தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் – ஊடகவியலாளர் மாநாட்டில் செல்வம் அடைக்கலநாதன்.

358

SAMSUNG CAMERA PICTURESஇன்று (15.10.2014) வவுனியாவில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களினால் வினவப்பட்ட வினாக்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதிலளிக்கையில்,

 

கேள்வி :- தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்கின்ற விடயம் பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக தங்களுடைய கருத்து என்?

பதில் :- தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இந்தப் பதிவைச் மேற்கொள்ளவேண்டுமென்று ஏற்றுக்கொண்டிருக்கின்றார். கட்சிகள் அனைத்தும் வலுவாக செயற்படவிருக்கின்றோம். ஓற்றுமையோடு இந்தப்பதிவை நிச்சயமாக செய்துமுடிப்போம் என்று கூறுகின்றோம்.
கேள்வி :- மாவை சேனாதிராஜா அவர்கள் கூறியிருக்கின்றாரே கட்சியினைப் பதிவு செய்யமாட்டோம் என்று. இதுபற்றி உங்களின் கருத்து என்ன?

பதில் :- அக்கருத்தினை சம்பந்தன் அவர்கள் மறுத்திருக்கின்றார். அது அவ்வாறு கூறியிருக்க முடியாது. ஆனால் பதிவு SAMSUNG CAMERA PICTURESஎன்பது மேற்கொள்ளப்படவேண்டும். இந்த விடயத்திலே திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக பார்க்கின்றபொழுது, அந்த அங்கத்துவக்குழுவிலே மாவை சேனாதிராஜாவும் உள்ளடக்கப்பட்டுள்ளார். அது எந்த ரீதியில் கூறினார் என்பதை அவரிடம் தான் கேட்கவேண்டும். பதிவு சம்பந்தமாக திருகோணமலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சம்பந்தன் அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்தவகையில் எங்களை பொறுத்தவரையில் கட்சியை ஆனந்தசங்கரி கொண்டுசென்றது போல மற்றையவர்கள் கொண்டுசெல்வதற்கு இடமளிக்கக்கூடாது என்ற கூற்றை நான் மறுக்கின்றேன்.
வலுவானதொரு யாப்பு எங்களிடம் வரையப்பட்டால் அதனை யாரும் கொண்டுசெல்ல முடியாது என்பது என்னுடைய கருத்து. அந்தவகையில் நாங்கள் ஒற்றுமையாகவும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற செயற்பாட்டோடும் செயற்படவேண்டும் என்பது மக்களுடைய வேண்டுகோள். ஆகவே மக்களுடைய வேண்டுகோளையும், சிந்தனையையும் எந்த காலத்திலும் நாம் புறந்தள்ள முடியாது. அதனை புறந்தள்ளினால் மக்கள் எம்மை புறக்கணிப்பார்கள் என்பது பல உதாரணங்கள் மூலமாக நாம் கூறமுடியும். நாங்கள் வலுவானதொரு கூட்டமைப்பை உருவாக்கும் வகையிலான பதிவை மேற்கொள்ள நாம் தயாராகவிருக்கின்றோம்.
கேள்வி :- திருகோணமலையில் கட்சிக்குழுக் கூட்டம் நடைபெறுகின்றபொழுது மாவை சேனாதிராஜா கட்சியின் தலைவராக இருக்கவில்லை. தற்பொழுது அவர் கட்சியின் தலைவர் என்ற வகையில் அவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. அப்படியிருக்கும்பொழுது தமிழரசுக்சட்சியின் ஒரு முதன்மைக் கட்சியாக இருக்கின்ற தலைவர் பதிவு செய்ய முடியாது. அது சாத்தியமில்லை என்றெல்லாம் கூறியிருக்கின்றார். இவ்விடயம் முரண்பாடான தோற்றப்பாடாக அல்லவா இருக்கின்றது?

