுக்கும் ஆந்திரப் போலீசின் தகவல்கள் அனுப்பப்பட்டதா? அப்படி அனுப்பப்பட்டிருந்தால் ஏன் அவற்றை தமிழக ஊடகங்களுக்கு தமிழக போலீஸ் தரப்பில் சொல்லவில்லை?

ஏற்கனவே இது போன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களும் கொல்லப்பட்டவர்களும் இருக்கும் வேலூர் மாவட்டத்துக்கு ஆந்திர போலீஸ் தகவல் அனுப்பியதா? அது பற்றி உள்ளூர் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டதா? குறைந்தபட்சம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலோ மாவட்ட போலீஸ் சார்பிலோ பொது அறிவித்தல் வெளியிடப்பட்டதா? – இந்தக் கேள்விகளுக்குப் பதிலே இல்லை! இருந்தால்தானே வர முடியும்!

ஏனென்றால், கொல்லப்பட்டவர்களின் கிராமம் அடங்கிய போலீஸ் சரகத்தினர், அந்தந்த சரகம் முழுதும் உள்ள எல்லா கிராமங்களிலும் தேடாமல், குறிப்பிட்ட ஊரில் மட்டுமே போய் போட்டோவைக் காட்டியுள்ளதன் மர்மம் இது தான்!

அதாவது, திங்கட்கிழமையும் அதற்கு முன்னரும் கைதுசெய்யப்பட்டு, வேறெங்கோ கொல்லப்பட்டு, சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட 2 இடங்களில் போடப்பட்டிருக்க வேண்டும் என்று அடித்துச் சொல்கிறார்கள், தடயவியல் நிபுணர்கள்.

SHARE