
இலங்கையின் முக்கிய பிரச்சினைகளாகியுள்ள குப்பைகள் அகற்றல் மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தல் ஆகிய இரண்டையும் சரியாக நிறைவேற்றுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது.
இந்த சட்டத்தின் மூலம் கவனிப்பாரற்ற நிலையிலுள்ள வீடுகளையும், ஏனைய கட்டிடங்களையும் பரிசோதனைக்குட்படுத்தி அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
கடந்த வாரம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன் மற்றொரு அங்கமாக சைக்கிள்கள் மூலம் சென்று கழிவுப்பொருட்கள் சேரும் இடங்களையும், டெங்கு நுளம்புகள் பெருக வாய்ப்புள்ள இடங்களையும் பரிசோதிக்க 40 குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தக் குழுக்களில் முப்படைகளைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிப்பர். அவர்களுக்கு முப்பது ஸ்மார்ட் தொலைபேசிகளும் வழங்கப்படும்.
அவை மூலம் அவர்கள் பிரச்சினைகளுக்குரிய இடங்களைப் படம் பிடிப்பர். அப்படங்கள் சட்ட நடவடிக்கைகளின் போது சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்படும்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தப்பாவும், சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் கூட்டாக சமர்ப்பித்த பிரேரணைகளுக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.