நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இந்த நான்கு கட்சிகளுள் ஈ.பி.ஆர்.எல்.எப் இத்தேர்தல் தொடர்பாக தீர்மானங்களை எடுத்துள்ளது. அந்த தீர்மானம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் கையளிக்கப்படும். அவர்களே இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்வார்களென அண்மையில் தெரிவித்துள்ளனர். புளொட், ரெலோ போன்ற கட்சிகள் இறுதித் தீர்மானங்களை இன்னமும் மேற்கொள்ளவில்லை. இந்த நான்கு கட்சிகளும் தீர்மானங்களை மேற்கொண்டாலும் இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்ளப்போவது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அல்ல. தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவனபவான், சிறிதரன், பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா போன்றவர்களோடு தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்களும் இதில் உள்ளடக்கப்படுவர்.
இவர்களின் இறுதித்தீர்மானம் எவ்வாறமையப்பெறும் என்று பார்க்கின்றபொழுது, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்போம் என்று கூறுவார்கள். அதற்கு ஒரேயொரு காரணத்தினை மாத்திரமே தமிழரசுக்கட்சியினால் கூறமுடியும். அதாவது ஆட்சிமாற்றம் தேவை என்பதாகும். இரு இனவாதக்கட்சிகளுமே தமிழ்மக்களுடைய இனவாதப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள். இருகட்சிகளையும் நியாயப்படுத்திக் கூறமுடியாது. மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சரத்பொன்சேகா, ஜாதிக ஹெல உறுமய, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றவர்கள் தமிழ் மக்களின் இனப்படுகொலையில் பங்கெடுத்தவர்களே. இதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை.
மைத்திரி ஆட்சி பீடமேறி தமிழ் மக்களுக்கு விடுதலையினைப் பெற்றுத்தரப்போவதில்லை. ஆனால் சிங்களவர்கள் மத்தியில் மஹிந்த வந்தால் அபிவிருத்தி, மைத்திரி வந்தால் தமிழீழம் என்ற சொற்பதம் பிரயோகிக்கப்படுகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இரு கட்சிகளும் ஒன்றுதான். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன் இரகசியமான முறையில் பேச்சுக்களை நடாத்தியிருப்பதாக வெளிவந்த செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை. ஆனாலும் மைத்திரியுடன் இரகசியமான முறையில் பேச்சுக்களை நடாத்தியிருக்கின்றார். மைத்திரியை ஆதரிப்போம் என இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவிப்பாராகவிருந்தால் வெற்றிபெறுபவர் மஹிந்த அவர்களே. இதேவேளை மஹிந்தவை ஆதரிப்போம் என சம்பந்தன் தெரிவித்தால் வெற்றிபெறுபவர் மைத்திரியே என்பதே இன்றைய நிலை.
ஆகவே இதில் மௌனம் சாதிப்பது என்பதும் சிறந்ததொரு வழி. ஆனால் மனிதனுடைய சுயாதீனமான வாக்குகளை வழங்கவேண்டும் என்பது ஜனநாயக நாட்டின் உரிமையாகும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எத்தகைய தீர்மானங்களை மேற்கொண்டாலும் தமிழரசுக்கட்சியே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினூடாக மைத்திரிக்கு வாக்களியுங்கள் என அறிவிக்கும்.
TPN NEWS