தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டுவிட்டதென்ற சுமந்திரனின் கருத்து வேடிக்கைக்குரியதாகும் – பா.உ. சுரேஸ் பிரேமச்சந்திரன்

303

 

koooo-c

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுவிட்டதென்று கூட்டமைப்பிலுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஒரு ஊடக வியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தெரிவித்த விடயம் தொடர்பாக, கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் இவ்விடயம் தொடர்பாக வினவியபொழுது, இது ஒரு பொய்யான விடயம். ஒரு கட்சி பதிவுசெய்யப்படுவதாகவிருந்தால் அதனது யாப்பு மிக அவசியம். நாம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக செயற்படுவதாயின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு வழங்கப்படவில்லை. இதுஎவ்வாறெனில் எங்களது தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற பெயரில் செயற்படுகின்றோம் என தேர்தல்கள் ஆணையாளருக்கு ஒரு கடிதம் மாத்திரம் வழங்கப்பட்டது. அதில் மாவை சேனாதிராஜா அவர்கள் கையெழுத்திட்டிருக்கின்றார். அது கட்சியினது பதிவு அல்ல.

Sumanthiran-

நாங்கள் கூட்டாக செயற்படுகின்றோம் என்ற கடிதம் மாத்திரம்தான் அது. அதற்கு சட்ட வரையறை எதுவும் பெரிதாக இல்லை. இந்தப்பெயரை வேறுயாருக்கும் கொடுக்கவேண்டாம் என்பதற்காகவே அந்தக் கடிதம். வேறு எதுவும் இல்லை. அதற்காக இந்தப்பெயரை வேறு எவருக்கும் வழங்கமாட்டார்கள் என்றும் அல்ல. இது ஒரு கேலியான சுமந்திரனின் கருத்தாகும். அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவ்வாறெனில் உங்களின் கட்சியினது சின்னம் என்னவென வினவியபொழுது, இருக்கும் ஒரு சின்னத்தினை பயன்படுத்தலாம் என கூறியிருந்தார். இவ்வியடம் புலம்பெயர் வாழ் மற்றும் ஈழத்தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக சுமந்திரன் கூறிய மாபெரும் பொய்யாகும்.

பொய் கூறுவது இயல்பு என்பதற்காக சட்டத்தரணிகளானவர்கள் இவ்வாறு கூறக்கூடாது. ஒரு கட்சியை பதிவுசெய்வதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது யார்? என நினைக்கிறீர்கள் எனக்கேட்டபோது, வேறு யாருமல்ல. இதற்கு காரணம் தமிழரசுக்கட்சிதான். மக்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். கூட்டமைப்பு இன்னமும் பதிவுசெய்யப்படவில்லை. தேர்தல்கள் ஆணையாளர் எம்மை அழைத்து புதுக்குடியிருப்பு தேர்தல் நடைபெற்று முடிந்தபின்னர் கட்சியினை பதிவுசெய்யலாம் என்று தெரிவித்திருந்தார். துரதிஷ்டவசமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நான்கு கட்சியினையும் அழைத்து பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவை சேனாதிராஜாவிடம் தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்தார். புதுக்குடியிருப்பு தேர்தல் முடிந்த பின் கட்சியினை பதிவுசெய்யவேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கின்றது. ஆனால் இதுவரை இன்னமும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்படவில்லை. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் செயலாக எதனையும் தெரிவிக்கக்கூடாது என்று தனது கருத்தினை முன்வைத்தார் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள்.

SHARE