சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – 01

442

 

விடுதலைப்புலிகள் அமைப்பென்றதும் அதன் தலைவரை தவிர்த்து, சட்டென நினைவில் வரும் பெயர்கள்- இயக்கத்தை உரிமை கோரவல்லவையாக இருந்த தனி மனிதர்கள் என்றால் மிகச்சிலதான். குறிப்பிட்ட காலங்களில் சில பெயர்கள் அடிபட்டு பின்னர் காணாமல் போன கதைகள் நிறைய இருந்தன. நீண்டகாலத்திற்கு இந்த அந்தஸ்துடன் இருந்த பெயர்கள் மிகஅரிதானவை. பொட்டம்மான், பால்ராஜ், சொர்ணம் என மிகச்சிறிய பட்டியல் அது.

 

சொர்ணம் எப்படி இந்த பட்டியலில் வந்தார் என்பது சற்று வியப்பிற்குரியது. சிந்தனைக்குரியது. ஏனெனில் இந்த பட்டியலில் உள்ளவர்கள் அளவில் அவர் எந்த காலத்திலும் பிரகாசித்து கொண்டிருந்தவர் அல்ல. அந்த அமைப்பில் இருந்து மிகமோசமான வீழ்ச்சியை சந்தித்த ஒரு தளபதியாகவும் அவர்தான் இருந்தார். எனினும் ஈழத்தமிழர்கள் மத்தியில் அவர் பற்றிய ஒரு மிகையான மதிப்பீடு இருந்து கொண்டேயிருந்தது. உண்மையைச் சொன்னால், அமைப்பிற்கு வெளியிலிருந்த தமிழர்களிடம் மட்டும்தான் அப்படியான அபிப்பிராயம் இருந்ததென்பதல்ல. அமைப்பிற்குள்ளிருந்தவர்கள் மத்தியிலேயே அவர் பற்றியதொரு அதீதமான பிரதிமை இருந்தது. இத்தனைக்கும் அவர் பற்றிய மதிப்பீடுகளளவிற்கு அவரது களச்செயற்பாடுகள் இருந்ததென்று கூற முடியாது. இப்படி சொல்வது பலரை சினமூட்டலாம். ஆயினும் அவர் பற்றிய ஒரு மதிப்பீட்டின் அவசியத்திற்காக இதனையும் பேசவேண்டியுள்ளது.

 

சொர்ணத்தின் ஆரம்ப நாட்கள்

 

1964ம் ஆண்டு  பிறந்த சொர்ணம், திருகோணமலையில்த்தான் வளர்ந்தார். அவரது பிறப்பு யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் என்றபோதும், திருகோணமலையின் அரசடிதான் அவரது வளர்ந்த இடம். தந்தை யோசெப். தாய் திரேசம்மா.  திருகோணமலையின் புனித சூசையப்பர் கல்லூரியில் கல்வி கற்றவர், 1982ம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து 1983ம் ஆண்டில்- தனது 19வது வயதில்- பயிற்சிக்காக இந்தியா சென்றார். தமிழ்நாட்டின் சிறுமலையில் நடந்த 3வது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றார். இவரது பயிற்சிமுகாம் கூட்டாளிகளில் ஒருவர்தான் கருணா.

 

பயிற்சி முடிந்ததும் யாழ்ப்பாணம் வந்து சில மாதங்கள் நின்றார். அதன்பின்னர் மீண்டும் இந்தியா அழைக்கப்பட்டார். அவரை இந்தியாவிற்கு அழைத்தது விக்ரர். காரணம், பிறிதொரு பயிற்சிக்காக. அந்த சமயத்தில் இலங்கைத்தீவில் ஆர்.பி.ஜி என்றொரு ஆயுதமே பாவனையில் இருக்கவில்லை. இந்தியாவில் வைத்து சொர்ணம், தேவன் உள்ளிட்ட சிலரிற்கு பயிற்சி வழங்கப்பட்டது. (பின்னர் 1985இல் யாழ்ப்பாணத்தில் பண்டிதரின் முகாம் சுற்றிவளைப்பில்த்தான் இலங்கை படையினர் அதனை முதன்முதலாக கைப்பற்றி கண்கொண்டு பார்த்தனர்)