பதில் :- நிச்சயமாக முரண்பாடான கருத்து என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் எங்களுக்குள்ளே இருக்கும் முரண்பாடுகளை நாங்கள் வெளியில் கூறி மக்களுடைய நம்பிக்கையினை வீணடிக்க விரும்பவில்லை. அந்தவகையில் ஆணித்தளமாக சம்பந்தன் அவர்கள் தன்னுடைய கருத்துக்களைக் கூறியிருக்கின்றார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்படவேண்டும். மாவை அண்ணன் அவர்கள் இந்தக் கருத்தினை ஏன் கூறினார் என்ற அர்த்தம் புரியவில்லை என்று கூறியிருக்கின்றார். இருந்தாலும் இவ்விடயம் தொடர்பாக மாவை அண்ணனுடனும் நாங்கள் உரையாடி முடிவு காணுவோம். சளைக்கமாட்டோம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
கேள்வி :- சம்பந்தன் ஐயாவினைப் பொறுத்தவரையில் சரியான நேரத்தில் பதிவுசெய்யப்படும் என்று அன்றையிலிருந்து கூறிக்கொண்டிருக்கின்றார். அப்படியாயின் நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள். தமிழரசுக்கட்சி தனிப்போக்கில் செல்வதற்கானதொரு வழிமுறையில் இறங்கி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார்கள். அப்படி இருக்கும்பொழுது நீங்கள் உட்பட ஏனைய கட்சிகள் பதிவு விடயத்தில் என்னசெய்யப்போகின்றீர்கள்? எனினும் அடுத்தவருட பொதுத்தேர்தலில் ஏனைய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடவேண்டிதொரு சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிகின்றது. அதற்கு முன்னதாக நீங்கள் கட்சியினை பதிவுசெய்ய முடியாது. கூட்டமைப்பு பதிவு செய்வதற்கான சந்தர்ப்பமும் இல்லை. அவ்வாறாயின் உங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

பதில் :- முல்லைத்தீவிலே இரண்டு பிரதேச சபைகள் தொடர்பாக நீதிமன்றத்திலே வழக்குகள் இருக்கின்ற நிலையில் பதிவு செய்கின்ற வாய்ப்புக்கள் குறைவாகவிருந்தாலும், ஒரு கட்சியை நாங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்று மாற்றி பொதுவானதொரு சின்னத்துடன் பதிவு செய்து தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. எங்களுடைய நோக்கம் தேர்தலை மையப்படுத்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்படவேண்டும். விடுதலைப்புலிகள் உட்பட அனைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை அங்கிகரித்து அதிகாரத்தோடு அது இன்றுவரைக்கும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. எந்தவிதமானதொரு தனிக் கட்சிக்கும் இதனைக் கொண்டுசெல்வதற்கான உரிமை இருக்கமுடியாது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைகின்ற கட்சிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலே ஒற்றுமையான கட்சியைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். இக்கட்சியினுள் யார் யார் தனியாக சென்றாலும் அது மக்களால் புறக்கணிக்கப்படும் என்பதை நான் கூறிக்கொள்கின்றேன்.
கேள்வி :- ஐ.நா விசாரணைகள் தொடர்பான சாட்சியங்களை திரட்டுவதில் எட்டு பேர் அடங்கிய குழுவில் நீங்களும் ஒருவர். அதனுடைய அடிப்படை நோக்கம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகளையும், தமிழ் மக்கள் தொடர்பான ஆவணங்களையும் திரட்டுவதற்கானதொரு குழுவாகவிருக்கின்றது. அந்தக்குழு எப்போதாவது ஒருமுறை சந்திப்பொன்றை ஏற்படுத்தியிருக்கின்றதா? அல்லது இந்த விசாரணைகள் தொடர்பான நடவடிக்கைகளில் அந்தக்குழு எந்தளவில் செயற்பட்டிருக்கின்றது?

பதில் :- இது தொடர்பாக கட்சி ரீதியாக ஒன்றுகூடவில்லை. ஆனால் பாராளுமன்ற ரீதியாக இது தொடர்பான அங்கத்தவர்களும் இருந்தார்கள். ஏங்களைப்பொறுத்தவரையிலே விசாரணைகள் சம்பந்தமாக நாம் பல விடயங்களைச் மேற்கொண்டுவருகின்றோம். அது சம்பந்தமாக சாட்சியங்களை நாம் வழங்கியிருக்கின்றோம். ஆனால் தரவுகள் என்கின்ற ரீதியில் சில அமைப்புக்களுடாக விடயங்களை அனுப்பியிருக்கின்றோம். ஆனால் முழுமையாக இக்குழு செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். சில விடயங்கள் வெளியிலே கூறமுடியாத நிலை தோன்றியுள்ளது. ஆனால் சாட்சிகளை கூறுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தியிருக்கின்றோம். சாட்சியங்களை ஐ.நா முன் சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றோம் எனவும் கூறிக்கொள்கின்றேன்.
கேள்வி :- இந்தக் கட்சிகளுக்கிடையே வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றனவா?
பதில் :- என்னைப்பொறுத்தவரையில் அவ்வாறான கருத்துக்கள் இருக்கமுடியாது. இருந்தாலும் முதலமைச்சரின் கூற்றினை வைத்துப்பார்க்கின்றபொழுது அந்தச் சந்தேகம் எங்களுக்கும் எழுகின்றது. போராடிய இயக்கங்கள் அனைத்தும் ஒரு இலட்சியத்திற்காகவே போராடின. இதற்கு வித்திட்டவர்கள் எமது மூத்த தலைவர்கள் (தந்தை செல்வா). ஈழம் என்கின்ற நிலையில் வராவிட்டாலும் இன்று ஐ.நா வரை சென்றிருக்கின்றது. சர்வதேச மயமாக்கப்பட்டிருக்கின்றது. மாகாணசபை உருவாகுவதற்கும் இந்த தியாகங்கள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. முதலமைச்சர் போராட்டத்தினை கொச்சைப்படுத்துவதை நாங்கள் கண்டிக்கின்றோம்.
கேள்வி :- நல்லிணக்க ஆணைக்குழுவின் மூலம் அரசாங்கத்திற்கு சார்பாக 4000இற்கும் மேற்பட்ட ஆவணங்களும், தமிழர் தரப்பில் 300-400இற்கும் இடைப்பட்ட போர்க்குற்ற ஆவணங்களும் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நீங்கள் ஏன் அரச தரப்பினை விடவும் துரிதமாக அதிகமான ஆவணங்களை உங்களால் சமர்ப்பிக்கமுடியாமல் போனது?
பதில் :- நல்லிணக்க ஆணைக்குழுவென்பது அரசினால் உருவாக்கப்பட்டதொன்று. இந்த நல்லிணக்க 4922 ஆணைக்குழுவிலே மக்கள் கண்ணீர் மல்க  தங்களது பிரச்சினைகளை  தெரிவித்திருக்கின்றார்கள்.  முழுவிடயங்களையும்  ஏற்றுக்கொள்ளாவிடினும் ஒருசில  விடயங்கள் எங்களுக்கு  சாதகமாகவிருக்கின்றது.  எங்களைப்பொறுத்தவரையிலே அரசினால்  ஒழுங்கமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள்  அனைத்தும் கிடப்பிலே  போடப்பட்டதொன்றாகவே நான்  கருதுகின்றேன். இதிலொரு விடயம்  நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியம்  வழங்கச் செல்லும் தமிழ்மக்களுக்கு  இராணுவப் புலனாய்வு கூறுகின்ற விடயம்  உங்களுக்கு நஷ்ட ஈடுகள், மரண  சான்றிதழ்கள், ஆடு, மாடு, கோழி  வழங்குகின்றோம் என்ற நயவஞ்சகப்பேச்சின் மூலம் ஏமாற்றுகின்றார்கள். ஆனாலும் மக்களைப்பொறுத்தவரையில் இவையொன்றும் வேண்டாம் எங்களது உறவுகள் தான் வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள். இந்த ஆணைக்குழுக்கள் அனைத்தும் சர்வதேசத்திடமிருந்து இலங்கையை தப்பவைப்பதற்கான முயற்சிகளாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதிலே குறிப்பிடப்பட்ட தரவுகள் அனைத்தும் இலங்கையை காப்பாற்றுவதற்கான முயற்சிகளே. இவற்றினால் எவ்விதமான பயனும் இல்லை.
கேள்வி :- ஜனாதிபதித் தேர்தலில் உங்களுடைய இலக்கு என்ன ?

பதில் :- இதுவரையிலும் நாங்கள் இத்தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுக்கவில்லை. நான் நினைக்கின்றேன் ஜனாதிபதியை தோற்கடிக்கக்கூடிய முடிவுகளையே எடுப்பார்கள் என்று.
கேள்வி :- ஜனாதிபதியை தோற்கடிக்க முயற்சிகளை எடுக்கப்போகின்றீர்களா? அல்லது நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையினை இல்லாதொழிக்கும் முயற்சிகளை; மேற்கொள்ளப்போகின்றீர்களா ?

பதில் :- ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதே எங்களுடைய நோக்கமாகவிருக்கின்றது. பாராளுமன்றத்தினூடாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதுதான் எங்களுடைய இலக்கும் கூட. நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறைமையை அல்ல.
கேள்வி :- ஆயுதக்கட்சிகள் அனைத்தும் ஏன் ஒரு குடையின் கீழ் நின்று இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி காண இயலாது என நினைக்கின்றீர்கள் ? ஆயுதக்குழுக்களையும் தமிழ் மக்கள் ஆதரித்து வந்ததுதானே வரலாறு ?

