தந்தைக்காகப் போராடுவேன்! லசந்தவின் மகள் அறிவிப்பு

105

 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, தனது தந்தைக்காக தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்துள்ளார்.

ஹேக் நகரின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தனது விடாமுயற்சியையும் வாதிடுவதையும் பலப்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, மெக்சிகோ மற்றும் சிரியாவின் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நீதி கேட்கப்பட்ட நிலையில், சிவில் சமூகம் தலைமையிலான மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு இந்த வாரம் ஹேக்கில் அறிவிக்கப்பட்டது.

மக்கள் தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் எனது தந்தையின் படுகொலை தொடர்பான இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக குற்றவாளித் தீர்ப்பை வழங்குவதைக் கேட்பதற்காக எனது குடும்பத்தினரும் நானும் 13 ஆண்டுகளாக காத்திருந்தோம் என்று அஹிம்சா குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்களாக இலங்கை அரசாங்கம் என்னைப் போன்ற குடும்பங்களுக்கு தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரிய போதும் கதவுகளை மூடிக்கொண்டது, என்று அஹிம்சா தெரிவித்துள்ளார்.

மக்கள் தீர்ப்பாயம் எனது தந்தையின் படுகொலைக்கான ஆதாரங்களை வலுவாகவும், அழுத்தமாகவும் முன் வைத்ததுடன், எனது தந்தைக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்தியதற்கும் கட்டளையிட்டதற்கும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட இலங்கை அரசாங்கத்தை குற்றவாளியாகக் கண்டறிந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இந்தத் தீர்ப்பு ஆரம்பம் மட்டுமே என்றும், என் தந்தைக்கு நீதி கிடைக்கும் வரை நான் தொடர்ந்து போராடுவேன், என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் பத்திரிகை சுதந்திர அமைப்புகளின் கூட்டணியால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தீர்ப்பாயம், மெக்சிகோ, இலங்கை மற்றும் சிரியாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது பற்றிய ஆதாரங்களையும் பகுப்பாய்வுகளையும் விசாரணை செய்தது.

யாரையும் குற்றவாளி என்று முடிவெடுதற்கு இந்த தீர்ப்பாயத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றாலும், இந்த தீர்ப்பாயம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதையும், ஆதாரங்களை சேகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

SHARE