1984 ஆம் ஆண்டின் இக்காலப் பகுதி எங்கள் பகுதிகளில் புது அத்தியாயம் ஒன்றைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.
இந்தியாவுக்குச் சென்ற “ஞானப் பிரகாசங்கள்” திரும்பி வந்து கால் பதிக்கத் தொடங்கியிருந்தன. ஈழநாடு ஆசிரியத் தலையங்கப் படி “ஞானபிரகாசங்கள் ” என்று இங்கு குறிப்பிட்டேன்.
இக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து ஈழநாடு மட்டுமே தினசரியாக வெளிவந்து கொண்டிருந்தது.
கொழும்பிற்கு வெளியில் வேறு எந்தப் பிராந்தியதிலுமல்லாமல் யாழ்ப்பா ணத்திலிருந்து மட்டுமே இரண்டு தசாப்தங்களுக்கு மேலால் வெளிவந்துகொண்டிருந்த இந்த ஈழ நாடு நாளிதழை இன்றைய இளையோர் சமூகம் தெரிந்திருக்க்கவும் அதன் வரலாற்றை அறியவும் வாய்ப்பில்லை.
தமிழர் அரசியற் போராட்டம் அகிம்சைப் போராட்டமாக முகிழ்த்த வேளை இன்று மீண்டும் “மைத்திரி ” தலைமையில் முகிழ்த்து எழும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சித் தலைவி
சிறிமாவோ பண்டார நாயக்க அம்மையார் முதன் முதல் இராணுவத்தை அனுப்பிய காலம் ! கொழும்பிலிருந்து வந்த “செட்டியார்” நிருவாகத்தில் வெளியான வீரகேசரியோ அல்லது ஏரிக்கரைப் பத்திரிகையான தினகரனோ (அப்போது அது அரச அரவணைப்பில் இல்லாத போதும்) வடக்கிலிருந்து எழுந்த வடகிழக்குத தமிழ்ப் பேசும் மக்களின் எழுச்சியைப் பெரிதுபடுத்தாத நிலையில் தமிழ்ப் பேசும் மக்களின் குரலாக “வியாபார நோக்கமற்று ” சண்முகரத்தினம் -தங்கராஜா சகோதரர்களால் வெளியான “ஈழநாடு ” தமிழ் மக்களின் தேசியக் குரலாக வெளிவந்த ஒரு நாளிதழானது .தமிழரசுக்கட்சியின் அரசியல் செய்திகளுக்கு ஆரம்பத்தில் “பக்க மேளமாக நின்று” வாசித்த வீரகேசரி ஈழநாட்டின் வருகையின் பின்னரே மேளத்தை இறுக்கி வாசிக்கத்தொடங்கியது என்பர் நிக்சன் போன்ற ஊடக ஆய்வாளர்.

இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீளேழு கைக்குக் காரணமான குடும்ப அரசியலே அதன் பிறப்புக்கும் காரணமாயிற்று என்பதை இங்கு நினைவூட்டல் தகும். “தந்தைக்குப் பின் தனயன் ” ( டீ எஸ் – டட்லி) என்ற இரகசியம் கசிந்ததும் ” சுதந்திர இலங்கையின்” முதலாவது அமைச்சரவையை விட்டு வெளியேறி சிறீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அத்திபாரமிட்டவர் அமரர் பண்டாரநாயக்க . ஆட்சி பீடம் ஏறுவதற்கு வழியாக 24 மணி நேரத்தில் தனிச்சிங்களம் ; அதற்கு ஈடாக “தமிழ் மொழிப் பிரயோகம் ” என்ற புஸ்வானம் ஆகியனவே- இன்றைய எமது இடர்களின் தொடக்கப் புள்ளிகள் .
ஆட்சியதிகாரத்துக்காக தம்மக்களைத் தட்டிக் கையாண்டு வந்த அரசியல் முறைகள் இன்று வரை தொடர்வதன் “விதியை” அனுபவிக்க வேண்டியவர்களாக நாட்டின் தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் உள்ளனர்.
அமரர் பண்டாரநாயக்கவின் ஆட்சியில் ஆரம்பமான இனக்கலவரம் பற்றி இங்கு நினவூட்டுவது அவசியமில்லை.
. அமரர் பண்டாரநாயக்காவினால்
ஆரம்பிக்கப்பட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி அன்னாரின் விதவை மனைவி சிறிமாவோ தலைமையில் உருவாக்கிய கூட்டரசினால் 1972 ஆம் ஆண்டு இந்தத் தீவின் சிறுபான்மை மக்களுக்கு ஏதோ ஒரு வகையிலான அதிகாரப் பரவலை வழங்கக் கூடிய வகையில் நாடாளுமன்றத்தினால் முடிவு செய்யப்படக் கூடிய வாய்ப்பிருந்த சுதந்திர அரசியலமைப்பினையும் இல்லாமற்செய்து கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியலமைப்பு அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டவேளை அது தொடர்பான கட்டுரைகள் விவாதங்களை அக்காலத்திலேயே நடுநிலை பேணி முன்வைத்துத் தமிப் பேசும் மக்களுக்கு அதன் தன்மைகளைப் புரியவைத்தது ஈழநாடு!
1974 இல் முதன் முதலாக சிங்கள அரசாங்கத்தினால் இதே சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசினால் தமிழர்கள் இன வாத வெளிப்பாட்டுடன் கொலைவெறிக்கு உட்பட்ட நிலையில் கொல்லப்பட்ட தமிழாராய்ச்சி மாநாட்டில் ( உயிரிழந்தவர்களுக்குக்குக் கூட கவலை தெரிவிக்க சிறிமா அம்மையார் மறுத்திருந்தார்) இடம்பெற்ற நிகழ்வுகளை கொழும்பு நாளிதழ்களை விட -விசேட மலருடன் இறுதி நாள் அனர்த்தம் வரையும் ஈழநாடு நடப்புக்களை மக்களுக்கு வெளிப்படுத்தியது .
இன்று பொது வேட்பாளர் ஓருவரை முன் நிறுத்தி – தனது பூர்வீக அரசியல் வைரியான சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் மீளமைவிற்குத் துணை போகும் ஐக்கிய தேசியக் கட்சிக் கட்சியின் குண்டர்களால் 1981 இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது- அதனுடன் பட்டியலிடப்பட்டு எரிக்கப்பட்ட பத்திரிக்கை அலுவகம் ஈழநாடு.!
அகிம்சைப் போராட்டம் ஆரம்பமான அக்காலம் முதலே தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்துடன் இணை ந்து சேவையாற்றிய ஈழநாடு அம்மக்களின் பிள்ளைகளாலேயே 1988 இல் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது -!
ஈழநாடு அதிபர் கே சி தங்கராஜா – அவர்களின் தமிழ்ப் பணி முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் ஆரம்பமான காலந்தொட்டே ஈழநாடு மூலமாக பரிமாணம் பெற்றது. அவரின் கனவின் வெற்றியாக- அல்லது பேறாக ஈழநாட்டின் ஆசிரிய தலையங்கங்கள் “யாழ்ப்பாண ” அரசியலின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு ஏற்ற ஆவணமாகத் திகழ்ந்தன. இங்கு “யாழ்ப்பாணம்” என்பதை ஆகுபெயராகாகக் கொள்ளளலாம்.
சிறந்த கல்விமானான ஈழநாடு ஆசிரியர் என் சபாரத்தினம் அவர்களின் “ஆசிரியத் தலையங்கங்களைப் “படிப்பதற்கென்றே வாசகர் கூட்டம் ஒன்று ஈழநாட்டிற்கு இருந்தது!
இன்று அகிம்சை அரசியலில் கால் பதித்துள்ள திருவாளர்கள் அல்லது தோழர்கள் -சித்தார்த்தன் சுரேஷ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் சிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன், டக்ளஸ் தேவானந்தா, தவராஜா போன்றவர்களால் ஈழநாடு தலையங்கங்களை ஒழுங்காகப் படிக்க முடியாதிருந்திருக்கும். ஏனெனில் இவர்கள் அதன் காத்திரமான தலையங்கங்கள் வெளி வந்த நாட்களில் தென்னிந்தியாவில் அல்லது வேறு நாட்டில் இருந்திருப்பார்கள்.
ஈழநாடு அலுவலகத்திற்குக் குண்டு வைத்தவர்கள் கூட சர்ச்சைக்குரிய “அந்தத் “தலையங்கத்தை மட்டுமே படித்திருப்பார்கள் என்றார்- எனது ஊடக நண்பர் ஒருவர். ஏனெனில் அவர்களும்முன்னர் குறிப்பிடப்பட்டவர்கள் போல , தென்னிந்தியாவில் அல்லது ஊட்டியில், உத்தரப்பிரதேசத்தில் இருந்திருக்கலாம்.
இவர்கள் எல்லோரும் (எல்லா இயக்கத்தினரும்) இந்தியாவில் இருந்த நாட்களில் ஈழநாட்டில் வெளிவந்த ஆசிரிய தலையங்கத்தில் சபாரத்தினம் மாஸ்டர் இப்படி எழுதினார்.
“..போத்துகேயர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஞானப் பிரகாச சுவாமிகள் என்பார் போத்துகேய அதிகாரியின் ஆணையை ஏற்காமல், பசுவைக்கொடுக்க மறுத்து தென்னிந்தியாவில் போய்த் தஞ்சமடைந்து அங்கிருந்து நீண்ட நாட்களாக -சிவஞானபோதத்திற்கு உரை எழுதியதாக வும் அது அக்காலத்தில் தமிழர் பாரம்பரியத்தில் முக்கிய நிகழ்வு ” என்றும் ஆசிரியர் இன்றைய அரசியல் அழுத்தத்தினை ஏற்காது இந்தியாவுக்கு ஓடிய எமது “ஞானபிரகாசங்கள் ” மண்ணுக்குத் திரும்புவார்கள் என்பது மனதிடம் அளிக்கிறது எனக் கொள்க ” என்று எழுதியிருந்தார்.
(கவனிக்கவும் :-இது எனது நினவுப்பாற்பட்டது .அவரது வசன அல்லது சொல் ஒழுங்கில் மாற்றம் இருக்கலாம்)
அவர் பொதுவாக “ஞானப் பிரகாசங்கள்” என்று குறிப்பிட்டவர்கள் யார் என்பது 1984 களில் யார் என்பதும் அந்த ஞானப் பிரகாசங்கள் பின்னர் ஞான ஒளியை தம் பின்னால் வந்தவர்க்கும் தம் மக்களுக்கும் வழங்கினவா அல்லது ஒன்றை ஒன்று சுட்டெரித்தனவா என்பதை நம் வரலாறு அறியும்!
அந்த இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்து இயங்கிய “ஒவ்வொரு”- “ஞானப்பிரகாசங்களின் ” -தற் துணி பான ” அதிகாரச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் கூட ஒரேயொரு அமைப்பிடம் தம் பொறுப்பைக் கொடுப்பதற்கான காரணங்களில் ஒன்றாகியது!
“அகிம்சைதான் எம் அற வழி என்று அரசியல் நடத்தியவர்கள் “..சிங்களவனின் இரத்தத்தில் தமிழ் ஈழம் காண்போம் என்று 1977 தமது தேர்தல் மேடைகளில் தாம் சொன்னதை சில ஆண்டுகளில் மாற்றி- 1983 இல் மகாத்மா காந்தியின் கிராம சுவராஜ்யம் என்று தொகுதி ரீதியாக “கிராமயாத்திரை” செய்து ” சொல்லப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டபோது – அதற்கும் மேலாக மாகாண சபை மட்டத்துக்கு (அதிகாரம் எவை என்பது வேறு விடயம்) கொண்டு வந்து விட்ட பணியைச் செய்தது இந்த ஞானபிரகாசங்களின் வருகையின் தொடர்ச்சியே!
வழமை போலக் கார்த்திகை மாதம் தமிழ் மக்கள் மத்தியில் முக்கிய மாதமாய் அமைந்து விட்டது . புலிகளை ஆதரிக்காதவர்களையும் சந்தேகித்து அவர்களுக்கு நெருக்குதல் கொடுப்பதன் மூலமும் அவர்களுக்கும் மாவீரர் நாளை நினைவூட்டும் வகையில் இலங்கையின் வரலாற்றில் இக் கார்த்திகை மாதம் இடம் பெற்றுவிட்டது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் மேலும் ஒரு படி சென்றுள்ளது.இம்மாதத்தில் எழுந்த “மகிந்த -மைத்திரி” வெற்றிப் போர் மேலும் சில தகவல்களை தமிழ் மக்களுக்கு ஒளிவு மறைவின்றிச் சொல்லியுள்ளது.இந் நாட்களில் மாறி மாறி வந்த செய்திகள் மீண்டும் தமிழ் மக்கள் தங்கள் இருப்பைப் புரியக் கூடிய வாய்ப்பினைத் தந்துள்ளது .
ஒன்றாகச் சேர்ந்த எதிரணியில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் எழுச்சி பெறச் செய்வதாக ஒருவர் சொல்ல ; தமக்குள்ள பிரச்சினைகள் பற்றிப் பேசாமல் – வெளிநாட்டுப் புலிகளை மீண்டும் தழைத் தோங்கவிடமாட்டோம் என்று அதே எதிரணியில் ஒருவர் சொல்லவும் மீண்டும் மீண்டும் புலிக் கதையைச் சொல்லியே தென்னிலங்கை மக்களிடம் இனவாதத்தையே விதைத்து அவர்களைத் தட்டுவதையே சிங்களத் தலைமைகள் மீண்டும் தமது ‘ஞானமாய்க் ” கொண்டுள்ள வேளையில்,
1984 களில் தமிழ் மக்களின் நம்பிக்கையாகித் திகழ்ந்த முன்னாள் ஞானப்பிரகாசங்களின் ஒற்றுமை இன்றைய காலத்தில் எம் மக்களுக்கு அவசியமானதாய்ப் படுவதை இங்கு குறிப்பது பொருத்தமாகப் படுகின்றது. 1984 இல் ஈழநாட்டில் குறிப்பிடப்பெற்ற “ஞானப்பிரகாசங்கள் ” என்பது வெறும் தமிழ் இனத்திற்கு மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். அக்கால அரசியல் நிலவரங்களைப் புரிந்தவர்களுக்கு இது நன்கு புரியும்.
எமது அரசியல் விடுதலைப் போரடடத்தில் அதன் பரிணாமங்களில் நாம ,பெற்றுக் கொண்ட பட்டறிவில் உலக அரசியல் சமூக அசைவுப் பரிமாணங்களை உள்வாங்கி அதனுடன் இணைந்து உள்நாட்டில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய தமிழ் முஸ்லிம் மலையக அரசியல் சமூக இயக்கங்கள் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சிப்பது “ஞானப் பிரகாசர்களின் ” முயற்சியாய் அமைய வேண்டும். ஜனாதிபதித் தேர்தலைவிட அமையவிருக்கும் நாடாளுமன்றமே அரசியல் எதிர்காலத்தை அமைப்பதில் முக்கியமானதுஎன்பதை சட்டம் அரசியல் கற்கும் சாதாரண மாணவரே அறிவார்!
ஒரு குறித்த நபருக்கான அவரது குழாத்துக்கு எதிராக அரசியல் நோக்கத்துடன் தென்னிலங்கை அரசியல் வைரிகளால் ஒன்று சேர முடியுமாயின், நான்கு நூற்றாண்டு காலமாய் இலங்கைத் தீவு தங்கள் நாடு என்று சொல்லக்கூடிய வகையில் தமக்கான சுய இருப்பினை எதிரணியிலுள்ள இந்தப் “பெரியார்கள்” மூலம் பெற்றுக் கொள்ள முடியாத இனங்களின் தலைமைகளை ஒரு நீதியான தீர்வுக்காக ஏன் ஒரு மேசையில் ஊடக மாநாடு நடத்த இருத்தி வைக்க முடியாது என்பதே இந்த மாதத்தில் எழும் ஒரு கேள்வியாகும்!
1970 களில் வல்வெட்டித்துறை என்ற நகரில் ஆகக் குறைந்தது இரண்டே இரண்டு இலக்கங்களில் உள்ள தொகையில் வீட்டு இணைப்புத் தொலைபேசிகள் மட்டுமே இருந்த காலத்தில் “ஞான மூர்ர்த்தி ” என்ற ஒரு தனி மனிதரால் ” சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது ” என்று மேடைக்குமேடை “கர்ச்சித்த ” இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசையும் , இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் இணைத்து ஒரு “தமிழர் கூட்டணியை” உருவாக்க முடிந்தததை அதி நவீன தொடர்புத் தொழிநுட்ப வசதியுள்ள இந்த நாளில் ஒரு முறை நினைப்பது தகும்!
அரசியலுக்காக நம் தமிழர் இணைவது சுலபம் . மக்கள் நலனுக்காக இணைவதென்பது…. எனும் வாதங்கள் எழுவதிலும் நியாயமுண்டு!
கார்த்திகை மாதம் ‘ஞானப் பிரகாசங்களின் ” மனதில் ஞானம் பிறக்கும் மாதமாக அமையட்டும்!
-வரதன்-