ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட வேண்டும், அது தற்போது ஆபத்தான பதவியாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

380
ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட வேண்டும், அது தற்போது ஆபத்தான பதவியாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது எண்ணமாகும்,  இந்த பதவி தற்போது மிகவும் ஆபத்தான பதவியாக மாறியுள்ளது.

17வது அரசியல் அமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்பட்டு 18 வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், நிறைவேற்று அதிகாரம் காரணமாக ஜனநாயக நிர்வாகத்திற்கு அவசியமான சகல நிறுவனங்களும் செயலற்றதாகி விட்டன.

உயர்நீதிமன்றம், இலஞ்ச ஆணைக்குழு, தேர்தல் நடத்தப்படுவது, அரச நிர்வாகம் என அனைத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால், ஜனாதிபதி பதவியை மாத்திரமல்ல, அதனுடன் சம்பந்தப்பட்ட சகலமும் நீக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவாக கூறுகின்றோம்.

இதனை செய்யாமல், நாட்டில் ஜனநாயக நிர்வாகத்திற்கான இடத்தை பெற முடியாது.

இந்த பதவியை ஒழித்து அடுத்து உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஜனநாயகம், மனித உரிமை என சகல உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்டு, தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் அதிகார பரவலாக்கம் என அனைத்தும் உள்ளடக்கப்பட வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம் எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

 

SHARE