 

இந்தியாவில் பயிற்சி பெற்ற சமயத்தில் அமைப்பின் தலைவரின் பாதுகாவலர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு விக்ரரினால்த்தான் நடத்தப்பட்டது. அவரது உயர்ந்த தோற்றமும், இயல்பான கறார்த்தன்மையும் விரைவிலேயே அவரை தனித்தன்மைமிக்கவராக அடையாளம் கட்டியது. அவர் எவ்வளவு திறைமைகள்  மிகுந்தவராக இருந்திருப்பினும், அவர் வேறு பணிகளில் இருந்திருந்தால் அவ்வளவு விரைவில் அடையாளம் காணப்பட்டிருக்கமாட்டார். அமைப்பின் தலைவரின் மெய்ப்பாதுகாவலராக இருந்தமை என்பது அவரை விரைவிலேயே ஏணிப்படிகளில் ஏற்றிவிட்டது. பின்னாட்களில் குமரன், வேலவன், இரட்ணம் என எண்ணற்ற உதாரணங்களை கூறமுடிந்தாலும் விடுதலைப்புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகவலர்களாக இருப்பதால், விரைவிலேயே அடையாளம் காணப்பட்டு நட்சத்திரமான முதலாமவர் சொர்ணம்தான்.

 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களுடன்

ஆரம்பநாள் தொட்டு அவர் ஒரு தீவிரம்மிக்க போர்வீரனாக இருந்தார். ஒரு தீவிரம்மிக்க போராளி அவர். செயலின் இரண்டாம் விளைவுகளை சிந்திப்பவராக இருக்கவில்லை. இன்னும் விளக்கமாக சொன்னால், மூர்க்கத்தனமாக மேடையில் மோதிக்கொள்ளும் மல்யுத்தவீரனின் இயல்பைக் கொண்டிருந்தார். இதனைவிட மேலதிகமாக, அவர் தனது தலைமையை தீவிரமாக நேசிப்பவராக இருந்தார். அந்த விசுவாசம் பற்றி இரண்டாவது கேள்வியை எவருமே கேட்க முடியாது. அதனை தனது வரலாற்றின் மூலம் நிரூபித்தும் விட்டார். ஏனெனில் அவர் மரணித்தபோது, இறுதியாக சொன்ன வாசகங்களில் ஒன்று, தலைவர் மரணிப்பதை தன்னால் கண்கொண்டு பார்க்க முடியாது. அதற்கு முன்பாக மரணித்து விட வேண்டும் என்பதே. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியை சகித்து கொள்ள முடியாமல் மரணமான முதலாவது உயிரும் அவர்தான்.

 

அவர் களத்தில் கொண்டிருந்த தீவிரத்திற்கும், அமைப்பில் கொண்டிருந்த விசுவாசத்திற்கும் இவற்றை உதாரணமாக சொல்லலாம்.

 

கெரில்லாக்களாக வாழ்ந்த விடுதலைப்புலிகளின் ஆரம்பநாட்களில் அவர் ஒரு முன்னுதாரணம் மிக்கவராக விளங்கினார். எல்லாக் காரியங்களும் தீவிரமான உறுதியினாலும், விடாமுயற்சியினாலுமே சாதிக்க முடிபவையாக இருந்தன. உணவில்லாமல் இருக்க வேண்டுமா, இருந்தார். காட்டிற்குள் பதுங்கியிருக்க வேண்டுமா, பதுங்கியிருந்தார். பதுங்கியிருந்து ஒரு தாக்குதலை நடத்த வேண்டுமா, நடத்தினார். நேருக்குநேராக நின்று மோத வேண்டுமா, மோதினார். ஒருதரமும் இமைக்காமல் தனது தலைவரை பாதுகாக்க வேண்டுமா, பாதுகாத்தார்.

