சேவை வரி விலக்கு கோரிய நடிகர் சித்தார்த் மனு தள்ளுபடி…

316

கிராமியக் கலைஞர்களுக்கு சேவை வரி விலக்கு வழங்குவது போல, திரைப்பட நடிகர்களுக்கும் வரி விலக்கு அளிக்கக் கோரி நடிகர் சித்தார்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காவியத் தலைவன், பாய்ஸ், ஜிகர்தண்டா, உதயம் என்.ஹெச். 4 உள்பட பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் சித்தார்த் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

கிராமியக் கலைஞர்கள், நாடக நடிகர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கு சேவை வரிச் சலுகை அளித்து, கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி மத்திய அரசு ஒரு ஆணை வெளியிட்டது.

ஆனால், இது போன்ற வரிச் சலுகை திரைப்பட நடிகர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நடிப்புத் தொழில் என்பது கிராமியக் கலைஞர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் ஒன்றாகத்தான் உள்ளது.

இந்த நிலையில், கிராமியக் கலைஞர்களுக்கு மட்டும் சேவை வரி விலக்கு அளிப்பது நியாயமற்றது. எனவே, திரைப்பட நடிகர்களுக்கும் சேவை வரிச் சலுகை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வரி விலக்கு அளிப்பது, அளிக்காதது குறித்து முடிவு செய்வது அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டது. கிராமியக் கலைஞர்கள் லாப நோக்கமின்றி, சேவைகள் செய்து வருகிறார்கள். அதனால், பாரம்பரியக் கலையையும், கலைஞர்களையும் பாதுகாப்பதற்காக மத்திய அரசு அவர்களுக்கு வரி விலக்கு அளித்துள்ளது.

ஆனால், கிராமியக் கலைஞர்களையும், திரைப்பட நடிகர்களையும் ஒன்றாகக் கருத முடியாது. திரைப்படங்கள் பெரும் முதலீட்டில் தயாரிக்கப்படுகிறது. நடிகர்கள் அதிகமான தொகையை ஊதியமாகப் பெறுகின்றனர்.

அதனால், கிராமியக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளை திரைப்பட நடிகர்கள் கோர முடியாது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும் அல்ல. பாராம்பரியக் கலைகளையும், கலாசாரங்களையும், கல்வியையும் பாதுகாப்பதற்காக குறிப்பிட்ட மக்களுக்கு சலுகை வழங்கலாம் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, வரிச் சலுகையில் பாகுபாடு ஏதும் இல்லை. வழக்கு விசாரணையின் போது, கிராமியக் கலைஞர்கள் பெறும் சம்பளத்தை, நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்குப் பெறுவார்களா என மனுதாரரின் வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினோம்.

வரிச் சலுகை வழங்கியது குறித்து தவறாகப் புரிந்து கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதைத் தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

SHARE