தமிழக வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி

89

 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருந்த தமிழக வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி, ஜூலை 1ஆம் திகதி பெர்மிங்காமில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடும். இந்த போட்டி ஜூன் 24ஆம் திகதி தொடங்குகிறது. இதற்காக கடந்த 16ஆம் திகதி அன்றே, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பயிற்சியாளர்கள், வீரர்களை கொண்ட முதல் குழு இங்கிலாந்து சென்றுவிட்டது.

இந்த நிலையில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் அடங்கிய 2வது குழுவுடன் தமிழக வீரர் அஸ்வினும் 19ஆம் திகதி அன்று இங்கிலாந்து கிளம்பினார்.

விமானம் ஏறுவதற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் இங்கிலாந்துக்கு செல்லவில்லை. அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக பிசிசிஐ தரப்பில், அஸ்வின் பூரண குணமடைந்த பின், தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி இங்கிலாந்து புறப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கவுண்டி மைதானத்தில் துவங்க உள்ள லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், ஒரு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த தொடரில், ஒத்திவைக்கப்பட்ட அந்த 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் திகதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE