தண்ணீர் இன்றி பல ஏக்கர் பயிர்கள் அழியும் நிலை. தண்ணிமுறிப்பை நம்பி இருக்கும் விவசாயிகள் முறையீடு!

398

தண்ணீர் வரத்தின்றி பல ஏக்கர் பயிர்கள் அழியும் நிலையில் உள்ளதாக தண்ணிமுறிப்பு விவசாயிகள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.
வாய்க்கால் வழியாக செல்லும் நீரை நம்பியிருக்கும் விவசாயிகள் அந்த நீர் குறித்த இடங்களை அடையாமல் இருப்பதாகவும் இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரின்றி காணப்படுவதாகவும் தண்ணிமுறிப்பு விவசாயிகளும் மக்கள் பிரதிநிதிகளும் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
இன்று மாலை 5 மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்திய தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பு தலைவர் சசிகுமார் மற்றும் குமுளமுனை கமக்கார அமைப்பின் உப செயலாளர் மயூரன் ஆகியோர் மேற்படி நிலையை விளக்கியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற ரவிகரன் அங்கு கூடியிருந்த விவசாயிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களின் முறைப்பாட்டைக்கேட்டறிந்தார்.
அதன் பின்னர் விவசாய அமைச்சருக்கும், மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளருக்கும் அழைப்புகளை ஏற்படுத்தி தண்ணிமுறிப்பு வாய்க்கால்களில் உள்ள குறைகளை எடுத்துக்கூறியதோடு அதற்கான நடவடிக்கைகளையும் காலதாமதமின்றி செயற்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
அந்தவகையில் நாளை காலை அண்ணளவாக ஐம்பது வேலையாட்களை அனுப்புவதாக தெரிவித்த மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் ஓரிரு நாட்களில் இவ்விடர்பாட்டை சரிசெய்வதாகவும் ரவிகரனிடம் உறுதியளித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரவிகரன்,
இவ்வாறான பிரச்சினைக்கு மூலகாரணமாக தண்ணிமுறிப்பு குள புனரமைப்பில் வாய்க்கால்கள் கட்டப்பட்ட விதம் முறையற்றது என்பதையே தண்ணிமுறிப்பு  விவசாயிகள் முன்வைக்கின்றனர்.
வாய்க்கால்கள் மிக ஒடுக்கமாகவும் உயரம் குறைவானதாகவும் அமைக்கப்பட்டிருப்பதன் காரணமாக பெரும்பாலான விவசாய நிலங்களை தண்ணிமுறிப்பு குளத்தின் நீர் அடையவில்லை என்பதும் அவர்களது முறைப்பாடாக உள்ளது.
குளத்தில் இருந்து தெற்கு வாய்க்காலில் 2 கிலோமீற்றர் தூரமே நீர் வரத்து காணப்படுகிறது. இன்னும் 7 கிலோமீற்றர் அளவிற்கு நீர் செல்லவேண்டி உள்ளது. இதேபோல மத்தியவாய்க்கால் மூலமாகவும் இன்னும் ஏறத்தாழ 5 கிலோமீற்றர் தூரமான விவசாய நிலங்களுக்கு நீர் செல்லவேண்டும். 12ம் கண்ட வாய்க்காலில் 1 கிலோமீற்றர் அளவே நீர்வரத்து உள்ளநிலையில் இன்னும் 8 கிலோமீற்றர் அளவு தூரம் நீர் வரத்து இருக்கவேண்டும் என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் இவ் இடர்பாட்டிற்கான வேலைத்திட்டங்களை நாளை முதல் மேற்கொள்ளவிருப்பதாக உறுதியளித்திருக்கிறார்.
ஆண்டாண்டு காலம் நிறைந்த விளைச்சலை தந்துகொண்டிருக்கும் இந்த தண்ணிமுறிப்பு குளத்தை நம்பியிருக்கும் விளைநிலங்கள் தொடர்ந்தும் அதிக விளைச்சலை பெறவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
image2
image3
image5
image6
image7
SHARE