தனது கட்சியின் தலைமை பொறுப்பை வடக்கு முதல்வர் ஏற்க வேண்டும்: கஜேந்திரகுமார்

343

 

kajenthirakumar_jaffna_001

வடமாகாண முதலமைச்சர் சமகாலத்தில் கூறிவரும் கருத்துக்கள் கடந்த 5 வருடங்களாக நாங்கள் கூறிக்கொண்டிருக்கும் கருத்துக்களுடன் அப்படியே ஒத்துப் போகின்றது. ஆனால் அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடு முதலமைச்சரின் கருத்துக்களுக்கு மாறானவை என்பதே யதார்த்தமாகும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தான்சார்ந்த கட்சியின் தலைமை பொறுப்பை எடுக்க வேண்டும். அல்லது அவருடைய கருத்து நிலைப்பாட்டில் உள்ள ஒருவரை தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும்.

அல்லது அவர் கட்சியிலிருந்து வெளியேறி தன்னுடைய கருத்து நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளுடன் இணைந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 

இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

அவர் கருத்து தெரிவிக்கையில்,

சமகாலத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறிவரும் கருத்துக்கள், குறிப்பாக தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற அழிப்புக்களுக்கான பொறுப்பக்கூறல், இன அழிப்பு தொடர்பான சர்வதேச விசாரணை,

மேலும் வெறுமனே போர் காலத்தில் இடம்பெற்ற அழிவுகள் தொடர்பாக மட்டுமல்லாமல், 1948ம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற அழிப்புக்களுக்கான விசாரணை, மேலும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இரு தேசம் ஒரு நாடு என்ற விடயம் போன்றன.

கடந்த 5 வருடங்களாக நாங்கள் கூறிவரும் கருத்துக்கள் ஆகும்.

இந்தக் கருத்துக்கள் உன்மையில் முதலமைச்சர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவர்களுடைய நிலைப்பாட்டுக்கும் கருத்துக்களுக்கும் மாறானவையாகும்.

இந்தநிலையில் முதலமைச்சர் இந்தக் கருத்தக்களை தன்னுடைய அரசியல் முதிர்ச்சியின் ஊடாக பேசுகின்றாரா? அல்லது பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் முன்னதாகவே கூட்டமைப்பு வடக்கில் பலவீனப்பட்டிருக்கும் நிலையில் எங்களுடைய கருத்துக்களைப் போன்று கருத்துள்ளவர்கள் கூட்டமைப்பிற்குள்ளும் இருக்கின்றார்கள் என்பதை காண்பிப்பதற்கா என்ற சந்தேகம் எமக்கு உண்டாகின்றது.

எனவே முதலமைச்சர் தெரிவிக்கும் சில கருத்துக்களையும், வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு தீர்மானத்தினையும் நாங்கள் வெளிப்படையாகவே வரவேற்கின்றோம்.

ஏனெனில் அந்தக் கருத்துக்கள் நாங்கள் பேசிய கருத்துக்கள். எனவே நாம் வெளிப்படையாக கேட்பது என்னவென்றால் தான் சார்ந்திருக்கும் கட்சியின் தலமைகளுடைய கருத்துக்கு மாறான கருத்துக்களை ஆனால் உன்மையான கருத்துக்களை தெரிவிக்கும் முதலமைச்சர் அந்தக் கட்சியின் தலைமையினை தானே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அல்லது அந்தப் பதவியில் ஒருவரை நியமிக்க வேண்டும். அதுவும் முடியாத பட்சத்தில் தன்னுடைய கருத்து நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE