ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது அடங்கலான முக்கியமான சரத்துக்களை உள்ளடங்கிய 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் மீதான விவாதம் இன்று

327

 

MS-Ampntodi (1)

19thமுழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானது. இன்று இரண்டாவதுநாள் விவாதம் நடைபெற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு தீர்மானித்துள்ள நிலையில் எதிர்த்தரப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது அடங்கலான முக்கியமான சரத்துக்களை உள்ளடங்கிய 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் மீதான விவாதம் நடத்துவதற்கு இதற்கு முன்னர் மூன்று தடவைகள் திகதி குறிப்பிடப்பட்டபோதும் எதிர்த்தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளையடுத்து விவாதம் தள்ளிப்போடப்பட்டது.
இறுதியாக 27ஆம் 28ஆம் திகதிகளில் விவாதம் நடத்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு எம்பிக்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். முதல்நாள் விவாதம் இரவு 8.30 மணிவரை நடைபெற்றது. இதன்போது, எதிர்த்தரப்பு சார்பில் பல திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. இது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றதோடு, இதன்போது திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக ஆறு பேர் அடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதில், அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் அஜித்.பி.பெரேரா, அநுர பிரியதர்ஷன யாப்பா, பைசர் முஸ்தபா, பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தக் குழுவினர் 19ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு முன்வைக்கப்பட்டிருக்கும் திருத்தங்களை ஆராய்ந்ததோடு, இன்று காலை மீண்டும் கூடி இது தொடர்பில் இறுதிமுடிவு எடுக்க இருக்கின்றனர். இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குழு உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, 19ஆவது திருத்தத்துக்கு பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள அநேகமான திருத்தங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், இரு திருத்தங்கள் தொடர்பிலேயே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. நாளை கூடி (இன்று) இறுதி முடிவு எடுக்க இருக்கிறோம் என்றார்.
இதேவேளை, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நண்பகல் வரை இடம்பெறவுள்ளதோடு அதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் குறித்து ஆராயப்படவிருக்கிறது. 19ஆவது திருத்தத்துக்கு 20ற்கும் மேற்பட்ட திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது.
19ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்திருப்பதால் சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் அடங்கலான 116 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும், ஐ.தே.கவின் 41 உறுப்பினர்களின் ஆதரவும், இலங்கை தமிழரசுக் கட்சியின் 13 எம்பிக்களினது ஆதரவும், ஜனநாயக தேசிய முன்னணியின் மூன்று உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்க ப்படுகிறது.
இது தவிர ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவும் 19ஆவது திருத்தத்துக்குக் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இதேவேளை சில ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் 19ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கலாம் அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
SHARE