சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்கு பின் உடல் அடக்கம்

363
சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட உள்ளது.

மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் லெனின் உடல், பதப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 88 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏராளமான மக்கள் இந்த உடலைப் பார்த்துள்ளனர்.
சோவியத் யூனியன் சிதறுண்டு போன பின்னரும் கூட லெனின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது லெனின் உடலை அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1924ஆம் ஆண்டு 53வது வயதில் லெனின் மரணமடைந்தார். அவரது உடலை இத்தனை காலமாக அடக்கம் செய்யாமல் வைத்திருப்பது அபத்தமானது என்று ரஷ்ய கலாச்சார அமைச்சர் விலாடிமிர் மெடின்ஸ்கி கூறியுள்ளார். இவர் ஜனாதிபதி புடினுக்கு மிகவும் நெருக்கமானவர்.

மிகுந்த மரியாதைக்குரியவரான லெனின் உரிய அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று மெடின்ஸ்கி கூறியுள்ளார்.

அதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தனது உடலை மிகச் சாதாரணமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே லெனினின் கடைசி ஆசை. அதைக் கூட இதுவரை நிறைவேற்றாமல் இருப்பது தவறானது. அவரது விருப்பப்படி சாதாரண கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

மிகவும் மரியாதைக்குரிய இடத்தில், மரியாதையான, கெளரவமான முறையில் லெனின் உடல் அடக்கம் செய்யப்படும். தற்போது லெனின் உடல் அடங்கியுள்ள நினைவிடம், சோவியத் வரலாற்று நினைவிடமாக மாற்றப்படும் என்றார் அவர்.
லெனின் உடலை அடக்கம் செய்ய ரஷ்ய அரசு தீர்மானித்திருப்பதையே மெடின்ஸ்கியின் பேச்சு குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. லெனினின் தாயார் செயின்ட் பீ்ட்டர்ஸ்பர்க்கில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறைக்கு அருகிலேயே லெனின் உடலும் அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த சோவியத் தலைவர் ஸ்டாலின் உதத்ரவின் பேரில் லெனின் உடல் பதப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் மக்கள் பார்ப்பதற்காக வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அவரது உடல் அடக்கம் செய்யப்படாமலேயே இருந்து வருகிறது.

தற்போதைய ஜனாதிபதி புடின் கூட லெனின் உடலை அடக்கம் செய்வதை தாமதப்படுத்தியே வந்துள்ளார். மூத்த ரஷ்யர்களால் லெனின் ஒரு மாபெரும் தலைவராக இன்று வரை மதிக்கப்படுவதால் லெனின் உடலை அடக்கம் செய்ய புடின் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Lanen

– See more at: http://www.asrilanka.com/2015/06/10/29141#sthash.RSakClZr.dpuf

SHARE