 

இவையெல்லாம் சேர்ந்து அவரை பிறிதெல்லாரையும் விட தனித்துவமானவராக அவரது தலைவரிடம் அடையாளம் காட்டியது. விடுதலைப்புலிகள் அமைப்பில் பராய வித்தியாசமில்லாமல் பிரபாகரனிடம் ஆத்மார்த்தமான பிணைப்பு கொண்டிருந்தவர்கள் பலர்.  வயதில் மூத்த அன்ரன் பாலசிங்கத்தில் தொடங்கி 30 வயதில் இறந்த சிலம்பரசன் வரை எண்ணற்ற உதாரணங்களை இதற்கு சாட்சியாக கூற முடியும். இவற்றில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்ற பகுப்பை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் மதகில் இருந்து அரட்டையடித்து கொண்டிருக்கவில்லை. அப்படிவெட்டியாக இருந்தால்தான்  எல்லா நண்பர்களும் ஒன்று சேரவும், யார் முதன்மையானவர் என்ற அபிப்பிராய பேதங்களும் எழும். அவர் தீவிரமான கெரில்லா போராளியாக இரந்தார். அதுதவிர, அவர் தனிப்பட்ட நட்பிற்கும் கடமைக்குமிடையிலான இடைவெளியை பேணினார். இன்னும் துலக்கமாக சொன்னால், தன்னுடன் ஆத்மார்த்தமான நட்புடன் இருப்பவர்களும் தூயவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தார். அவர்கள் பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் கறைகளை சந்தித்தால், அவர்களை தள்ளி வைக்கத் தயங்கியதில்லை. தான் நம்பிய நிலைப்பாட்டிற்கு அப்பால் சிந்தித்தார் என்பதற்காக அன்ரன் பாலசிங்கத்தை ஒதுக்கி வைக்கவும், தனது எதிர்பார்ப்பபை நிறைவேற்றவில்லை என்பதற்காக சொர்ணத்தை தள்ளிவைக்கவும் தயங்கியவரல்ல. தன்னுடன் ஆத்மார்த்த பிணைப்பை கொண்டிருந்தவர்கள் சரியாக செயற்படவில்லை என்றபோது ஒதுக்கி வைத்தாலும், மிக நெருக்கடியான மனநிம்மதி வேண்டிய சமயங்களில் அவர்களை அழைத்து தனிமையை போக்கிய இரண்டு சம்பவங்கள் உள்ளன. முதலாவது கடாபி தொடர்புடையது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலக்கப்பட்டபோது எழுந்த நெருக்கடி நிலையின்போது ஒருநாள் கடாபியை அழைத்து நீண்டநேரம் தன்னுடன் உட்கார வைத்திருந்தார். கடாபியும் அவரும் கொண்டிருந்த நெருக்கம் பரகசியமானதல்ல. ஆனாலும், இதற்கு சில மாதங்களின் முன்னர்தான் அவரை கண்டபடி திட்டி தனது கண்ணில் விழிக்க வேண்டாம் என அனுப்பியிருந்தார். இரண்டாவது சொர்ணம் சம்மந்தமானது. அது யுத்தத்தின் இறுதி சமயத்துடன் தொடர்பானது. அதனை இறுதியில் பார்க்கலாம்.

 

பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக

விடுதலைப்புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகவலராக இருந்த சமயத்தில் சொர்ணம் பல சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஒருமுறை இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள் அவர் சிக்கியபோது, சொர்ணம் அவரை காப்பாற்றியிருந்தார். எனினும் இந்த நடவடிக்கையில் சொர்ணத்தின் பங்கு பேசப்படுமளவிற்கு, அதில் முக்கிய பங்கு வகித்த நவத்தின் பங்கு பேசப்படுவதில்லை. நவத்தின் சாதுரியமும், சொர்ணத்தின் மூர்க்கத்தனமாக போராற்றலும் இணைந்து சீக்கிய ரெஜிமென்றின் முற்றுகையிலிருந்து பிரபாகரன் தப்பிக்க உதவியது.

 

இதற்கு உடன் பதிலடி கொடுக்க புலிகள் விரும்பினார்கள். கல்கட் இலக்கு வைக்கப்பட்டார். மணலாற்றின் நித்தியவெட்டையில் உலங்குவானூர்தியில் வந்திங்கியவர் மீது தாக்குதல் நடந்தது. ஹெலிமீது ஆர்பிஜி அடிக்கப்பட்டது. அடித்தது சொர்ணம். முதலாவது அடி மிஸ். அதற்குள் கல்கட் சுதாரித்து அருகிலிருந்த பதுங்குகுழிக்கள் பாய்ந்து விட்டார். இரண்டாவது அடியில் ஹெலி காலி. இந்தியபடைகளின் கட்டளைத்தளபதிக்கு மரணத்தின்வாசனையை முகரச் செய்தார் சொர்ணம்.

 

இந்த சமயத்தில் விடுதலைப்புலிகளில் பல நட்சத்திரங்கள் மேற்கிளம்பினார்கள். எனினும் அவர்களில் உயர்மட்டத்தில் இருந்தவர்கள் இறந்துபோய்விட்டனர். உயர்மட்டநட்சத்திரங்களாக எஞ்சியவர்களில் சொர்ணம் ஒருவர். மற்றவர் பால்ராஜ். இவர்கள் இருவரும்தான் இரண்டாம் கட்ட ஈழப்போரின் வடக்கு நாயகர்கள். இவர்கள் இருவரையும் மையப்படுத்தித்தான் இரண்டாம்கட்ட ஈழப்போரின் அத்தனை நடவடிக்கைகளும் அமைந்தன.

 

இந்திய படைகளின் வெளியேற்றத்தின் பின்னர், விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பண்புமாற்றங்கள் ஏற்பட்டன. அதுவரை சிறிய கெரில்லா அணிகளாக இருந்தவர்கள் படையணிகளை அமைத்தார்கள். மகளிர்படையணி தவிர்த்து, ஆண்கள் படையணி இரண்டு உருவாக்கப்பட்டன. ஒன்று சாள்ஸ் அன்ரனி படையணி. அதன் தளபதி பால்ராஜ். மற்றது இம்ரான் பாண்டியன் படையணி. இதற்கு சொர்ணம் தளபதி.

 

அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வளலாய் தொடர் காவலரண் தகர்ப்பை அவர்தான் செய்தார். அது பெரிய படைத்துறை அதிசயத்தை ஏற்படுத்திய தாக்குதல் அல்ல. புலிகளிற்கும் பெரிய இராணுவ அனுகூலங்களை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனாலும், ஒரு கெரில்லா இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி காலத்தில், அவை நம்பிக்கை ஏற்படுத்திய தாக்குதல்கள்.

 

அவரது தலையாய படைத்துறை சாதனையாக குறிப்பிடத்தக்கது 1992இல் நடந்த கட்டைக்காடு முகாம் தாக்குதல். அந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் மிக நெருக்கடியை சந்தித்திருந்தார்கள். ஆயுதங்களிற்கு மிகப்பெரிய தட்டுப்பாடு. வெளிநாட்டு விநியோகம் ஒர் ஒழுங்கிற்கு வரவில்லை. அதுவரை கவனித்த பிரேமதாசாவும் கைவிட்டுவிட்டார். மரபுபடையணிகளை உருவாக்கிவிட்டாயிற்று. ஆனால் ஆயுதங்கள் இல்லை. குறிப்பாக ரவைகள் இல்லை. இராணுவம் ஒரு முன்னகர்வை செய்தால் தாக்கு பிடிக்க முடியாதென்ற நிலை. இயக்கத்தின் நிலைமையை உணர்ந்த சொர்ணம், கட்டைக்காடு முகாமை இலக்கு வைத்தார். அதுதான் ஆனையிறவு பெருந்தளத்தில் ஆயுதசாலை. கடல்மார்க்கமாக வந்த ஆயுதங்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தன. தனது இம்ரான் பாண்டியன் படையணியை வைத்து அவர் அந்த தாக்குதலை மேற்கொண்டார். சில மணிநேரங்களிலேயே முகாமை வழித்து துடைத்து கொண்டு வந்துவிட்டார்கள். மரபுப்படையணியாக மாற்றமடைந்தாலும் அதன் சாவல்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்த சமயத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் அவகாசத்தை அவர்தான் ஏற்படுத்தினார்.

 

புலிப்பாய்ச்சல் நடவடிக்கை திட்டமிடலின் போது

இதன் பின்னர் குடாநாடு வீழ்ச்சியடையும் வரை வடக்கில் நடந்த தாக்குதல்களை ஒன்றில் அவர் வழிநடத்தினார். அல்லது பால்ராஜ் வழிநடத்தினார். தனது சமதையானவர்கள் அல்லது கீழானவர்கள் என யாருடனும் ஒரு இங்கிதமாக நடந்து கொள்ளும் இயல்பை பால்ராஜூம், அதற்கு நேர்மாறான இயல்பை சொர்ணமும் கொண்டிருந்தனர். இதனால் பின்னாட்களில் இருவரும் இணைந்து தாக்குதல்களை செய்ய முடியாமல் போனது. மிகநெருக்கடியான கட்டம் என்றபோது மாத்திரம் புலிப்பாய்ச்சலில் இருவரும் ஒன்றாக களத்தை வழிநடத்தினார்கள்.

 

சொர்ணத்தின் யுத்த முறை மிகச்சாதாரணமானது. பழைய இதிகாசபுராணங்களில் வருவதற்கொப்பானது. புதிய புதிய உத்திகளோ அதிர்ச்சிகளோ அற்றது. ஒரு வரியில் சொன்னால், போவார்கள் அடிப்பார்கள் வருவார்கள். மாட்டுவண்டி சவாரியின் வண்டியோட்டி வெறிகொண்டு, மாட்டை குத்தி விரட்டுவதைப்போல அவர் களத்தை வழிநடத்தினார். அவரது யுத்தமுறையில் இரண்டு தெரிவுகள் இருக்கவில்லை. எவ்வளவிற்கெவ்வளவு யுத்ததந்திரங்களில் நம்பிக்கை வைக்கிறானோ அந்த தளபதியின் படையணி காப்பாற்றப்படும். உயிர்களில் நம்பிக்கை வைக்கும் தளபதியின் இலக்கு நிறைவேறுமே தவிர, படையணி காப்பாறப்படுவதில்லை. சொர்ணம் இரண்டாம் வகை. அவரது தாக்குதல்கள் அனைத்துமே அதீதமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியவை. தவளை, கட்டைக்காடு, புலோப்பளை என இரண்டாம் கட்ட ஈழப்போரில் பல உதாரணங்கள் உள்ளன. மண்டைதீவு மட்டும்தான் விதிவிலக்கு.

 

இந்த காலப்பகுதியில் இராணுவமும் அதீத போர்த்தந்திரங்களை கைக்கொண்டிருக்கவில்லை. முதலில் எறிகணை வீச்சு. பின்னர் துப்பாக்கி வேட்டு. பிறகு நகர்வு என்பதைபோல் மேலோட்டமான தந்திரங்களைத்தான் பாவித்தார்கள். இந்த சமயத்தில் மூர்க்கத்தனமாக தாக்கும் இயல்பு கொண்ட சொர்ணம் போதுமானவராக இருந்தார்.

