ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் : வெளிவரத உண்மைகள்

451

 

வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபடும் ஜோன் கெரி
வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபடும் ஜோன் கெரி

2004 ஆம் ஆண்டு சுனாமி அழிவுகளின் பின்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளராகவிருந்த கொலின் பவல் இரண்டு முன்னை நாள் அமெரிக்க அதிபர்களுடன் இலங்கை சென்றார். அதுவும் சுனாமி அழிவுகளைப் பார்வையிடுவதற்காக அரசியல் வட்டாரங்களின் கண்களில் சிக்காமல் பவல் இலங்கை சென்றதன் பின்னர் இப்போது கெரி இலங்கை சென்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு சுனாமியால் இலங்கை மட்டும் பாதிக்கப்படவில்லை. இந்தோனேசியாவே மிகவும் கோரமாகத் தாக்கப்பட்ட நாடாகும். ஜோர்ஜ் புஷ், பில் கிளிங்டன் மற்றும் கொலின் பவல் ஆகியோருக்கு இலங்கையில் திடீர் மனிதாபிமானம் தோன்றியதில் தமது முழு வலுவையும் இலங்கையிலேயே செலுத்த ஆரம்பித்தனர்.

சுனாமி தாக்கிய பின்னர் இலங்கைக்குச் சென்ற முதலாபது இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல்
சுனாமி தாக்கிய பின்னர் இலங்கைக்குச் சென்ற முதலாபது இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல்

2004 ஆம் ஆண்டு இலங்கையில் உலாவந்த இக் குழு உலகம் முழுவதும் எத்தனை குழந்தைகளையும் கர்ப்பிணித் தாய்களையும் முதியோரையும் கொன்று போட்டிருக்கும்? இலங்கைச் சுற்றுப் பயணத்தில் அவர்கள் தெரிந்தெடுத்த ‘ஜனநாயகவாதி ‘ தான் மகிந்த ராஜபக்ச. இந்த மூவரும் இலங்கை சென்ற பின்னர் தான் ராஜபக்ச ஒரு தன்னார்வ நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். அப்போது யாரும் தேடுவாரற்று சந்திரிக்காவின் கொல்லைப்புறத்தில் ஒடுங்கியிருந்த மகிந்த /ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட’ என்ற தன்னார்வ நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.

அதே காலப்பகுதியில் இலங்கை சென்ற இன்னொரு ‘ஜனநாயகக் காவலன்’ பன் கீ மூன். இவர் இந்தோனேசியாவிற்கு மேலால் பறந்து சென்று இலங்கையில் தரித்த போது தென்கொரியாவின் வெளி நாட்டமைச்சராகவும் அமெரிக்காவின் விசுவாசியாகவும் இருந்தார். இலங்கையின் பல பாகங்களில் சுனாமி தாக்கிய போதும் பன் கீ மூன் ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட்விற்கு மட்டுமே பணம் கொடுக்கிறார்.

ராஜபக்சவின் தேர்தல் செலவிற்குப் பணம் வழங்கிய பன் கீ மூன்
ராஜபக்சவின் தேர்தல் செலவிற்குப் பணம் வழங்கிய பன் கீ மூன்

2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இப்பணம் மக்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் ஜனாதிபதியாவதற்குப் பயன்பட்டது. 2005/2006 காலப்பகுதிகளில் இத் தகவலை வெளிக்கொண்டுவந்த் ஊடகவியலாளர்களை மகிந்த அரசு ‘போட்டுத் தள்ளிவிட்டது’ . (சண்டே லீடரில் ஆதாரத்துடன் வெளியான இத் தகவல்களை இப்போதும் பார்வையிடலாம்.) பின்னர் அமெரிக்கா மற்றும் இலங்கை அரச ஆதரவுடன் பன் கீ மூன் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் செயலாளராகிறார்.

2009 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஐ.நா சபை ஒத்துழைப்புடன் இனப்படுகொலை நடைபெறுகிறது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் புலம்பெயர் அரசியல் தலைமைகளும், ஈழத்தின் தமிழ் அரசியல் தலைமைகளும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் வந்துவிடுகின்றன. இனப்படுகொலையின் போது போர்க்குற்றங்கள் நடந்ததாகவும் அவற்றிற்கு தண்டனை பெற்றுத்தரப்போவதாகவும் அமெரிக்க அரசும் அதன் நேச நாடுகளும் ஆடிய நாடகத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் உள்வாங்கப்பட்டு அமெரிக்காவின் ஒட்டுக்குழுக்களாக மாறிப்போயின.

போர் வெற்றியில் அளவிற்கு அதிகமாக அதிகாரங்களைக் குவித்த ராஜபக்சவை நீக்கிய அமெரிக்கா, இப்போது தமிழ்த் தலைமைகள் போல தமது பேச்சைக் கேட்கும் இலங்கை அதிகாரவர்க்கத் தலைமையை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவிற்கும் இலங்கை அதிகாரவர்க்கத்திற்கும் கிடைத்த இந்த இணைவின் பின்னணியில் தான் ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் அமைந்திருந்தது. 2004 ஆம் ஆண்டு இலங்கையை மையமாகக்கொண்டு ஆரம்பித்த இலங்கையை நோக்கிய அமெரிக்காவின் பயணம் ஜோன் கெரியோடு நிறைவடையப் போவதில்லை. இதன் ஆழம் அதிகமானது.

பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் கார்டியன் இதழ் ஜோன் கெரியின் பயணம் தொடர்பாகத் தனது கட்டுரை ஒன்றில்,

“கிழக்கு ஆசியாவின் உற்பத்தி மையங்களுக்கும் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் கொள்வனவுச் சந்தைக்கும் இடையேயான கடல்வழிப் பாதையின் முக்கிய புள்ளியாக இலங்கை அமைந்திருப்பதால், இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்தும் கட்டாயத்திற்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. என்று” கூறுகிறது.

kerry_sirisenaகார்டியனின் இக் கூற்றில் ஒரளவு உண்மை தெரிந்தாலும், தெற்காசியாவையும் குறிப்பாக அதன் கடற் பிராந்தியத்தையும் இராணுவ மயமாக்கும் அமெரிக்காவின் வெறித்தனமான திட்டம் இவற்றின் ஆழத்தில் காணப்படுகிறது. கடற்பிராந்தியங்களை மக்கள் அணுகமுடியாத வலையங்களாக மாற்றும் திட்டம் அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகின்றது. திருகோணமலை, மன்னார் கடற்படுகைக்கைகள் மின் உற்பத்தி மற்றும் எரிவாயு அகழ்வு என்ற பெயரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் தமது இராணுவ நலன்களை அமெரிக்கா தெளிவாகக் கூறியுள்ளது. இலங்கையில் தமது நலன்களை இராணுவரீதியாகத் நிலை நாட்டுவோம் என இலங்கையில் வாழும் அனைவரையும் அமெரிக்க அரசு மிரடியுள்ளது.

அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை அதிகாரிகள்
அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை அதிகாரிகள்

ஒரு பக்கத்தில் தமது நலன்களை உறுதிப்படுத்தும் மைத்திரி அரசும் மறுபக்கத்தில் தமது தமிழ்க் கைக்கூலிகளும் இருக்கும் போது அமெரிக்காவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிராகக் குரல்கொடுக்க யாரும் இல்லாத நிலை தோன்றியுள்ளது.
இச் சூழலில் தான் அமெரிக்க அரசு இலங்கையிலிருந்து 225 கடல் மைல் தொலைவில் தனது விமானம் தாங்கி இராணுவக் கப்பல் ஒன்றை கடந்த மாத நடுப்பகுதியில் நங்கூரமிட்டது.

அணுசக்தியில் இயங்கும் போர் விமானங்களை ஏற்றிச்செல்லும் இக் கப்பலைப் பார்வையிட என இலங்கை கடற்படையின் முக்கிய அதிகாரிகளை அமெரிக்க அரசு விமானத்தில் அழைத்துச் சென்ற்றுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்த போதும், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போதும் USS Carl Vinson CVN90 என்ற இக் கப்பலே அனுப்பிவைக்கப்பட்டது. உலக மக்களின் மரண ஓலங்களை இக்கப்பல் பல தடவை கேட்டிருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

ஜோன் கெரி இலங்கை செல்வதற்கு சற்று முன்னதாக, ஏப்ரல் 19ம் திகதி USS Carl Vinson CVN90 போர் விமானம் தாங்கிக் கப்பலைப் பார்வையிடுவதற்காக இலங்கையின் கடற்படைத் தளபதி ஜெயந்த பெரேரா உட்பட பலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

உலங்கு வானூர்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட அதிகாரிகளுக்கு அமெரிக்க விமானப்படை தமது போர்க்கப்பலை முதலில் சுற்றிக்காட்டியது.

மத்திய கிழக்கில் இராணுவ வினியோகத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியிலேயே இலங்கைக் கடற்படைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கப்பலில் நடைபெற்ற கடற்படைத் தளபதிகளுக்கு இடையேயான சந்திப்பில் இரண்டு பகுதிகளும் கட்டுப்படுத்த வேண்டிய கடற் பிரதேசங்கள்  தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இச்சந்திப்பில் எட்டப்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையிலேயே ஜோன் கெரி இலங்கைக்குப் பயணம் செய்தார். இப்பயணத்தின் பின்னணியிலுள்ள நாசகார நோக்கங்களை மூடி மறைத்த தமிழ் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களும் அவற்றின் ஊடகங்களும் ஜோன் கெரி இலங்கை சென்று போர்க்குற்ற விசாரணை நடத்தப்போவதாக மக்களை ஏமாற்றின.

இலங்கை-அமெரிக்க கடற்படைத் தளபதிகளுக்கு இடையாயான சந்திப்பின் பின்னர், இலங்கை அரசின் நடவடிக்கைகளத் தாம் ஆதரிப்பதாக அமெரிக்க அரச துறைப் பேச்சாளர் அறிக்கை விடுத்தார். பின்னர் இலங்கை அரசுடன் உறவை வலுப்படுத்தும் நோக்குடன் ஜோன் கெரி இலங்கை செல்வதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.

இலங்கைக்குச் சென்ற ஜோன் கெரி இலங்கையில் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாகப் பூரித்துப் போனார்.

வவுனியாவில் அமெரிக்க அரச படைகள்
வவுனியாவில் அமெரிக்க அரச படைகள்

இந்துசமுத்திரப் பிராந்தியத்தை இராணுவ மயமாக்குவதும், வட-கிழக்கில் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையை அழிப்பதும், இலங்கையை தெற்காசியாவிற்கான இராணுவ மையமாகப் பயன்படுத்துவதுமே அமெரிக்க அரசின் உடனடி நோக்கம். இலங்கையில் ஏற்கனவே பலாலி, வவுனியா போன்ற பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசிபிக் கட்டளையகத்தின் இராணுவப்பிரிவுகள் நிலைகொண்டுள்ளன. ராஜபக்ச அரசும், மைத்திரி அரசும் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.

கண்ணிவெடி அகற்றும் பணியில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது.

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அமெரிக்க கால்பதித்த உலகின் அத்தனை பிரதேசங்களும் இரத்த வெள்ளமாகக் காட்சி தருகிறது. ஜோன் கெரி அமெரிக்க ராஜாங்கச் செயலாளராகப் பதவியேற்றதும் மத்திய கிழக்கு நாடுகளில் கவனம் செலுத்திய அளவிற்கு ஆசியாவில் கவனம் செலுத்தவில்லை எனவும் இனிமேல் ஆசியா நாடுகள் மீதான கவனம் முக்கியமானதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

டியாகோ கார்சியாவில் அமெரிக்க இராணுவத்தளம்
டியாகோ கார்சியாவில் அமெரிக்க இராணுவத்தளம்

பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பிலிருக்கும் டியோகாகார்சியா தீவில் அமைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தளம் 2016 வரை மட்டுமே செயற்படும். பிரித்தானிய அரசின் குத்தகை 2016 ஆம் ஆண்டுடன் முடிவிற்கு வருகிறது, அதன் பின்னர் இலங்கையை இராணுவத்தளமாக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் பல்வேறு தரப்பாலும் தெரிவிக்கப்படுகின்றது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தால், அங்கு பல்வேறு பிரதேசங்களைக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து சிவில் நிர்வாகத்தை நடத்திவரும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் ஆயுதப்படையையும் அழித்துவிட முடியவில்லை.

போராட்டம் சரியான திசையில் திட்டமிடப்பட்டால் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான மக்கள் எழுச்சியைத் தோற்றுவிக்க முடியும். மக்களிடமிருந்து உண்மைகளை மறைக்கும் ஊடகங்களும் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களும் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தப்பட வேண்டும்.

அமெரிக்க இராணுவம் நிலைகொண்ட அனைத்து நாடுகளிலும் கலாச்சாரத்தைச் சீர் குலைத்திருக்கிறது. தென்கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் அமெரிக்க இராணுவம் பாலியல் தொழிலை அறிமுகப்படுத்திற்று. போதைப் பொருட்கள் பாவனைக்கு வந்தன. பிரதேசங்கள் சிதைக்கப்பட்டன. ஆக, அழிக்கும் இராணுவத்துடன் ஒட்டிக்கொண்டு மக்களைக் காட்டிக்கொடுக்காமல் அதற்கு எதிரான மக்கள் சார்ந்த புதிய தந்திரோபாயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தவறினால் சாம்பல் மேடுகள் மட்டுமே எஞ்சியிருக்கும்

ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் : அபாய எச்சரிக்கை

johnkerryஅமெரிக்கா -தனது நேச நாடுகள் தவிர்ந்த- அதிகமாக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் அனைத்திலும் இரத்த ஆறு பெருக்கெடுத்திருக்கிறது. ஈரான், ஈராக், லிபியா, மாலைதீவு என்ற ஒரு பட்டியலையே போட்டுக்காட்டலாம். உலகைக் கொள்ளையடிக்கும் பல்தேசியப் பெரு நிறுவனங்களின் தலைமையகமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதம் உலகின் மூலை முடுக்கெல்லாம் படுகொலைகளை நடத்தியிருக்கின்றது. பல்தேசிய நிறுவனங்களின் இலாப்ப் பசியைத் தீர்ப்பதற்கு அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம் ஆயிரமாயிரமாய் மனித உயிர்களைத் தீனியாகக் கொடுத்துள்ளது.

உலகில் மக்கள் வெற்றிபெற்ற எல்லாப் போராட்டங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களாகவே அமைந்திருக்கின்றன. மக்களின் உரிமைக்கான போராட்டங்களை அழிக்கும் கருத்தியல் மற்றும் இராணுவக் கொலைக்கருவிகளை அமெரிக்காவே உலகில் முதல் தடவையாக அறிமுகப்படுத்திற்று.

தன்னார்வ நிறுவனங்கள், உளவு அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், உலகவங்கி, நாணய நிதியம் போன்ற பொருளாதார அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமை அமைப்புக்கள் என்று நூற்றுக்கணக்கான உப கூறுகள் அமெரிக்கா ஏகாதிபத்தியப் பயங்கரவாதத்தின் முகவர் நிறுவனங்களாகச் செயற்படுகின்றன.

புரட்சிகளையும் போராட்டங்களையும் அழிப்பதற்கு ‘எதிர்ப்புரட்சி அமைப்புகளை’ அமரிக்கவே தோற்றுவித்தது. புரட்சிகளைத் தனது முகவர்கள் ஊடாகத் தலைமை தாங்கி அழித்தது.

உலகத்தில் நாகரீமடைந்த சமூகங்கள், மக்கள் பற்றும் மனிதாபிமானமும் உடையவர்கள் அமெரிக்காவை எதிரியாகவே எண்ணுகின்றனர். தமிழர்கள் மட்டும் ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரப்போகும் போர்க்குற்ற அறிக்கையை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு உரிமைகளைக் கோட்டைவிட்டார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் இதுவரை களமாடிய அமெரிக்கா அங்கு ஆயிரக்கணக்கான அகதிகளைத் உருவாக்கியது. லட்சம் லட்சமாக மக்கள் கொல்லப்பட்டனர். சர்வாதிகளையும், கொடுங்கோலர்களையும் வளர்த்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிற்று.

இனிமேல் ஆசியாவில் தாம் கவனம் செலுத்த வேண்டும் என ஆசிய பசிபிக் கட்டளை என்ற கடற்படைப் பிரிவை ஆரம்பித்து ஆசியக் கடற்பிராந்தியத்தை இராணுவமயப்படுத்திற்று. வன்னிப் படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்டு தெற்காசியாவில் மனிதப் பலிகளை ஆரம்பித்து வைத்தது.

உலகத்தில் குற்றச் செயல்கள் மிகக் குறைவாகக் நடைபெறும் நாடுகளில் ஒன்றான மாலைதீவில் இந்தியாவுடன் இணைந்து சதிப் புரட்சியை ஆரம்பித்து வைத்தது. இந்தியாவில் ஒரு புறத்தில் இந்து பாசிசத்தையும் மறு புறத்தில் இஸ்லாமியத் தீவிரவாதத்தையும் உருவாக்கத் துணை போயிற்று.

இலங்கையில் அமெரிக்காவின் அனுசரணையுடன் கொலைகளுக்காக வளர்க்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றிவிடு தனது பொம்மைகளை ஆட்சியிலமர்த்க ஜோன் கெரி நேரடியாகவே தலையிட்டார். சர்வாதிகாரி மகிந்த ஆட்சியிலிருந்து விலக மறுத்த போது கெரி தொலைபேசியில் மகிந்தவை மிரட்டினார் என்ற செய்திகள் வெளியாகின.

உககத்தின் தெற்காசிய மூலையின் கண்ணீர் போலக் காட்சி தரும் இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளர் திடீர்ப் பயணம் செய்வது என்பது அமெரிக்க அரசின் நேரடித் தலையீட்டின் முன்னறிப்பாகும். அழிவிற்கான முன்னெச்சரிக்கையாகும். தெற்காசியாவில் தலையிடும் அமெரிக்காவின் திட்டத்திற்கு இலங்கையே தளமாகப் பயன்படுத்தப்படும்.

வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தக் குற்ற்வாளி ஜோன் கெரி பதக்கம் பெறுகிறார்
வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தக் குற்ற்வாளி ஜோன் கெரி பதக்கம் பெறுகிறார்

வியட்னாம் யுத்தத்தின் போது தாய்லாந்து நாடு அமெரிக்காவின் பின் தளமாகச் செயற்பட்டது. அமெரிக்க இராணுவம் தாய்லாந்தின் கலாச்சாரத்தையே தலைகீழகப் புரட்டிப் போட்டது. அமெரிக்க இராணுவம் தாய்லாந்தில் தங்கியிருத்த போது பெண்களைப் பாலியல் வல்லுறவிற்கு உடப்டுத்தியது. பின்னர் பாலுறவைத் தொழிலாக மாற்றியது. இன்றும் தாய்லாந்தின் பிரதான தேசிய வருவாய்களில் ஒன்றாக பாலியல் காணப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவது ஆதரபூர்வமாக நிறுவப்பட்டது. உலகம் முழுவதும் அமெரிக்க அரசு நடத்தும் நர வேட்டையை இலங்கையிலும் அதே வேகத்தில் ஆரம்பிக்கத் தலைப்படுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஜோன் கெரி நாளை 02.05.2015 இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். இதன் பின்புலத்திலுள்ள ஆபத்தை ஆராய்வதைத் தவிர்த்து ஜேன் கெரியின் காலடியில் விழுந்து வணங்கத் தயாராகும் தமிழர்களுக்கு உலகில் போராடும் எந்த சமூகமும் ஆதரவு வழங்க முன்வராது.
ஜோன் கெரி சார்ந்த நாட்டின் ஆதரவுடன் நடைபெற்ற வன்னிப் படுகொலைகளின் போது கணவரை இழந்த இராணுவத்தின் மனைவியரை ஜோன் கெரி சந்தித்து ஆறுதல் கூறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதனை அறிந்த ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு என்ற ஏகாதிபத்திய ஒட்டுக்குழு தமிழர்களையும் சந்திக்குமாறு ஜோன் கெரிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஜோன் கெரிக்கு போர் புதியதல்ல, வியட்டனாமில் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபட்டதற்காக பதகம் பெற்றவர். 1971 ஆம் ஆண்டு வியட்னாமிய யுத்தத்திற்கு எதிராகச் செயற்பட்டதாகக் கூறும் ஜோன் கெரி, ஜோர்ஜ் புஷ் இற்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தைப் பிரச்சார சாதனமாகப் பயன்படுத்தினார்.

பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள்

அமரிக்க அரச விமானப்படையின் உத்தியோகபூர்வ இணையத்தில் வெளியாகியிருக்கும் வாசகங்களின் தமிழாக்கம்:* தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மிருகத்தனமான பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் போராடி வெற்றிபெற்றது. போரின் முடிவில் மில்லியன் கணக்கான கண்ணி வெடிகள் மோதல் நடைபெற்ற இடங்களில் விட்டுவைக்கப்பட்டிருந்தன. இலங்கையினதும், ‘சர்வதேச சமூகத்தினதும்’ போருக்குப் பின்னான பிரதான முயற்சிகளில் கண்ணிவெடிகளை அகற்றி அந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களைக் குடியேற்றுவதும் ஒன்றாகும்.”

இலங்கை அரச படைகளுடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது நன்மை தருகிறது என்கிறார் இலங்கையில் தங்கியிருக்கும் அமரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஜோசுவா கென்னடி

இலங்கை அரசபடைகளுக்கு மருத்துவ தொழில் முறையைக் கற்பிப்பதற்காக தாம் அங்கு தங்கியிருப்பதாக அமரிக்க அரச படையின் மற்றொரு கொமாண்டர் கூறுகிறார்.

us1யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றவேண்டும் என்று மக்களும் உலகம்முழுவதும் ஜனநாயக முற்போக்கு சக்திகளும் போராடும் அதே வேளை யாழ்ப்பாணத்தில் அமரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தை நெருக்கமாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்று குறித்த சில பகுதிகளின் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

பசிபிக் ஏஞ்சல் என்ற அமரிக்க இராணுவத்தின் உதவிப் பிரிவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக அமரிக்க அரசபடைகளின் **பசிபிக் பிராந்திய இணையம் கூறுகிறது. கடற்படை, விமானப்படை, தரைப்படை ஆகியவற்றைச் சேர்ந்த பொறியியலாளர்கள் அங்கு தங்கியிருப்பதாக கூறும் இணையம், பாடசாலைகளைப் புனரமைக்கும் பணிகளிலும் கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டு குழந்தகளுக்கு கல்வி பெற யாழ்ப்பாணத்தில் வசதி செய்கிறோம் என்கிறது அமரிக்க அரச படைகளின் இணையம்.

2013 ஓகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள பசிபிக் ஏஞ்ஜல் நடவடிக்கைக்காக நூறு அமரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்ணிவெடி அகற்றும் நோக்கத்திற்காக நூற்றிற்கும் அதிகமான அமரிக்கப்படைகள் நிலை கொண்டுள்ளன எனத் தெரிவிக்கின்றன.இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் பல்வேறு அளவுகளில் நிலைக்கொண்டுள்ள அமெரிக்கத் துருப்புகளை ஆசிய பசிபிக் கட்டளையகம் Pacific Command (USPACOM) கட்டுப்படுத்துகிறது..

