தமிழக தேர்தல்: பூர்வாங்க மதிப்பீட்டின்படி 72.83% வாக்குப்பதிவு

744

download

சென்னையில் வாக்களித்த இளம் வாக்காளர்கள்சென்னையில் வாக்களித்த இளம் வாக்காளர்கள்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அறிவித்துள்ளார். தபால் வாக்குகளின் எண்ணிக்கை தெரிந்த பிறகு நாளை சரியான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்போதைய நிலவரப்படி வாக்குப்பதிவு 82.18 சதவீதமாக இருந்தது.

தர்மபுரியில் அதிகபட்ச வாக்குப்பதிவுசென்னையில் குறைவான வாக்குப்பதிவு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தர்மபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தென் சென்னைத் தொகுதியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறும் நிலையில் இன்று 6வது கட்டத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி உள்பட 11 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 845 வேட்பாளர்களும் புதுச்சேரியில் 30 வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். தமிழ்நாட்டில் சுமார் 5 கோடியே 51 லட்சம் வாக்காளர்களும் புதுவையில் சுமார் 9 லட்சம் வாக்காளர்களும் இருந்தனர். இந்தத் தேர்தலுக்காக தமிழகத்தில் 60817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு 7 மணிக்குத் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆறே முக்கால் மணியிலிருந்தே பல இடங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கக் காத்திருந்தனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், காலை ஒன்பதேகால் மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் அமைந்திருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்ததற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையத்திற்கு அரசியல்கட்சிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

வாக்களிக்கும் ஜெயலலிதாவாக்களிக்கும் ஜெயலலிதா

 

கோபாலபுரம் 2வது தெருவில் அமைந்துள்ள சாரதா மேல்நிலைப் பள்ளியில் தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாக்களித்தனர். வாக்குப்பதிவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, தேர்தல் முடிவுகள் தி.மு.க அணிக்குச் சாதகமாக இருக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

ம.தி.மு.க. தலைவர் வைகோ சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார். அதி.மு.க. திமுக கட்சிகளின் ஆதிக்கத்தை அழிக்கும் தேர்தலாக இது இருக்கும் என வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தங்கள் வாக்குகளை காலையிலேயே பதிவுசெய்தனர்.

ஆறுமணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவு

தமிழகத்தில் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவைத் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருந்தபோதும், தாமதமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் நேரம் வழங்கப்படமாட்டாது என்றும் மாலை ஆறு மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்திருந்தார். அதன்படியே, 6 மணியோடு வாக்குச்சாவடியின் கதவுகள் மூடப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பிறகு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

2009ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவீத வாக்குகளும் 2011ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 78.29 சதவீத வாக்குகலும் பதிவாயின என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் இருந்து தேர்தல் தொடர்பான புகார்களை அனைத்து தரப்பினரும் சொல்வதற்கு சென்னைத் தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டனர். இதனால் இந்தத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வடசென்னையில் 40 பேர் போட்டியிடுவதால், இங்கும் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தமிழகத்தல் ஒரு லட்சத்து 43 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தமிழகத்தில் முதன்முறையாக தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த்துது.

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், பல ஐ.டி. நிறுவனங்கள் இன்றும் வழக்கம் போல் செயல்பட்டன. இந்த நிலையில், ஐந்து நிறுவனங்களை ஆய்வுசெய்த அதிகாரிகள் அங்கு பணிபுரிந்த சுமார் 3,500 ஊழியர்களையும் காவல்துறையினர் உதவியுடன் வெளியேற்றினர். இந்த 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

BBC NEWS

SHARE