எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் 08ம் திகதி இடம்பெறவிருக்கிறது. இதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்ற விடயத்தினை இன்னமும் தீர்மானிக்கவில்லை. காரணம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பது எனக்கூறினால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இரு பாரிய எதிர்ப்புக்களைச் சம்பாதிக்க நேரிடும். ஓன்று இனவழிப்பினை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ அரசிற்கு ஆதரவளிப்பதா? என வடமாகாண சபையின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் அழுத்தத்தினை பிரயோகிக்கநேரிடும்.
மறுபுறத்தே மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவளித்தால் தமிழீழத்தையே வழங்கிவிடுவார் என்கின்றதான பரப்புரை சிங்கள தேசத்தினால் முன்னெடுக்கப்படும். ஆகவே அவற்றையெல்லாம் நிதானித்து, அறிந்து தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் எனக்கூறவேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது.
தபால் மூலமாக வாக்கினை வழங்குபவர்கள் வழங்கத்தொடங்கியுள்ளனர். இவர்களை யாருக்கு வாக்களியுங்கள் என இதுவரையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூறவுமில்லை:கூறமுற்படவுமில்லை. தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஜனாதிபதித் தேர்தலானது ஒரு கட்டாயமான தேர்தலுமல்ல. சிங்களத் தலைமைகள் தங்களுக்குள்ளேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பா அல்லது ஐக்கியதேசியக்கட்சியா ஆட்சியினை அமைப்பது என்கின்றதான போட்டி ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் பண்டாரநாயக்கா பரம்பரையா அல்லது மஹிந்தவின் பரம்பரையா இவ்வாறும் நிலைமைகள் இருக்க, தமிழ்பேசும் மக்கள் யாருக்கு வாக்கினை வழங்கவேண்டும். வாக்களிப்பதன் ஊடாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? எனப்பார்க்கின்றபொழுது நன்மைகள் எதுவுமில்லை. அதற்காக நாம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை குறைகூறுவதிலும் அர்த்தம் இல்லை.
தமிழ் மக்களின் நன்மை தீமைகளை, விருப்பு வெறுப்புகளை பேசுவதற்காகவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டது. அதற்காக அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் குறிக்கோளிலிருந்து விலகிச்செல்லமாட்டார்கள். இதற்கிடையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளுக்குமிடையிலும் சிறுசிறு முரண்பாடுகள் இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக யாருக்கு வாக்களிக்கவேண்டும் என ஏற்பட்டது.
தற்பொழுது அவை ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளது. இதற்குமுன்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், தேசியப்பட்டியல் சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற குழுவினர் சந்திரிக்கா, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன போன்றவர்களை சந்தித்தமை தொடர்பில் இணையத்தளங்கள் பலவும் தமது விமர்சனங்களை எழுப்பியிருந்ததுடன், அவ்வாறு சந்தித்தமையை தவறு எனவும் சுட்டிக்காட்டியதுடன், மூக்குடைந்து திரும்பிவந்துள்ளனர் எனவும் சித்தரித்தது. எனினும் இவர்கள் ஏன் அவர்களை சந்தித்தார்கள் என்கின்றதான காரணத்தினை எந்த இணையத்தளமும் வெளியிடவில்லை.
ஒருசில விடயங்களை மூடிமறைத்து அரசியல் செய்வது அவசியமானது. உலகத்தில் இருக்கக்கூடிய 200ற்கு மேற்பட்ட நாடுகளுள் 175 நாடுகள் இத்தகைய கொள்கைகளையே கடைபிடிக்கின்றன. ஏனைய முஸ்லீம் நாடுகளில் ஒரு சில நாடுகள் மன்னர் ஆட்சிகளைக் கொண்ட நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தமது ஆட்சியினை செய்துவருகின்றன. எல்லா விடயங்களையும் பகிரங்கப்படுத்துவதனால் அதனது விளைவு பாரதூரமாகவும் அமைந்துவிடும். ஆகவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் பொதுக்கூட்டமைப்பினரைச் சந்தித்தது தவறல்ல. இது இராஜதந்திர அணுகுமுறையே.
அதற்காக தமிழ்த்தேசியத்தினையோ, சுயநிர்ணய உரிமையையோ எமது கைகளில் இருக்கின்ற அரசோ அல்லது வரப்போகும் பெற்றுத்தரப்;போவதில்லை. அஹிம்சைப்போராட்டத்தின் ஊடாகவே தமிழ்மக்களின் சிறந்த விடிவினைப் பெற்றுக்கொள்ளமுடியும். இவ்வாறு இணையத்தளங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை விமர்சிப்பது தமிழினத்தை பேரழிவுக்கு கொண்டுசெல்லவதற்கான வாய்ப்புக்களாகவே அமைந்துவிடும். உக்கிரமான போராட்ட சூழ்நிலையிலும் கூட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்தவர்கள், குரல்கொடுத்தவர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தமிழ்த்தேசியத்தோடு ஒன்றிணைந்தவர்கள் காணாமற்போகச்செய்யப்பட்டார்கள். இதுவரையிலும் மஹிந்த அரசில் 33 ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
இவற்றையெல்லாம் பார்க்கின்றபொழுது தற்பொழுதும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் உள்ளவர்கள் ஒரு இலட்சியத்தில் தான் இருக்கின்றார்கள். பழையனவற்றையெல்லாம் மறந்துபோக மாட்டார்கள். தமிழ்மக்களின் மீது கரிசணையோடு தான் இருக்கின்றார்கள். சுமந்திரன்,; செல்வம் அடைக்கலநாதன் தொடர்பிலும் அண்மையில் அரசாங்கத்தின் எடுபிடிகள் எனவும், பணத்திற்காக இரகசியமான முறையில் சென்றுவிட்டார்கள் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் காலகட்டத்தில் இவ்வாறெல்லாம் தெரிவிப்பதும் வழமையானதொன்றே.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எத்தகைய தீர்வுகளை மே;றகொண்டாலும் தமிழ்மக்களுக்கு சாதகமான முறையில் மேற்கொள்ளும் என்பதில் எத்தகைய சந்தேகமுமில்லை.