பதில் :- ஆயுதக் கட்சிகளாக இருக்கலாம் அல்லது மிதவாதக் கட்சிகளாகவிருக்கலாம். இதிலே பிரிந்துசென்று எங்களை ஆதரியுங்கள் எனக் கேட்கமுடியாது. மக்கள் அதற்கான ஆணையையும் வழங்க மாட்டார்கள். அவ்வாறு பிரிந்து செல்வதில் இக்கட்சிகளுக்கு ஆபத்தே தவிர இது நடைமுறைச் சாத்தியமற்றதொன்று.
கேள்வி :- விடுதலைப்புலிகளால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. அன்றிலிருந்து இன்றுவரை ஏன் இந்தக் கட்சிகள் கூட்டமைப்பாக பதிவு செய்ய முடியாமல் போனது ? பதிவு செய்வது நல்லதா? பதிவு செய்யாமல் இருப்பது நல்லதா?

பதில் :- இல்லை இல்லை. நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும். உடனடியாக பதிவு செய்யவில்லை என்பதற்காக கட்சிகள் உடைந்துபோகமாட்டாது. அதற்கான சூழ்நிலைகள் அப்போது உருவாகவில்லை ஆனால் தற்பொழுது உருவாகியுள்ளது. அது தொடர்பாக ஏனைய கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார்கள். இது மக்கள் சார்ந்த விடயம் என்பதால் இக்கட்சியிலிருந்து யாரும் விலகிச் செல்வதற்கு தயாராகவில்லை. அனுமதியும் இல்லை. உடைந்துசென்று தனியாக செயற்படமுடியாததொரு நிலையும் உருவாகும்.
கேள்வி :- இந்த நான்கு கட்சிகளுக்குள்ளும் தமிழரசுக் கட்சி முதன்மைக் கட்சியாக திகழ்கின்றது. அதாவது ஆதிக்கம் கொண்ட கட்சியாக. கூட்டமைப்பினை பதிவு செய்கின்ற பொழுது தலைவர், செயலாளர், பொருளாளரென பதவிகள் வழங்கப்படுகின்றபொழுது, தமிழரசுக்கட்சியில் உள்ளவர்களை பெரும்பான்மையாக நியமிக்கமுடியாது. சமனாக பகிரப்படவேண்டியதொரு நிலை உருவாகும். அவ்வாறான நிலையில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் :- இவ்விடயம் தொடர்பில் என்னைப்பொறுத்தவரையில் இதற்கான விமர்சனங்களை நாம் வெளிப்படையாக கூறவிரும்பவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் தமிழ் மக்கள் என்ற ரீதியில் பொறுப்புக்கூறவேண்டிய நிலை இருக்கின்றது. சரி பிழைக்கு அப்பால் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. அதற்கமைவாக இணைந்து செயற்பட்டால் ஏனைய கட்சிகளுக்கும் நல்லது.
கேள்வி :- அண்மையில் வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், முதலமைச்சர் அவர்களை வைக்கோல் பட்டறை நாயெனக் கூறிய விடயம் தொடர்பாக உங்களது கருத்துக்கள் என்ன? அந் நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்குபற்றாமைக்கான காரணம் என்ன?

பதில் :- எம்மைப் பொறுத்தவரையில் எமது பூர்வீகத்தினை அரசு சிதைக்க நினைக்கிறது. தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றினை அழித்துவிட நினைக்கிறது. அதற்குத் துணைபோவது எங்களது நோக்கம் அல்ல. வடமாகாணசபை என்பது ஒரு அடிப்படை. தமிழ் மக்களின் விடுதலைக்கான தீர்வல்ல. அதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே வழங்கப்பட்டிருக்கின்றது. நிலம் அபகரிக்கப்படுகின்றது. இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்றது. பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் அநியாயங்களைச் செய்துகொண்டு அவர்கள் வழங்கும் 20,000 பேருக்கான காணி உரிமைப்பத்திரங்கள், மோட்டார் வாகனங்கள் வழங்குவது அனைத்தும் சரி எனத் தலையை அசைப்போமாகவிருந்தால் அது சரிவராது. ஆனால் அரசு 05 வருடங்களில் செய்த அநியாயங்கள். மக்களுக்கு செய்யப்பட்ட துரோகங்கள். அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களைப் புறக்கணித்தல். அந்த வெளிப்பாட்டில் தான் அவர் எங்களை வைக்கோல் பட்டறை நாயென கூறியிருக்கின்றார். இவ்வாறு கூறியிருப்பது மக்கள் பிரதிநிதிகளை அவர் எவ்வாறு சித்தரிக்கின்றார் என்பதன் தன்மை புலப்படுகின்றது. ஜனாதிபதி அழைத்த இடத்திற்கெல்லாம் செல்வதற்கு நாங்கள் அவரினுடைய எடுபுடிகள் அல்ல. இந்த அரசின் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால் அதனை நாம் புறக்கணித்தோம் எனவும் தெரிவித்தார்.

 

நேர்காணல் :- நெற்றிப்பொறியன்.

SHARE