செல்லக்கிளி அம்மானின் வீர வரலாறு.

205

 

செல்லக்கிளி அம்மானின் வீர வரலாறு.

இவனுக்கு சில அசாத்திய திறமையுண்டு. சிறீலங்கா இராணுவத் தளபதி கென்சில் கொப்பேகடுவாவின் வாகனத்தில் அவருடன் எந்த சஞ்சலமுமின்றிப் பயணம் செய்தவன். இவனைத் தெரிந்த மக்களெல்லாம் ஐயோ! எங்கட செல்லக்கிளி பிடிபட்டுப்போனான் என்று பதறினார்கள். ஆனால் அடுத்த சில மணித் துளியில் தன் ஈருறுளியில் வலம் வருவான். விசயம் அறிந்த நான் பதறிப்போய்த் தேடினால் , என்ன அண்ணை அறிஞ்சிட்டியல் போல என்று அவனின் அம்மான் தமிழில்.. அதே புன்சிரிப்பு..

என்னம்மான் நடந்தது அவங்கிட வானில போனீங்களாம்.. ஓம்அண்ணை நேற்று இவள் தங்கச்சியைப் பார்க்கப் போனனேன். அப்பையா அண்ணையும் வந்தவர். அவளும் எங்களைக் கண்டுட்டு கோழிக்கறி சமைச்சவள் சரி இண்டைக்குப் பகல் அவளோட நிண்டுட்டுப் போவம் என்று நினைக்க அப்பையா அண்ணை சொன்னார். வேண்டாம் அம்மான் இரண்டு பேரும் ஒண்டா நிக்கக் கூடாது.நீ நிண்டுட்டு வா! சில அலுவல் கிடக்குதுதானே நான் தனியாப் பார்க்கிறேன் என்று வெளிக்கிடப் போனார். அவரைத்தான் நாங்க தனியா விடுறதில்லைத்தானே. எங்கா ஏதாவது எண்டா கிடக்கிறதால வைச்சுட்டு வந்திடுவார்;

.(அப்பையா அண்ணையை மூத்த உறுப்பினர்கள் பயங்கரவாதி என்றே செல்லமாக அழைப்பர்) இரண்டு பேரும் ஒண்டா நிண்டா இரண்டு பேருக்கும் பிரச்சனை , அவரைத் தனியாவிட்ட எனக்குப் பிரச்சனை. வேறவழியில்லை நீ சமை பிள்ளை சுணங்கிவாரன் என்று தங்கச்சியிற்ரச் சொல்லிப் போட்டு அவரையும் கூட்டிக்கொண்டுபோய் அலுவலை முடிச்சுப் போட்டு அறையில அவரை விட்டுட்டு திரும்பத் தங்கச்சியிற்ற வந்து சாப்பிட நாலுமணியாயிற்றுது. ஆறு மணிக்குத் திரும்பவும் வெளிக்கிட்டுட்டன்.

அப்பையா அண்ணை என்னைக் காணேலை எண்டு திரும்பவும் தங்கச்சி வீட்டடிக்கு வந்திட்டார். அவர் அக்காட்டச் சாப்பிட்டாராம்.பிறகென்ன உடனை வெளிக்கிட்டிட்டம். நான் முன்னுக்கு அப்பையா அண்ணை வழமை போல பின்னுக்கு. முத்திரச்சந்திக்கக் கிட்டவர அப்பாவை (மாஸ்ரரைக்) கண்டுட்டன். ஏத்திக்கொண்டுபோய் வீட்டவிடுவமென்றால் பரவாயில் தம்பி நான் நடந்து போறன். நீங்க பாத்துப்போங்கோ கவனம் என்றார்.

எனக்கு அதுக்குப் பிறகுதான் யோசினை வந்தது இண்டைக்கு எங்கட இடத்தில கனநேரம் மினக்கட்டுட்டம் என்று. தம்பி அறிஞ்சால் பேச்சுத்தான் விழும் என்ற யோசனையில வேகமாய் வீட்ட போய்ட்டம். இண்டைக்குக் காலமை இஞ்ச ஒரு வேலையிருந்தது. முத்திரைச் சந்திக்கிக் கிட்ட வர மனதுக்க ஏதோ மாதிரி இருந்தது. அப்பிடியே இனிப்புக் கொம்பனி தாண்ட திரும்பு எண்டு மனம் சொல்லிச்சு, அப்பையாண்ணை நாங்க நாளைக்கு இஞ்சவருவம் இப்பபோவம் என்றன். அவரும் ஏனம்மான் வேணுமெண்டால் நான் இதில நிக்கிறன் நீ போய் எடுத்துக் கொண்டுவா என்று ஐமுனா வீதியில நிண்டுட்டார். சரி அண்ணை ஏதாவது பிரச்சனை எண்டால் இப்படியே நேராய்ப் போனால் நாயன்மார்கட்டு வரும் அப்பிடியே சுத்திக் கொண்டு வீட்டபோய்டுங்கோ என்று சொல்லிற்ரு ஒருமிதி மிதிக்கிறன்
பின்னால ஒரு ஜீப் வருகுது சைக்கிலை கொஞ்சம் வேகமாக மிதிச்சு சட்டநாதர் கோவிலடிக்கு வந்திட்டன், அப்பிடியே சட்டநாதர் வீதிக்குச் சைக்கிலைத் திருப்ப ஜீப்பும் கிட்டவா வந்து எனக்குப் பின்னால திரும்பிச்சுது. அப்பத்தான் கண்டன் கொஞ்சத்தூரத்தில றக்கும் வருகுது. ஏதோ ஆபத்து எண்டுயோசிச்ச உடனே உசாராகிட்டன். நேரப்போனா ஆடியபாதம் வீதியால மிதக்கலாம். ஆனா நேர்றோட், தங்கச்சி வீட்டு ஒழுங்கையால திருப்பினா செங்குந்தாப் பள்ளிகூடம் உள்ளுக்கு கனஒழுங்கை இருக்கு மாமாக்குத் தண்ணி காட்டலாம்.எண்டு நினைச்சுக் கொண்டு அந்த ஒழுங்கைக்க திருப்ப அட அவனும் அதுக்கதான் திருப்பினான். ஜீப் என்னை முந்திக் கொண்டு போய் தங்கச்சி விட்டுக்கு முன்னால திடீரெண்டு பிறேக்கடிச்சு நிண்டுது. இப்ப முன்னுக்கு ஜீப் ஆறுபேர் இருக்கிறாங்க பின்னால றக் ஒம்பதுபேர் நடுவில நான், இருக்கிறது றீட்டா (கைத்துவக்கு) மட்டும்தான். யோசிக்க நேரமில்லை றக்கும் அப்பிடியே நிண்டுட்டுது. நானும் சைக்கிலை விட்டுட்டு இறங்கினேன். மூண்டுபேர் தங்கச்சி வீட்டுக்கை போனாங்கள் வெளியில நிக்கிறதில ஒருவாட்டசாட்டமானவன் டேய் இஞ்சவா என்று கூப்பிட்டான். சைக்கிலை அப்படியே பக்கத்து வீட்டு வேலியில சாத்திப்போட்டு கிட்டப்போனன்.

என்னை யாரெண்டு தெரியவில்லை போல எண்டு மனம் சொல்லிச்சு அவன் கிட்ட வந்து கையில பிடிச்சு இது யார் வீடு தெரியுமா என்று கேட்டான். நானும் தெரியும் என்று தங்கச்சியின்ர பேரைச் சொன்னேன். அவனும் இல்லை புலி வீடு செல்லக்கிளியின்ர வீடு எண்டான். அவனுக்கு எல்லாம் தெரியுது செல்லக்கிளியை மட்டும் தெரியல என்பது உறுதியாச்சு, நேற்று கோழிக்கறியும் சோறும் சாப்பிட்டிருக்கிறான் எண்டான். எனக்கு கோழிக்கறி மட்டுமில்ல காலமை சாப்பிட்ட புட்டும் செமிச்சுட்டுது. என்னால நம்பமுடியல எப்படி இவனுக்கத் தெரியும். யோசிக்கநேரமில்லை, இதுக்குள்ள உள்ளுக்குப் போனவங்கள் தங்கச்சியை வெருட்டிக் கேக்குது. அவளும் அழுது அவன் வரேல என்று சொல்லுறாள். அவள் வெளியில வந்தால்.. நான் பிடிபட்டுட்டன் என்று நினைத்து அவளும் ஏதும் மாறிக்கீறிச் சொன்னால் எல்லாம் பிழைச்சுடும். எண்டு யோசிச்சுக் கொண்டு அவன்ர கையை மெல்லத் தட்டிப் போட்டு உள்ள போனா.. அவளக்கு ஒரே அதிர்ச்சி அவளும் அண்ணை என்று வாயெடுக்க அவளைக் கதைக்கவிடாம உனக்கேன் தேவையில்லாத வேலை அவன் வந்தா கலைச்சு விடு ஏன் கோழிக்கறி வைச்சுக் கொடுக்கிறாய். கோழிக்கறியே! எண்டவள் அழத்தொடங்கினாள். எனக்குத் தெரியுமோ இந்த ஐயா தான் சொன்னார் என்று நான் சொன்ன உடன் அவள் முகத்தில் அழுகையுடன் கூடிய கோபம் தெரிந்தது. அந்தப் பெரியவன் தங்கச்சி முகத்தையும் என்ர முகத்தையும் பார்த்திட்டு நீ அவளின்ர அண்ணாவா என்றான். பொய் கூடாது அவனிடம் இருக்கும் தகவல்களை உண்மையாக்கினால் சரி எண்டுபட்டுது. ஓம் அண்ணா முறைதான் எண்டன். சரி தங்கச்சி நாங்க போயிற்றுவாறம் .எண்டவன் என்னை விடுறமாதிரித் தெரியல உனக்குச் செல்லக்கிளியைத் தெரியுமா எண்டுகேட்டான். அவன் சின்னப் பொடியன் இப்ப கனநாளாய்க் காணோல என்றன். இல்லை அவன் பெரியஆள் எங்கட பஸ்தியாம்பிள்ளை மாத்தையாவைச் சுட்டவன். அவன் எங்கட இருநூறு ஆமிக்குச்சரி என்றவன்,அவனும் இப்ப எங்கயிருப்பான் ஆர்வீட்டுக் கெல்லாம் போவான் என்று எல்லாம் கேட்டான்.

அவனிடம் பொய் சொன்னால் என்னில சந்தேகம் வந்திடும். அவனுக்கச் சந்தேகம் வராத மாதிரி நான்போற எல்லா வீட்டுக்கும் கூட்டிக் கொண்டு போனேன். இடையில நான் அவசரப்பட்ட மாதிரி ஐயா நான் வேலைக்குப் போகவேண்டும் எண்டன் .என்ன வேலை செய்யிறாய் எண்டான். நானும் மேசன் வேலை எண்டன். பிறகென்ன அண்ணை எனக்கு றக்கு பின்னக்குக் காவல் ஜீப்பில றைவருக்குப் பக்கத்தில நான் எனக்குப் பக்கத்தில அந்தப் பெரியவன், பின்னுக்கு நாலு பேர் நல்ல காவல் எனக்கு. இவங்களுக்கு எப்படித் தண்ணி காட்டுறது எண்டயோசனைதான் அரைவாசிக் கல்வியங்காடு சுத்தியாச்சு எங்கடசொந்தக்காரர் வீடெல்லாம் காட்டி செல்லக்கிளி வந்தவனே என்று கேட்டு ஒரே அட்டகாசம்.சனத்துக்கு ஒண்டும் விளங்கேல. ஏன் எனக்கும் விளங்கேலத்தான். குப்பி மட்டும் கையுக்ககிடக்குது. ஒரு வீட்டிலும் அவங்கதேடின செல்லக்கிளி இல்லை. பிறகு நான் வேலைக்குப் போகோணும் என்டன். அவனும் எங்கை எண்டு சொல்லு நாங்கவிடுறம் எண்டான். இல்லை நான் சைக்கில் எடுக்கோணும் என்றன் ஜீப்பைத்திருப்பிச் சட்டநாதர் கோவில் வீதியில நிப்பாட்டினான்.
உனக்கு ஒருநாளக்குச் சம்பளம் என்ன என்று கேட்டான். நானும் சும்மா 300 ரூபா எண்டன். அவனும் மாதம் 3000 ரூபா சம்பளம் தாரன் ஒருவேலை செய்வியா எண்டான். நானும் என்னவேலை எண்டன். அவனும் நீ எங்களுக்கு செல்லக்கிளியை காட்டித்தரவேண்டும். உனக்கு எல்லாம் நாங்கள் செய்வோம் எண்டான். நானும் ஐயோ எனக்கப் பயமாயிருக்கு புலியாள் சுட்டுப்போடுவாங்கள் எண்டன். அவனும் நீ பயப்படதே உனக்கு ரிவோல்வரும் தருவோம் சுடப்பழக்குவோம் என்னும் காசுதருவோம் எண்டான். எனக்குப் பயமாய்தான் இருக்கு…. எண்டு இழுத்தேன் அவனும் விடுறமாதிரி இல்லை..நான் யோசிச்சுப் போட்டு பிறகு சொல்லுறன் எண்டன். அப்ப பிறகு சந்திப்பியா எண்டான். நானும் எங்க உங்களைப் பார்க்கிறது. உங்கடபெயர் என்ன என்று கேட்க அவனும் நான்தான் கொபேகடுவா நீ குருநகர் காம்பிற்கு வந்தா என்னைக் காணலாம் எண்டான்.

நானும் அப்ப இந்தக் கோழிக்கறி சாப்பிட்ட விசையம் எப்படித் தெரியும் எண்டன். அவனும் உன்ர அண்ணாதான் சொன்னவன் அவனும் என்ர ஆள்தான் ஆனா ஒண்டும் பெரிசா செய்யிறான் இல்லை. அவனுக்குச் செல்லக்கிளியைக் கண்டால் பயமாம். அவனோட பிராபாகரனும் திரியிறதால ஒண்டும் செய்யமுடியாது எண்டு சொல்லுறான். நீதான் எங்களுக்குக் கெல்ப் பண்ணணும் என்றான். நானும் ஞாயிற்றுக்கிழமை வந்து சந்திக்கிறேன் எண்டாப்பிறகுதான் என்னை விட்டான். நான் றோட்டைக்கடந்து ஒழுங்கைக்க போக அவன்களும் வெளிக்கிட்டு முத்திரச்சந்தைப் பக்கமாய் போனாங்கள். நானும் நல்ல தொருபெருமூச்சு விட்டுட்டு ஓடிப்போய் சைக்கிலை எடுத்துக் கொண்டு கொழுவியிருந்த பையை தடவிப் பார்த்தேன் என்ர ரீட்டா(கைத்துவக்கு) அப்படியே இருந்தது. தங்கச்சி வீட்டைபோக அவளும் அழுது கொண்டு வந்தாள். பிரச்சனை ஒண்டுமில்லை! யாருக்கும் ஒண்டும் சொல்லாதே! யாருக்கு நான்வந்து போன விசயம் சொன்னனீ எண்டு கேட்க அவளும் பின்னேரம் செட்டிப் பெரியண்ணைதான் வந்தது. உன்னைக் காணோணும் என்றது. அதுதான் நீ மத்தியானம் வந்தனீ எண்டு சொன்னனான் எண்டாள். இனிப் பார் யாருக்கும் எதுவும் வேண்டாம். எதுவும் சொல்லவும் வேண்டாம். அவங்களுக்கு என்னைத் தெரியாது அதால சும்மா சுத்திக்காட்டி ஏமாத்திப்போட்டு தப்பீற்றன் என்று சொல்லிப் போட்டு இனிநான் இப்போதைக்கு வரமாட்டன் என்று சொல்லிப் போட்டு வந்திட்டன். இனி என்னும் கவனமாயிருக்கோணும்.
சரி இனி ஏதாவது விசயம்எண்டால் நான் வந்து சொல்றன் நீங்க வரவேண்டாம் அம்மான் என்று சொல்லத்தான் ஞாபகம் வந்ததால கேட்டேன் எங்கே அப்பையா அண்ணை என்று. அங்கபாருங்க அண்ணை ஐமுனாவீதி முடக்கில வெனியனோடு ஒருவர் இருக்கிறார். அது அவர்தான் எனக்கு ஏதோ நடந்திடப் போகுது என்ற கவலையோட வெய்யிலில இருக்கிறார்.
ஐயோ பாவம்! அந்த உறவு நிலையை எப்படிச் சொல்வது. எங்எங்கோ பிறந்து ஏதோ ஓரு உணர்வு இவர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. ஆம் தமிழர் தேசியம், தமிழர் தேசவிடுதலை என்னும் நேர்கோட்டில் சந்தித்தவர்கள். இவர்களின் உறவு நிலையில் அப்பையா அண்ணை தந்தையாய், மாமனாய் மூத்தவர், அம்மானாய், தம்பியாய், அண்ணணாய் எப்படிச் சொல்வது ஒருவருக்கு ஏதோ என்றால் எரிமலையாய் வெடிப்பார்கள் . இவர்கள் இலட்சியத்தீயில் நீச்சலடிக்கும் அக்கினிக்குஞ்சுகள்.
கண்கண்டதை கைசெய்யும் வல்லமை படைத்த அம்மானின் இச்சம்பவம் சிறீலங்கா இராணுவத்தை அவர்கள் பாதையில் போய் ஏமாற்றியது மட்டுமல்ல செட்டியின் காட்டிக் கொடுப்பையும் உறுதிசெய்த சம்பவம். ஆம்! செட்டியுடன் என்னும் ஒருவரை தம் உளவாளியாக மாற்ற நினைத்த கொப்பேகடுவவுக்கு, இருந்தவனும் இல்லை என்ற நிலையை உருவாக்கிய சம்பவம். மீண்டும் சிறீலங்கா பொலிஸ் புலனாய்வாளர்களை நடுக்காட்டில் அலையவிட்ட முதல் சம்பவத்தை அடுத்த தொடராய்ப் பார்ப்போம்…..

 

SHARE