சொந்தக் காலில் சொந்தக் கட்சியில் நிற்க முடியாதவர். பகிரங்கமாக அரசியலுக்கு வருவதே ஆபத்து என்ற நிலையிலும் தைரியமாக போராளிகள் துணிந்து களத்தில் இறங்கியதை விமர்சிக்கும் தகுதி சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு இல்லை- வித்தியாதரன்

134

 

சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவரது ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியினரும் எண்பதுகளின் கடைசியில் இந்தியப் படைகளோடு இங்கு புரிந்த அட்டகாசங்களை எங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் மீதும் ஏவிவிட்ட அராஜக கொடூர அடக்குமுறைகளை வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

Suresh-Premachandran-500x350

யாழ். பிராந்திய பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் முழு வடிவம் இங்கே தரப்பட்டுள்ளது.

நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது தமிழ் அரசுக் கட்சிக்கோ விரோதமானவன் அல்ல. அண்மைக் காலங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்களுக்கும், நிர்வாகச் சீர்கேடுகளுக்குமே எதிரானவன்.

அதிவிரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கைப்பற்றி புதிய இரத்தம் பாய்ச்சி ஆரம்பகாலத்தில் இருந்தது போல உத்வேகத்துடன் இயங்கச் செய்வோம் என்கிறார் ஜனநாயகப் போராளிகள் கட்சி சுயேச்சைக் குழு 4 இன் முதன்மை வேட்பாளரான ந. வித்தியாதரன்.

நேற்று முன்தினம் தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின் அதன் எதிரொலிப்புகள் தொடர்பாக தமது சகாக்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த வேளையில் குறித்த பிராந்திய பத்திரிகையின் நேர்காணலுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கிச் செவ்வியளித்தார் வித்தியாதரன்.

அப்போது அவரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு இப்படிப் பதில் அளித்தார்.

கேள்வி:- அண்மைக்காலமாக நீங்கள் வெளியிட்டு வரும் கருத்துகளும், ஊடக அறிக்கைகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழரசுக் கட்சிக்கும் எதிரானதாகவும், அவதூறு செய்வது போலவும் அமைந்துள்ளது. நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளராகவும், கொழும்புக் கிளை ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டீர்கள்.

அதன் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டு செயற்பட்டீர்கள். 2015 நாடாளுதமன்றத் தேர்தலில் உங்கள் அமைப்பின் பிரதி நிதிகளுக்கு வாய்ப்புக் கேட்டீர்கள். அந்த நேரம் வரை கூட்டமைப்பின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட நீங்கள் வாய்ப்பு மறுக்கப்பட்ட பின் எதிர்மாறாகச் செயற்பட ஆரம்பித்துள்ளீர்கள் இது ஏன்?

பதில்:-  முதலில் நீங்கள் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவன் அல்ல சாதாரண இணைப்பாளர் மட்டுமே. மேலே கூறியது போல் நானோ இந்த அமைப்போ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல.

2009 ஆம் ஆண்டுக்குப் பின் அங்கு நிலை தடுமாற்றம் அதிகரித்துள்ளது. உட் பூசல்கள் அதிகரித்துள்ளன. இந்த அமைப்பின் மூலம் உள்ளிட்டாவது சீரமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

முன்பு யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. வேட்பாளராக இருந்தவருக்கு திருமலையில் வேட்பாளாராகவும் பஸிலின் ஊடகத் தொடர்பாளராகவும் இருந்தவருக்கு அம்பாறையிலும் 2010 ஆம் அண்டு வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக செயற்பட்ட புளொட் இயக்கத்துக்கும் வாய்ப்புக்களை வழங்க முடியும் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே உருவாக்கிப் பாதுகாத்த போராளிகளுக்கும் ஏன் ஒரு வாய்ப்பு வழங்கக்கூடாது.

தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இப்பொழுது இல்லை. நீங்கள் எங்களுக்கு ஆதரவாக வேலை செய்யுங்கள் என்று கூறி இருந்தால் நாங்கள் கூட்டமைப்பின் வெற்றிக்காக முன்னின்று செயற்படத் தயாராகவே இருந்தோம். வாய்ப்பு தரமுடியாது என்பதை விட சேர்த்துக் கொள்ளவே முடியாது என்று கூறியது தான் எம்மை பெரிதும் வேதனைப்படவைத்தது.

நாம் என்ன தீண்டத்தாகதவர்களா என்று எதிர்வினா தொடுக்கின்றார் வித்தியாதரன். உள்ளே சென்று சுட்டிக்காட்ட விருந்ததை இப்பொழுது வெளியில் இருந்து செய்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையுடனேயே இதனை செய்கின்றோம் என்றார்.

கேள்வி: நீங்கள் ஊடக ஜாம்பவான் எனப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எஸ்.டி.சிவநாயகம், கே.கே. இரத்தினசிங்கம் ஆகியோரின் பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர். உங்கள் எழுத்துக்கும் ஓர் அங்கீகாரம் உண்டு. கடந்த 2009ஆம் ஆண்டு டிசெம்பர் நடுப்பகுதியில் நீங்கள் கடமையாற்றிய பத்திரிகைகளில் எழுதிய ஆசிரிய தலையங்கங்கள் குறிப்பிடத்தக்கதாக இருந்தன.

அதாவது நீங்கள் அடிக்கடி கூறுவீர்கள் நக்குண்டார் நாவிழந்தார் என்று. ஊடகம் நடுநிலையாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளுடன் இணையக்கூடாது. அரசியல் பிரவேசத்தின் மூலம் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்த பத்திரிகைக்கோ அதன் குழுமத் தலைவருக்கோ இல்லை என்று கடுமையாக மட்டும் அல்ல அடித்துக் கூறியிருந்தீர்கள். ஆனால் இப்போது நீங்களே அந்த அரசியலில் குதித்து தீவிர பங்காளியாக இருப்பது எப்படி நியாயப்படுத்த முடியும்?

பதில்: நீங்கள் கேட்டது சரிதான். அதற்கு நீண்ட விளக்கம் தரவேண்டியது எனது கடப்பாடு. மஹிந்த ராஜபக்‌ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது ஸ்ரீகாந்தாவின் ஆதரவுடன் சிவாஜிலிங்கம் போட்டியிட்டார்.

அவர் லண்டனை G.T.V அலைக்கு பேட்டியளித்தபோது, உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளின் அதிபர் ஈ.சரவணபவன் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினராகி பின்வழியால் ஓர் அமைச்சராகி விடப்பார்க்கின்றார். அதனால் தான் அவர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றார். அவரது பத்திகைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படுகின்றன என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

சிவாஜிலிங்கத்துக்குப் பதில் அளிக்கும் வகையிலேயே நான் ஆசிரியர் தலையங்கத்தை தீட்டினேன். சிவாஜிலிங்கம் கூறுவது அவரது கற்பனை. உதயன் அதிபர் நினைத்திருந்தால் சிவஜிலிங்கத்துக்கு முன்னரே நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால் நாம் நேர்மையான ஊடகவியலாளர்களாக இருக்கவே விரும்புகின்றோம். அரசியல் பிரவேசம் என்பது அவசியமற்றது எனப் பதில் அளித்திருந்தேன்.

கேள்வி: இப்பொழுது நாளுக்கு நாள் இணையத்தளங்கள் முளைக்கின்றன. பொறுப்பற்ற வகையில் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புகின்றன. நேற்று முன்தினம் நீங்கள் உங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின் ஓர் இணையத்தளம் உங்களை வானளாவப் புகழ்ந்துள்ளது. அதேவேளை உதயன் குழுமத்தலைவர் மீது சேற்றை வாரி வீசி உள்ளது. அதன் பின்னணியில் நீங்களும் இருக்கின்றீர்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்படியான இணையத்தளங்கள் தொடர்பாக என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: உங்களுடைய சந்தேகம் தவறானது. இந்த கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். பொறுப்புக்கூறும் கடப்பாடுகள் அற்ற இணையத்தளங்களே இப்படியான ஆதாரமற்ற விசமத்தனமான செய்திகளைப் போடுகின்றன. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

சிறுபிள்ளைத்தனமாக செயற்படும் இணையத்தளங்கள் தம்மை திருத்திக்கொள்ளவேண்டும். பொறுப்புடன் நடந்துக்கொள்ளவேண்டும். அதேவேளை பல இணையத்தளங்கள் உண்மையாகச் செயற்படுவதையும் மறுக்கவில்லை. தனிப்பட்ட வகையில் விமர்சனம் செய்வது விஷமத்தனமானது மட்டுமல்ல மனச்சாட்சிக்கு விரோதமான ஒரு செயல் என்றே நான் கூறுகின்றேன்.

கேள்வி: ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதன்மை வேட்பாளராக உங்களுடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் நீங்கள் தானே கட்சியின் தலைவர்?

பதில்: இல்லை இல்லை. நான் தலைவர் இல்லை. இந்த அமைப்பின் இணைப்பாளர் மட்டுமே என்கிறார் வித்தியாதரன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த துளசி என்ற அமைப்பாளர் இப்படிக் கூறுகின்றார்,

தமிழ்த் தாயகத்துக்காக பல தியாகங்களைச் செய்த நாங்கள் இரண்டு, மூன்று பேர் கூட கூடி நின்று பேசமுடியாத நிலையில் பங்கருக்குள் இருந்து வெளிவருவதற்குப் பாதுகாப்பாக வித்தியை ஒரு வெள்ளைக் கொடியாகவே பயன்படுத்திக் கொண்டோம்.

அதனை இப்போது உயர்த்திப் பிடித்துள்ளோம். காலம் கனியும்போது அதனை உரிய இடத்தில் வைப்போம் என்று கூறினார். இறுதியாக வித்தியாதரன் மற்றும் ஒரு விடயத்தைக் கூறினார்.
சட்டத்தின் முன் நாம் குற்றவாளிகள் இல்லா விட்டாலும் தார்மீகத்தின்படி நாமும் குற்றவாளிகள்தான்.

ஆரம்பம் முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உதயன், விடுதலைப் போராளிகளுக்கு உத்வேகம் கொடுத்து உற்சாகப்படுத்தி ஊக்கமளிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பை ஏற்படுத்தும் சக்தியாக இருந்தது. இந்தப் போராட்டம் வெற்றியடைந்திருந்தால் அதில் நாமும் பங்கு கொண்டிருப்போம்.

இன்று போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையிலும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை ஒற்றை விடுத்தார்.

கேள்வி: போராளி அல்லாத ஒருவர் போராளிகளுக்கு தலைமை வகித்து ஜனநாயகப் போராளி எனத் தேர்தலில் போட்டியிடுகிறார் என சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ் சுமத்தி உள்ளார். இதற்கு என்ன கூறப் போகின்றீர்கள்?

பதில்: ஜனநாயகப் போராளிகள் கட்சி வெறுமனே போராளிகளுக்கு மாத்திரமானதல்ல அவர்களின் ஆதரவாளர்கள், போராளிகளின் பெற்றோர்கள், மாவீர்களின் குடுத்பத்தவர்கள் விடுதலைப் புலிகளுடன் தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டியதால் கூட்டமைப்பினால் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் என எல்லோரும் அதில் உள்ளனர்.

நான் தலைமை வேட்பாளாராக போட்டியிடுவது கூட எனது முடிவல்ல. அவர்களது உயர்மட்டக் கூட்டத்திலிருந்து வெளியே நிற்கும்படி பணித்துவிட்டு கட்சியின் உயர்பீடத்தவர்கள் 15 பேரும் சாதக, பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்து தீர்மானித்து எடுத்த முடிவுதான் அது. அவர்களின் ஒருமித்த வேண்டுகோளின்படியே நான் இணக்கம் தெரிவித்தேன்.

கேள்வி: நீங்கள் கூட்டமைப்பில் இடம் கேட்டுவந்த போது அதற்கு இடம்கொடுக்க மறுத்ததால் தான் தனித்துப் போட்டியிடுகின்றீர்கள் என்றும் குற்றஞ் சாட்டப்படுகிறதே?

பதில்: சுரேஷ் ஒரு பச்சை உண்மையை முழுமையாக மறைத்து பொய்க்கதை புனைகின்றார். அஞ்ஞான வாசத்திலிருந்து வெளியே வருகின்றவர்களை அசிங்கப்படுத்துவது போல் சுரேஷ் பேசுகின்றார். எம்மால் ஐந்துவீத வாக்குகளைக் கூடப் பெறமுடியாது என்றும் நையாண்டி பண்ணுகிறார்.

கடந்த 25 ஆண்டுகால ஜனநாயக அரசியல் வாழ்வின் பின்னரும் துணிந்து தனது கட்சியில் தனித்து களம் இறங்கி 500 வாக்குகளைக் கூடப் பெற லாயக்கற்ற அவர் கூட்டமைப்பு என்ற முண்டில் நின்று கொண்டுதான் இவ்வளவும் பேசுகின்றார்.

புலிகள் உருவாக்கித் தந்த கொழுகொம்பு இல்லாவிட்டால் அவர் எப்போதோ அடிபட்டுப் போயிருப்பார். சொந்தக் காலில் சொந்தக் கட்சியில் நிற்க முடியாதவர். பகிரங்கமாக அரசியலுக்கு வருவதே ஆபத்து என்ற நிலையிலும் தைரியமாக போராளிகள் துணிந்து களத்தில் இறங்கியதை விமர்சிக்கும் தகுதி சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு இல்லை.

கேள்வி: நீங்கள் இப்படிக் கூறுகின்றீர்கள் ஆனால் நீங்கள் ஒரு போராளி அல்ல என்று தானே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்?

பதில்: நான் போராளியா என சுரேஷிற்கு எழுந்துள்ள சந்தேகம் வேடிக்கையானது. நானும் இந்த மண்ணுடனும் இந்த விடுதலைப் போராட்டத்துடனும் நின்று தாக்குப் பிடித்த ஒரு ஊடகப் போராளியே, அதற்காக நான் பட்டதுன்ப துயரங்கள், சித்திரவதைகள் அளவிட்டு கூறமுடியாதவை.

ஆனால், சுரேஷ் அவரது ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியினரும் எண்பதுகளின் கடைசியில் இந்தியப் படைகளோடு இங்கு புரிந்த அட்டகாசங்களை எங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் மீதும் ஏவிவிட்ட அராஜக கொடூர அடக்குமுறைகளை துணிச்சலோடு எதிர்கொள்ள எழுந்த எங்களின் உத்வேகமே எங்களையும் உண்மையான போராளிகளாக்கின என்றார்.

SHARE