அடுத்த மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினால் என்ன நடக்கும் என்பது பற்றிய விவாதங்கள் இப்போதே தொடங்கி விட்டன.
அரசியல், ஊடக வட்டாரங்களில் மட்டு மன்றி, தேர்தல் பிரசார மேடைகளிலும் இதுபற்றி சிலாகிக்கப்படுகிறது.
எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, பிரசார மேடைகளில், ஊழல் செய்தவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடாத வகையில், வரும் ஜனவரி 8ம் திகதி நள்ளிரவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடப் போவதாக கூறியிருந்தார்.
அத்தகைய கட்டத்தில் இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ, அவரைக் காப்பாற்ற முனையக் கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இன்னொரு பக்கத்தில் தாம் தோல்வியுற்றால், சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்துவதற்கு, புலம்பெயர் தமிழர்களும் புலிகளும், சர்வதேச சக்திகளும், மட்டுமன்றி உள்ளூரிலுள்ள சிலரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேடை மேடையாக கூறி வருகிறார்.
என்றாலும், தாம் ஒரு போதும் நாட்டை விட்டு ஓடப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரசார மேடைகளில் நம்பிக்கையூட்ட முனைகிறார்.
இறுக்கமான போட்டியொன்று நிலவுகின்ற சூழலில், யார் பக்கம் வெற்றிக் காற்று வீசும் என்று சரியாக உய்த்துணர முடியாத ஒரு நிலை தான் இப்போது உள்ளது.
இந்தநிலையில், எப்போதுமே வெற்றியைப் பற்றியே பேசி வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தோல்வி குறித்தும், தோல்விக்குப் பிந்திய நிலை குறித்தும் பேச ஆரம்பித்திருப்பது முக்கியமானது.
அதாவது, தமது வெற்றியின் மீது அவருக்கு நூறுவீத நம்பிக்கை இல்லை என்பதால் தான், எதிரணியினரின் பிரசாரங்களுக்கு அவர் பதிலளிக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு வேளை, இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினால், அவர்,
*எதிரணியினர் கூறுவது போன்று ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்திக்க நேரிடுமா?
*சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்காக கொண்டு செல்லப்படும் நிலை உருவாகுமா?
*தோல்வியுற்றவுடன், வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முனைவாரா?
* ஆட்சியதிகாரத்தை சுமுகமாக ஒப்படைக்க முன்வருவாரா? இந்தக் கேள்விகள் இப்போது பரவலாகவே கேட்கப்படுகின்றன.
மைத்திரிபால சிறிசேன கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடி, ஊழல் செய்தவர்கள் தப்பியோடாமல் தடுக்கப்படும் என்று கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுவாகவே, நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவர்கள், தேர்தல் ஒன்றில் தோற்கடிக்கப்படும் போது, நாட்டை விட்டு இரவோடு இரவாகத் தப்பியோடுவது வழக்கம். அல்லது இராணுவத்தின் துணையுடன், அதிகாரத்தை இறுகப் பற்றிக் கொள்வதற்கு முயற்சிப்பார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையில், இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பிச் செல்லும் முடிவை எடுப்பார் என்று நம்புவதற்கில்லை.
ஏனென்றால், அவர் உள்நாட்டில் இருந்து கொண்டு எத்தகைய நிலைமைகளையும் எதிர்கொள்வதற்கு அவ்வளவாக அஞ்ச வேண்டிய நிலை இல்லை.
சரத் பொன்சேகாவைப் பிடித்து அடைத்தது போன்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இரவோடு இரவாகப் பிடித்து சிறையில் போட முடியாது.
அதற்கு இந்தியா போன்ற நாடுகள் அனுமதிக்க வாய்ப்பில்லை.
அதேவேளை, தோல்வியுற்ற ஆட்சியாளர்கள் எப்போதும், இராணுவத்தின் துணையுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவது போல, இங்கு நிகழாது என்று கூறுவதற்கில்லை.
ஏனென்றால், முப்படைகளினதும் முழுமையான கட்டுப்பாடும், ஜனாதிபதியினதும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினதும் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. இத்தகையதொரு நிலையில், எதிரணியினரின் எத்தகைய நகர்வுகளையும் தடுப்பதற்கு, அவர்கள் படைபலத்தைப் பயன்படுத்திக் கொள்ள முனைவது ஆச்சரியமானதாக இருக்காது.
தனது பதவிக்காலம் முடிவடைய முன்னரே தேர்தல் நடத்தப்படுவதால், தோல்வியுற்றாலும் இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடிக்கலாம் என்ற விவாதம் ஒன்று பலமாக நடந்து கொண்டிருக்கின்ற பின்னணியில் இத்தகைய வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது.
ஆனால், ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மறுகணமே, அவர் தான் நாட்டின் ஜனாதிபதி என்று அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச போன்றவர்கள் வாதிடுகின் றனர்.
வெற்றிபெற்ற 14 நாட்களுக்குள், புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும் என்றும் அரசியலமைப்பின் 31வது பிரிவில் கூறப்பட்டுள்ளதாக சரத் என் சில்வா கூறியிருக்கிறார்.
எனவே பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி ஒருவர் தோல்வியுற்றாலும் கூட, எஞ்சிய பதவிக்காலம் வரை தானே பதவியில் இருப்பேன் என்று அடம்பிடிக்க முடியாது.
ஆனால், இக்கட்டான சூழல் வரும் போது எல்லோரும் சட்டத்தை மதித்து நடந்து கொள்வார்கள் என்று உறுதியாக கூறமுடியாது.
என்ன நடக்கும் என்பதை, வரும் ஜனவரி 9ம் திகதி தான் உறுதியாக கூற முடியும்.
அதேவேளை, இந்த தேர்தலில் ஏற்படும் தோல்வியானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால், மைத்திரிபால சிறிசேன தான் வெற்றி பெற்றால், மஹிந்த ராஜபக்சவையோ அவரது குடும்பத்தினரையோ, போரில் ஈடுபட்ட படையினரையோ சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல விடமாட்டேன் என்று ஆரம்பத்திலேயே உறுதியளித்திருக்கிறார்.
அதைவிட, இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்றும், உள்நாட்டு பொறிமுறைகளின் மூலமே தீர்வு காணப் போவதாகவும் அறிவித்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.
எனவே, அவர் வெற்றி பெற்றால் கூட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இழுத்துச் செல்ல ஒரு போதும் இடமளிக்கமாட்டார்.
மேலும், எதிரணியில் உள்ள ஜாதிக ஹெல உறுமய அத்தகையதொரு முடிவுக்கு அனுமதிக்கவும் மாட்டாது.
ஜாதிக ஹெல உறுமயவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டில் இதுபற்றிய ஒரு அம்சமும் உள்ளது.
எனவே, சர்வதேச விசாரணை ஒன்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கொண்டு செல்லப்படுவதற்கு, உள்நாட்டில் சூழல்கள் ஏதும் உருவாக வாய்ப்பில்லை.
அதுபோலவே, அயல் நாடான இந்தியாவும் கூட அத்தகைய முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்குத் தயங்காது.
சர்வதேச விசாரணை என்ற பேரில் இலங்கையில் இருந்து எவரையேனும், சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கு இந்தியா அனுமதிக்காது என்றே கருதப்படுகிறது.
ஏனென்றால், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதான குற்றச்சாட்டை இந்தியா எதிர்கொள்கிறது.
எனவே, இலங்கையில் இருந்து எவரேனும் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு, செல்லப்படுவதை இந்தியா ஆதரிக்காது, அனுமதிக்காது.
ஜனாதிபதித் தேர்தலின் முடிவு, சர்வதேச நீதிமன்றத்துக்கு ஆட்சியாளர்களையோ, இராணுவ அதிகாரிகளையோ இழுத்துச் செல்வதற்கான வாசல்களை உடனடியாகத் திறக்கும் என்று எவரும் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
சர்வதேச நீதிமன்றத்துக்கு எவரையேனும் கொண்டு செல்வதென்பது ஒரு நீண்டகால செயல்முறையாக இருக்குமே தவிர, ஒரு தேர்தலின் முடிவு போன்ற குறுகிய கால நிகழ்வுகள் அதனைத் தீர்மானித்து விடாது.
தமக்கே வெற்றி என்று பிரசாரம் செய்யாமல், தோல்வியுற்றால் என்ன நிகழும் என்று எதிர்மறையாக பிரசாரம் செய்து அனுதாபம் தேடும் நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குத் தோன்றியுள்ளது.
அதனால் தான், தோல்வியின் பிந்திய நிலை குறித்து அரசியல் அரங்கிலும் பிரசார அரங்கிலும் அதிகளவு, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அரசதரப்பும் கூட இதனைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
சத்ரியன்
– See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRVKajp7.html#sthash.34MJdyMN.dpuf