ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

366

 

நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐ.நா தலைவர் யோகிம் ரகர் ஜகத் இதனை கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 28 வது கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டமை குறித்து எழுந்து வரும் எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் காஸா பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதல்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அந்த பதவியில் இருந்து விலகியமை, இலங்கையின் மோதல்கள் சம்பந்தமான அறிக்கை மிகவும் முக்கியமானது என்பதுடன் தர்க்க காரணங்களின் அடிப்படையில் அறிக்கையை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இலங்கை சம்பந்தமான போர்க்குற்ற அறிக்கை மார்ச் மாதம் 25 ஆம் திகதி ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்குள் நியாயமான விசாரணைகளை நடத்துவதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இலங்கையின் பிரதான தமிழ் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டமையானது நியாயம் நிராகரிக்கப்பட்டதாக கூட்டமைப்பு கூறியுள்ளது. 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை சம்பந்தமாக ஐ.நா மனித உரிமை பேரவையில் மூன்று யோசனைகள் நிறைவேற்றப்பட்டன.

போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் போர்க்குற்றங்களில் இடம்பெற்றன என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என யோசனைகளில் வலியுறுத்தப்பட்டது.

47 நாடுகளின் இணக்கத்துடன் கடந்த வருடம் யோசனை நிறைவேற்றப்பட்டதுடன் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் உலக நாடுகளில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கி வருகிறது.

SHARE