 

இராணுவத்தின் நடவடிக்கைகளில் தந்திரோபாயமான மாற்றத்தை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தியவர் மேஜர் ஜெனரல் ஜானகபெரேரா. அவரது வழிநடத்தலில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட சூரியக்கதிர் முன்னரெப்போதும் புலிகள் சந்தித்திராத உத்தியிலான நகர்வு. இதன் பின்னர்தான் இலங்கை போரரங்கு இராணுவ உத்திகளிற்கு முக்கியத்துவம் வழங்குவதாக மாறியது. இந்த நகர்வை விடுதலைப்புலிகளினால் எதிர்கொள்ள முடியவில்லை. வன்னிக்கு பின்னகர்ந்தனர். யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சியென்பது இன்னொரு அர்த்தத்தில் சொர்ணத்தின் வீழ்ச்சியாக இருந்தது. அவரது போருத்திகள் கடுமையான விமர்சனங்களிற்கு உட்பட்டன.

 

அவர் தனது போர்வாழ்க்கையில் முதலாவது சறுக்கலை சந்தித்தார். திருகோணமலை பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். திருகோணமலை பொறுப்பாளரென்பது, மூதூர் காடுகளில் ஓரிரு நூறுபோராளிகளை வழிநடத்தும் பொறுப்பு.

 

இதன் பின்னர், விடுதலைப்புலிகளின் புதிய தளபதிகள் விரைவாக மேலெழ தொடங்கினார்கள். குறிப்பாக தீபனின் வளர்ச்சி அசுரத்தனமானதாக இருந்தது. அதீத இராணுவ யுக்திகளை பிரயோகிக்கும் களத்திற்கு பால்ராஜினால் சட்டென மாறிக் கொள்ள முடிந்தாலும், தீபன் போன்றவர்களின் அதீத தேர்ச்சியின் முன் ஈடுகொடுக்க முடியவில்லை. இது முதல் தலைமுறையினரை ஒருவித அசௌகரியப்படுத்தியது.

 

ஓயாத அலைகள் 03 இன் நான்காம் கட்டத்தில்

ஒரு மூத்த தளபதி என்பதன் அடிப்படையில் சொர்ணத்தை விடுதலைப்புலிகள் கைவிடவில்லை. அவ்வப்போது சந்தர்ப்பங்கள் கொடுத்தபடியிருந்தனர். துரதிஸ்ரவசமாக அவரால் ஒருமுறைகூட பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது. நவீன களங்களில் கறார்த்ன்மைக்கும், செய் அல்லது செத்து மடி பாணிக்கும் இடமில்லை. அமைப்பின் கெரில்லா போராட்டகால மனநிலையும், நிழல்அரசுக்கால மனநிலையும் வேறானவை. ஒரேமனநிலையுடன் இரண்டையும் அணுக முடியாது. இந்த யதார்த்தம் கடைசிவரை புரியாதவராகவே அவர் இருந்தார். இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். கருணாவின் பிரிவின் பின்னர், திருகோணமலையை பொறுப்பேற்க இரண்டாவது தடவையாக அவர் அனுப்பப்பட்ட சமயத்தில் அவரது வாகன சாரதியாக இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்து ஒருவன் அனுப்பப்பட்டான். மன்னாரை சேர்ந்த அவன் சற்றே துடுக்குத்தனம் மிக்கவன். சம்பூரில் வாகனம் பயணித்து கொண்டிருந்தது. வீதி மோசமானதாக இருந்ததால், குலுங்கியது. குலுங்காமல் செலுத்த சொல்லி சொர்ணம் சொன்னார். அவன் மெதுவாக வாகனத்தை செலுத்தினான். கூட்டம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்ததால், விரைவாக செலுத்த சொல்லியிருக்கிறார். அவன் விரைவாக செலுத்த மீண்டும் வாகனம் குலுங்கியது. முன்னிருக்கையில் இருந்தவர், சாரதியின் தலையில் அடித்திருக்கிறார். அவன் சட்டென வாகனத்தை நிறுத்திவிட்டான். எதுவும் பேசாமல் வாகனத்தில் இருந்து இறங்கினான். நிதானமாக வாகன சாவியை எடுத்து சொர்ணத்தின் மடியில் போட்டுவிட்டு நடந்தே முகாம் போய்விட்டான். இப்படியொரு சம்பவத்தை இரண்டாம் கட்ட ஈழப்போர் காலத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

 

SHARE