தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை பெற்றுக் கொடுக்க மோடியின் பயணம் அமைய வேண்டும் -மன்னார் ஆயர்

315
தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை பெற்றுக் கொடுக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் வழிசமைக்கவேண்டும். இவ்வாறு இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு நிகழ்வு ஒன்றுக்காக வருகை தந்திருந்த ஆயர் ஊடகங்கள் விடுத்த கேள்விக்கு பதிலளித்த போது மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த விடயம் தொடர்பாக ஆயர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமரின் இலங்கைக்கான வருகையினை நாம் வரவேற்கும் அதேவேளை இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்கள் இரண்டாந்தர பிரஜைகளாகவும், மற்றவர்களில் தங்கி வாழ்பவர்களாக வும் வாழும் நிலையிலிருந்து தமிழர்கள் விடுபடுவதற்கு தமிழர்களுக்கான அக சுயநிர்ணய உரிமையினை இந்திய பிரதமர் பெற்றுக் கொடுக்க இந்தப் பணயம் வழிசமைக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். அந்தவகையில் இந்திய பிரதமரின் வருகையினை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

அதேசமயம் நீண்ட பூர்வீகத்தைக் கொண்ட தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாந்தர பிரஜைகளாக வாழ்கின்றார்கள். இந்நிலையில்  இது அவலமான நிலையாகும்.

இதனை இந்திய பிரதமர் இலங்கை வருகையின் போது நேரில் பார்வையிட்டு உண்மையின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கவேண்டும்.

இந்தியாவின் அரசியலமைப்பில் இந்தியாவிலுள்ள சகல இனங்களும் தேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவ்வாறே தமிழ் மக்களும் ஒரு தனித்துவமான தேசமாக வாழும் நிலையினை இந்திய பிரதமரின் வருகையின் மூலம் உருவாக்கவேண்டும்.

எமக்கு இந்த நாட்டின் தேசியகீதத்தை கேட்டால் உணர்வு வருவதில்லை. நாம் வெளிநாடு சென்றால் மட்டுமே நாங்கள் இலங்கையர்கள் என தெரிகின்றது.

இந்நிலையில் ஒரு சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும்,  இந்த நாட்டில் உருவாக்குவதற்கு இந்திய பிரதமரின் வருகை வழிசமைக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம் என ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE