ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பாக அமையாதென கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என எவரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை. அப்படியான எந்த பிரச்சினையும் ஏற்படாது. இது புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி செல்லும் பாதையை ஏற்படுத்திய விடயம் மாத்திரமே எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மொரவக்க பொருப்பிட்டிய நிசல உயன பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருக்கும் போதே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
நான் அவருக்கு எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. சுதந்திரக் கட்சியில் இருந்து விலகுமாறும் கூறவில்லை.
அவர் கட்சியில் இருந்து சட்டவிரோதமாக நீக்கப்பட்டார். தேர்தலில் நாங்கள் வெற்றியடைந்த பின்னர் சுதந்திரக் கட்சியில் புரட்சி ஒன்று ஏற்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதிக்கு சுதந்தி்ரக் கட்சியின் தலைவர் பதவி வழங்கப்பட்டது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.