தமிழரசுக் கட்சியின் யாப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம்

438

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் செய்யப்பட்ட சில திருத்தங்கள் நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கட்சியின் மூல யாப்பு மற்றும் கொள்கைப் பிரடகன திருத்தம் ஆகியனவற்றை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்புக்களை சமர்ப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமஷ்டி மற்றும் இணையாட்சி என்னும் இரண்டு பதங்கள் தொடர்பில் இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமஷ்டி முறைமை ஆட்சியை விடவும் இணையாட்சி முறைமை ஆட்சியில் மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்பதுவும், மத்திய அரசாங்கம் பெயரளவிலான அரசாங்கமாகவே காணப்படம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

கே.டி. சந்திரசோம என்பவரினால் இந்த மனு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டை பிளவுபடுத்தக் கூடிய சொற்பதங்களை உள்ளடக்கி கொள்கைப் பிரகடனம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் யாப்பு மற்றும் கொள்கைப் பிரடகனத்தில் திருத்தங்கள் செய்யப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனம் மீறப்படவில்லை எனவும், சமஸ்கிருத மொழியின் சொற்பதங்கள் தமிழிலில் மொழி பெயர்க்கப்பட்டு கொள்கைப் பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 15ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

SHARE