தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் உயிரைப் பறிக்கக் கூடிய ரத்தம் தொடர்பான நோயோடு போராடிவந்த 10 வயதுச் சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

147
தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் உயிரைப் பறிக்கக் கூடிய ரத்தம் தொடர்பான நோயோடு போராடிவந்த 10 வயதுச் சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
போடிநாயக்கனூரில் ஏலக்காய் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த சரண்யா தங்கம் (26), என்பவரின் ஊரிலுள்ள ஒரு அமைப்பில் சில வருடங்களுக்கு முன்பு ரத்தக் குருத்தணு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.அதில் பதிவு செய்த 200 கொடையாளர்களில் சரண்யாவும் ஒருவர். கடந்த ஆண்டு 10 வயது சிறுவன் ஒருவன் ரத்தக் கோளாறு நோயோடு, குருத்தணு கொடையாளர்களைத் தேடி ‘தாத்ரி’ தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை அணுகினான்.

இந்த அமைப்பு ரத்தக் குருத்தணு, எலும்பு மஜ்ஜை தானம் விழிப்புணர்வுக்காக ஏற்படுத்தப்பட்டது.

அப்போது போடியைச் சேர்ந்த சரண்யாவைப் பற்றி தெரியவந்ததோடு, சரண்யாவின் ரத்த செல் மட்டுமே அந்தச் சிறுவனுக்குப் பொருந்தியுள்ளது.

ரத்தக் குருத்தணு தானம் செய்வதற்காக 2010ம் ஆண்டு பதிவுசெய்திருந்த சரண்யாவை மூன்று ஆண்டுகள் கழித்துத் தேடியபோது, கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அவரது வீட்டுக்குத் தாத்ரி உறுப்பினர்கள் சென்றபோது, சில நாட்களுக்கு முன்பு சரண்யா காதலித்தவருடன் சென்றுவிட்டதாகவும், எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாது என்று சரண்யாவின் அம்மா சொன்னதால் தாத்ரி அமைப்பினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

சிறுவனைக் காப்பாற்றச் சரண்யாவால் மட்டுமே முடியும் என்பதால், விடாமல் தேடியுள்ளனர்.

இந்நிலையில், சரண்யாவின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு, சிறுவனின் நிலையைப் பற்றி தாத்ரி உறுப்பினர்கள் அவரிடம் விளக்கியுள்ளனர்.

ஆனால் புகுந்த வீட்டின் அனுமதி கிடைக்குமா எனச் சரண்யா தயங்கினார்.

அதேநேரம் சரண்யாவின் மனஉறுதியும் கணவர் தங்கத்தின் ஆதரவும் புகுந்த வீட்டாரின் சம்மதத்தைப் பெற உதவியது.

மேலும், சரண்யா சிறிய கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை வந்து 2 வாரம் தங்கி ரத்தக் குருத்தணு தானம் செய்துவிட்டுத் திரும்பினார்.

ஒரு வருடத்துக்கு முன்பு சரண்யா தனது ரத்தக் குருத்தணுவை (Blood stem cell) தானம் செய்து காப்பாற்றிய அந்தச் சிறுவன், இன்றைக்கு ஆரோக்கியமாகப் பள்ளி சென்றுகொண்டிருக்கிறான்.

சரண்யா தங்கம் கூறுகையில், ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மனநிறைவு கிடைத்திருக்கிறது.

ஆனால், ரத்தக் குருத்தணு தானத்தைப் பற்றி பலருக்கும் விழிப்புணர்வு இல்லை.

இந்தக் கொடையைச் செய்யப் படித்தவர்களும் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE