தந்தை செல்வா அகிம்சைவாதி. விடுதலைப் புலிகள் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் தந்தை செல்வாவிற்கு புலி முத்திரை குத்த வேண்டாம்-வீ.ஆனந்த சங்கரி

447
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணையுமாறு ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோவுக்கு சங்கரி அழைப்பு
தமிழரசுக் கட்சியினர் மக்களுக்கும் தந்தை செல்வாவிற்கும் மாபெரும் துரோகம் செய்கின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
Oct172011_10

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 1949ம் ஆண்டு, சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள், ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து உருவாக்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து தொடங்கப்பட்டது.

அதன் பின் புதிய குடியரசு அரசியல் சாசனம் அமுல்படுத்தப்பட்டபோது, 1972ல் தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கி, அதைத் தமிழர் விடுதலைக் கூட்டணி என பெயர் மாற்றம் செய்து, தன்னுடன் அமரர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரை இணைத் தலைவர்களாக தெரிவு செய்து, தனது பழைய தமிழரசுக் கட்சியை இயங்கவிடாது முடக்கிவிட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவே 1977.04.26ம் திகதி மறைந்தார்.

அவரின் பூதவுடல் உதய சூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட கூட்டணியின் கொடியால் போர்த்தப்பட்டு தகனக் கிரியை செய்யப்பட்டது.

அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி வரை அக் கட்சி எதுவித நடவடிக்கையுமின்றி செயலற்றிருந்தது.

தொடர்ந்து 26 ஆண்டுகள் இயங்காத தமிழரசுக் கட்சியை சேனாதிராசா அவர்கள் 14.10.2003 கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்களில் ஒருவரான திரு தங்கனுடன் தொடர்பு கொண்டு அவரின் வற்புறுத்தலால் தமிழரசுக் கட்சியை புதுப்பித்தார்.

ஆதலால் தற்போது இயங்குவது தங்கன் உருவாக்கிய தமிழரசுக் கட்சியே தவிர தந்தை செல்வாவால் உருவாக்கிய தமிழரசுக் கட்சியல்ல.

தமிழரசுக் கட்சி தங்கன் பிரிவு என்பதே இதற்குப் பொறுத்தமான பெயராகவிருக்கும். விடுதலைப் புலிகள் மூலம் சகல உதவிகளையும் பெற்றுவிட்டு அவர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்பது பெரிய துரோகமாகும்.

தந்தை செல்வா அகிம்சைவாதி. விடுதலைப் புலிகள் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் தந்தை செல்வாவிற்கு புலி முத்திரை குத்த வேண்டாம்.

தமிழரசுக் கட்சித் தலைவர்கள் எவரும் இதுவரை எவருக்கும் விடுதலைப் புலிகள்தான் தமிழரசுக் கட்சியை புதுப்பித்தனர் என்று கூறவில்லை இது மக்களுக்கும் தந்தை செல்வாவிற்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும். இதுவும் ஒரு மோசடியேயாகும். ஆகவே ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, ஆகிய அமைப்புக்களை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

 

SHARE