தமிழர்கள் என்ற இனம் தனித்துவத்தோடு உலகமே வியந்து நின்ற அளவில் சாதனைகளைப் புரிந்திருக்கிறது- யாழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா

426

 

தமிழர்கள் என்ற இனம் தனித்துவத்தோடு உலகமே வியந்து நின்ற அளவில் சாதனைகளைப் புரிந்திருக்கிறது. இப்பூமிப்பந்திலே உலகெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்ந்தாலும் ஈழத்திலே வாழ்கின்ற உத்தமர்கள் செய்த தியாகங்கள் விடுதலை வேண்டிய அர்ப்பணிப்பான பயணங்கள் ..

.. கட்டுக்கோப்பான தலைமைத்துவத்தில் தலை நிமிரச் செய்த ஆட்சி முறை என்பவற்றால்தான் தமிழர்களை பற்றிய எண்ணத்தால் உலகத்தவர்கள் உவகை கொள்கிறார்கள் என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று யாழ் மாவட்ட கலைஞர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.

இவருடன் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத்துணைத்தூதுவராலயத்தின் தூதுவர் மூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா,பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் லண்டன் வோல்தம்ஸ்ரோவ் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கொடைவள்ளல் கோபாலகிருஸ்ணன், வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் ரில்கோ விடுதி உரிமையாளர் திலகர் எனப்பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா மேலும் தெரிவிக்கையில்

புழுகூட புலியான ஈழத்தமிழ் மண்ணில் என் பாதங்கள் படும் போது தமிழன் என்ற நிலையின் நான் பரவசமடைகிறேன்.

உலகத்தமிழருக்கு தமிழன் என்ற அடையாளத்தை தந்தவர்கள் ஈழத்தமிழர்கள்.

நீங்கள் கடந்து வந்த பாதைகளை, வாழ்ந்த வாழ்க்கை முறைகளை எண்ணிப்பார்க்கிற போது எங்கள் ஒவ்வொருவரின் இதயவேதனையை யாராலும் இலகுவில் மாற்றமுடியாது.

எதிர்ப்பு சக்தி இல்லாத எந்த உயிரினமும் இந்த உலகில் வாழமுடியாது என்பது கூர்ப்புக்கொள்கையாகும். புழு பூச்சி கூட எதிர்க்கும் ஆற்றலை பெறுகின்ற போதுதான் தன் வாழ்வியலை பெற்றுக்கொள்கிறது.

ஈழத்தமிழர்களும் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருந்தமையால்தான் தம் வாழ்வியலுரிமைக்காக யாரையும் எதிர்க்கும் சக்தியாக அவர்கள் உருவெடுத்தார்கள். எனவும் தெரிவித்தார்.

யாழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவிப்பு

இயக்குனர் இமயம் என போற்றப்படுபவரும் ஈழத்மிழரின் நியாயமான போராட்டங்களுக்குத் தொன்று தொட்டு ஆதரவு வழங்கி வருகின்ற இன உணர்வாளனுமான பாரதிராஜா அவர்கள் நேற்று யாழ்ப்பாணம் சென்றார்.

அவரை கௌரவிக்கின்ற நிகழ்வு டில்கோ விடுதியில் திலகராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன், ஈழத்தமிழர்களின் உண்மைத்தன்மை மிக்க வரலாற்று ஆவணப்படம் ஒன்றை ஆக்கித்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இயக்குனர் பாரதிராஜா அவர்களை இன்றுதான் எம்மில் பலர் நேரில் கண்டுள்ளோம். ஆனால் ஈழத்தமிழர் சார்பான போராட்டங்களில் கறுப்புச்சட்டையுடன் அவரை எம் சார்பான ஒரு போராளியாக தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளோம். தன்னுடைய கரகரப்பான குரலிலே ஈழத்தமிழரின் இன்னல்களை எம்மினிய தமிழ் மக்களே என ஆரம்பித்து அவர் எடுத்தியம்புவதை நாம் பார்த்தும் கேட்டும் வந்திருக்கின்றோம்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தான் சார்ந்த துறையில் தன்னுடைய இடத்தை தக்க வைத்தபடி வலம் வந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு திரையுலக சாதனையாளர் அவர். எங்களுடைய மிகப்பணிவான வேண்டுகோள் ஒன்றை அவரிடம் இச்சந்தர்ப்பத்தில் விடுக்க விரும்புகின்றேன்.

ஈழத்தமிழர்களின் உண்மைத்தன்மை மிக்க வரலாற்று ஆவணப்படம் ஒன்றை சரியான தகவல்களைப் பெற்று ஆக்கித் தந்திட வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் மிகவும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

இதை விரைந்து நிறைவேற்றித் தருவீர்கள் என நம்புகின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ. சேனாதிராஜா, சி.சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினரான பா.கஜதீபன், இந்திய பிரதி தூதுவர் மூர்த்தி மற்றும் பேராசிரியர்கள், வைத்தியர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.

எதிர்ப்பரசியலால் எதையும் செய்ய முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எதிர்ப்பரசியலால் எதையும் செய்ய முடியாது என்பதுடன் இணக்க அரசியல் மூலமே எதையும் சாதிக்க முடியுமென  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இயக்குனர் பாரதிராஜா அவர்களை நட்பின் நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே நாம் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும். அத்துடன் அப்போது அதனை எதிர்த்தவர்கள் இப்போது மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டதானது காலம் கடந்த ஞானமாகும்.

அரசில் அங்கம் வகித்திருப்பதன் காரணமாக நான் எதையும் நியாயப்படுத்தவில்லை. பிழைகள் இருப்பின் அதை தெரியப்படுத்துமிடத்து அதனை சரிசெய்யவும் நாம் தயாராகவிருக்கின்றோம்.

கடந்த காலங்களில் எதிர்ப்பரசியலால் எமது மக்களுக்கு எவையும் கிடைக்கவில்லை. அந்த நிலையில் தான் நாம் இணக்க அரசியலை தெரிவு செய்து அரசுடனான நல்லுறவைப் பயன்படுத்தி மக்களுக்கானவற்றை பெற்றுக் கொடுத்து வருகின்றோம்.

இது இணக்க அரசியல் மூலம் எதையும் செய்ய முடியுமென்பதுடன் செய்யலாம் என்பது குறித்தும் நாம் நம்புகிறோம்.

ஐ.நாவில் தமிழ் மொழியில் பேசிய ஒரேயொரு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் எனத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் இதனூடாக அவரது உணர்வு  வெளிப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜா யுத்தத்திற்குப் பின்னர் வடபகுதி முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

 

SHARE