ஆசியாவில் 36 நாடுகளைக் குறிவைத்து இயங்கும் அமரிக்க அரசின் பிராந்தியப் பாதுகாப்பு அமைப்பிற்கு இலங்கை அரசும் இனப்படுகொலை நடத்திய இலங்கை அரச படைகளும் நெருக்கமான பங்காளிகள். பல வழிகளில் இவர்கள் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

ராஜபக்சவைத் தூக்கில் போடப்போவதாக தமிழ்ப் பேசும் மக்களுக்கு அமரிக்க அரசு , அவர்களின் கூலிகள் ஊடாகப் பிரச்சாரம் மேற்கொள்ளும் அதே வேளை இலங்கை அரசின் தெற்காசியப் பங்காளிகளாக செயற்பட்டுவருகிறது.

90 களிலிருந்து மத்திய கிழக்கை இராணுவ மயப்படுத்தி அப்பிரதேசத்தில் இரத்த ஆறு பெருக்கெடுக்கச் செய்த அமெரிக்க அரசுக்கு தெற்காசியாவிலும் இலங்கையிலும் அப்படி என்ன அதீத அக்கறை? இன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்த பொழுது இனிமேல் அமரிக்காவின் கவனம் ஆசிய

நாடுகளை நோக்கித் திரும்ப வேண்டும் என்று ஆசிய திரும்பல் புள்ளி (Asia Pivot) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அமெரிக்க அரசின் முன்னை நாள் வெளியுறவுத்துறை செயலாராகவிருந்த ஹில்லாரி கிளிங்டன் அமரிக்காவின் பசிபிக் நூற்றாண்டு என்ற ஆக்கத்தை பல ஆய்வாளர்கள் குறித்துக்க்காட்ட ஆரம்பித்தனர். ‘ஈராக் புயல் ஓய்ந்துவிட்டது, ஆப்கானிஸ்தானிலிருந்து அமரிக்கா தனது துருப்புக்களை விலக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் அமரிக்கா ஒரு திரும்பல் புள்ளியில் நிற்கிறது. அந்த இரண்டு நாடக அரங்குகளில் மகத்தான எமது வளங்களைச் செலவு செய்துள்ளோம். எதிர்வரும் பத்து வருடங்களில் நாம் ஒழுங்குபடுத்தப்பட்டும், கம்பீரமாகவும் எமது வலுவை எங்கு பயன்படுத்துவது என்பதைத் திட்டமிட வேண்டும். அப்போது தான் அமரிக்காவின் நலன்களையும், பெறுமானத்தயும், தலைமையையும் நாம் உறுதிசெய்யமுடியும். எதிர்வரும் பத்தாண்டுகளில் ஆசிய பசிபிக் பிராந்தியத்துல் பொருளாதார, தந்திரோபாய, ராஜதந்திர மற்றும் ‘வேறுவழிகளில்’ எமது முதலீட்டை மேற்கொள்வது அமரிக்க ஆட்சிக் கலையைக இருக்கவேண்டும்.’

இவ்வாறு ஆரம்பிக்கும் *** ஹில்லாரி கிளிங்டனின் கட்டுரை,

ஆசியா பசிபிக் உலக அரசியலைத் தீர்மானிக்கும் கருவியாக மாறியுள்ளது.’ என்று தொடரும் போது, அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்தில் எவ்வாறு இரத்தக்களரியை ஏற்படுத்தப்போகிறது என்பதற்கான பருமட்டான பார்வையைத் தருகிறது.

வியட்னாம் ஆக்கிரமிப்பில் அமரிக்கா பல்வேறு மனிதப் படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்தியும் வெற்றிபெற இயலவில்லை. அமரிக்காவிற்கு அனுப்பப்பட்ட இராணுவத்தின் உடல்களுகளைக் கண்ட அமரிக்க மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தனர். இறுதியில் வியட்னாமிலிருந்து எஞ்சியவற்றைச் சுருட்ட்க்கொண்டு அமரிக்க பயங்கரவாத இராணுவம் வெளியேறியது.

இதன் பின்பு அமரிக்க அரசின் ஆக்கிரமிப்பு இராஜந்திரம் மாற்றமடைந்தது. அமெரிக்க அரச அதிபர் ஜிம்மி காட்டரின் அதிகாரத்தின் கீழ் புதிய தந்திரோபாயம் மீண்டும் திட்டமிடப்பட்டது. நாடுகளை ஆக்கிரமிக்கவும், அடக்கியாளவும், சுரண்டவும் அமரிக்க ஏகாதிபத்தியம் புதிதாக ஒழுங்கமைக்கப்படுகிறது. அந்தவேளையில் உள்நாடுகளில் சர்வாதிகாரிகளையும், பயங்கரவாதக் குழுக்களையும் திட்டமிட்டுத் தோற்றுவித்து அவற்றை அழிப்பது என்ற தலையங்கத்தில் ஆக்கிரமிப்புக்களை நடத்துவது என்பது அமரிக்காவின் திட்டமிடலாக அமைந்தது.

******1979 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மதசார்பற்ற அரசிற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளை அமரிக்காவே ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கி உருவாக்கியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் காரணமாகக் கொண்டு ஆப்கானிஸ்தானை அமரிக்கா ஆக்கிரமித்தது. ஈராக்கில் சதாம் ஹுசைனைத் தீனிபோட்டு வளர்த்த அமரிக்கா பின்னர் அந்த நாட்டை ஆக்கிரமித்தது மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றொழித்தது. கிரனெடா, பனாமா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளை ஆக்கிரமிக்க இதே வகையான தந்திரோபாயத்தைப் பயன்படுத்தியது.

இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதல் சீனா, லத்தீன் அமரிக்க நாடுகளின் பிரதான வியாபார பங்காளர்களாக அமரிக்காவைப் பிரதியீடு செய்தது. சில ஆபிரிக்க நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் சீனா அமரிக்காவைப் பிரதியீடு செய்தது.

2008 ஆண்டில் அமரிக்காவின் உள்ளேயே தெளிவாகத் தெரிந்த பொருளாதார நெருக்கடி அமரிக்காவின் பல்தேசிய நிறுவனங்களுக்கான பொருளாதாரக் கொள்கை குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியது. உள் நாட்டிலேயே பல போராட்டங்கள் எழுந்தன. இவற்றின் மத்தியில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு அமரிக்க அரச செலவீனத்தின் ஒரு பகுதியைத் தின்றுகொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானை முற்றாகச் சுரண்டி அழிக்க முடியாமல் எதிப்புப் போராட்டங்கள் முடக்கின.

இந்த நிலையில் அமரிக்காவின் ‘கடைக்கண் பார்வை’ ஆசிய நாடுகள் மீது விழுந்தது.

இதற்காக அவர்கள் மிட்டெடுத்து பலப்படுத்திய இராணுவ ஆக்கிரமிப்பு அலகே ஆசிய பசிபிக் கட்டளையகம். 1947 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமரிக்க அரசின் யுத்தப்பிரிவான இந்த அணிக்கு இப்போதெல்லாம் மனிதாபிமானம் மட்டுமே பிறக்கிறது.

ஹில்லாரி கூறுவது போன்று ஆசிய பசிபிக் பிராந்தியம் அமரிக்க ஆக்கிரமிப்பின் மையப்புள்ளி என்றால் அதன் தெற்காசியப் பிராந்தியத்தின் தளமாகப் பயன்படுவது இலங்கை.

ஆசியப் பிராந்திய ஆக்கிரமிப்பிற்கு அமரிக்காவின் தந்திரோபாயம் வேறுபட்டது.

1. முதலில் சிக்கலுக்குரிய பாசிச அரசுகளைத் தோற்றுவிப்பது.

2. அச் சிக்கல்களைத் தீர்ப்பதாகக் கூறி அரசுகளை மிரட்டியோ அன்றி வேறு வழிகளிலோ இராணுவ ஆக்கிரமிப்பையும் பிரசன்னத்தையும் உறுதிப்படுத்துவது.

இந்த நடவடிக்கைகளுக்காக ஏனைய நாடுகளையும் அமரிக்க அரசு பயன்படுத்துவதைக் காணலாம்.

இந்த வகையில் ராஜபக்ச கிரிமினல் அரசு அமெரிக்க அரச ஆக்கிரமிப்பிற்கு வரபிசாதமாக அமைந்தது.. உள் நாட்டின் இனப்படுகொலையை எந்த எதிர்ப்புமின்றி அமரிக்க ஆதரவோடு கனகச்சிதமாக நடத்திமுடித்த இலங்கை அரச படைகள் தெற்காசியாவில் அமரிக்க அரசின் நெருக்கமான நண்பர்கள். முதலில் இனப்படுகொலையைப் போர்க்குற்றமாக மாற்றிய அமரிக்க அரசு மிக நீண்ட காலத்திற்கு ராஜபக்ச அரசுகுறித்த அழுத்தங்கள் உலகின் எந்த மூலையிலும் இருந்து எழாதவாறு பாதுகாத்தது.

மக்கள் மத்தியிலிருந்து எழக்கூடிய கொந்தளிப்பை ஒடுக்குவதற்காக தானே இலங்கை அரசைத் தண்டிக்கப்போவதாக படம் காட்டியது. அமரிக்க அடியாள் படையான ஐக்கிய நாடுகள் சபையும், புலம் பெயர் கூலிகளும், தமிழ் நாட்டின் இனவாதிகளும் அமரிக்காவின் இந்த நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போயினர்.

ஒரு புறத்தில் இலங்கை அரசைப் பாதுகாத்துக்கொண்டு மறுபுறத்தில் அதற்குச் சமந்தரமாக இலங்கையில் தனது பொருளதார இராணுவ ஆக்கிரமிப்பை ராஜபக்ச அரசோடு இணைந்து அமெரிக்க அரசு மேற்கொண்டது. ****ஆசிய பசிபிக் ஏஞ்சல் என்ற ஆசிய பசிபிக் கட்டளையகத்தின் கீழ் இயங்கும் அமைப்புக் குறித்து பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி தனது தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்தது. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணிப் பிரிவான தேசிய ஜனநாயக முன்னணி, \அமரிக்க அரச விமானப்படை மனிதாபிமான உதவி என்ற பெயரில் பிலிப்பைன்ஸ் அரசுடன் இணைந்து ஆக்கிரமிப்பிலும் உளவு வேலைகளிலும் ஈடுபடுகிறது என்று கூறியது’. மற்றொரு நிகழ்வில் வட கொரியாவிற்கு உளவு விமானங்களை அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டது இந்த அணியே என்றது.

அமரிக்க இராணுவத்திற்கும் இலங்கை அரசிற்கும் இடையேயான உறவு அரச பயங்கரவாதிகளிடையேயான உறவு.

இலங்கையைச் சேர்ந்த இலத்திரனிய பாதுகாப்பு அமைப்பான CICRA– the premier cyber security training and consultancy organisation in Sri Lanka அமக்காவின் ஆசிய பசிபிக் கட்டளையகத்துடன் உடன் (United States Pacific Command (USPACOM)) இணைந்து இலத்திரனியல் பாதுகாப்பு பயிற்சி ஒன்றை தாய்லாந்தில் நடத்தியுள்ளது. அமெரிக்கா இலங்கைக் கடற்படையோடு இணைந்து பல பயிற்சிகளை நடத்தியுள்ளது.

இலங்கையில் நிலைகொண்டுள்ள அமரிக்க இராணுவத்தின் தொகை வெளியிடப்படவில்லை. பலாலி இராணுவ முகாமில் மட்டும் பல நூறு இராணுவத்தினர் நிலை கொண்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பாங்கொக், பலாலி, ஹம்பாந்தோட்ட ஆகிய விமானத் தளங்களூடாக அமரிக்க விமானப்படைக்குச் சொந்தமன விமானங்கள் நாளாந்தம் பயணிப்பதாக இத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ராஜபக்ச பயங்கரவாத அரசு அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானவர்கள் என்பதைக் கூறிக்கொண்டு சிங்கள மக்கள் மத்திய்ட் வாக்களர்களைத் திரட்டிக்கொள்கிறது. அமெரிக்க அரசிற்கு இலங்கை மக்களின் பாதுகாப்பை குத்தகைக்கு விற்பனை செய்துள்ளது. அமரிக்கப் பிரசாஉரிமையுடன் இலங்கையில் இனப்படுகொலை நடத்திய கோட்டாபய ராஜபக்ச கடந்த காலாண்டில் இரண்டு தடவைகள் அரச பயணம் மேற்கொண்டார். ***** நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெற்ற அமரிக்க இராணுவத்தின் வருடாந்த மாநாட்டிற்கு இலங்கை இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க அழைக்கப்பட்டிருந்தார். நவம்பர் 24ம் திகதி கேணல் தயா ரத்னாயக்க நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்குச் சென்று உயர்மட்ட உறுப்பினர்களைச் சந்தித்தார். மக்கள் தீர்பாயத்தின் அண்மைய முடிவுகள் வன்னிப் படுகொலையின் பின்புலத்தில் அமெரிக்க அரசின் பங்களிப்புக் காணப்படுவதை நிறுவியிருக்கிறது. இவை எதுவும் வியப்புக்குரியவை அல்ல. தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானது என்பது புதிய கண்டுபிடிப்பும் அல்ல. தேசிய விடுதலைப் போராட்டத்தை விதேசியப் ஆக்கிரமிப்பாக்கி அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்திதில் புலம் பெயர் தலைமைகளதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற அன்னிய அடியாள் கட்சிகளதும் பங்கு அளப்பரியது. இந்த அழிவு இருளுக்குள் இருந்து மீள்வதற்குரிய ஆரம்ப நடவடிக்கைகள் இனவாத ஒற்றுமையிலிருந்து எழ முடியாது.ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஒருங்கிணைவு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைப் பிரதியிடவேண்டும்.

SHARE