தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பதிவுசெய்யாத வரையிலும் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் சிறந்தது.
தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான விடயமாகவே அமையும். அவ்வாறு பதிவுசெய்யப்படவேண்டுமாயின் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக்கூட்டணியையையும் இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவர் அதற்கெதிராகவே செயற்பட்டுவந்த ஒருவரும் கூட. பொதுவாக இக்கட்சிகள் அனைத்தும் ஒருகுடையின் கீழ் பதிவுசெய்யப்படுமாயின் தமிழரசுக்கட்சியினால் இக்கட்சிகள் அனைத்தும் ஓரங்கட்டப்படும். இறுதியில் துரோகிகள் என்கின்ற பட்டமே இவர்களுக்குச் சூட்டப்படும்.
இதேவேளை தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளை விட்டுப் பிரிந்துசெல்லுமாயின் அவர்களுக்கும் துரோகிகள் என்கின்ற பட்டமே சூட்டப்படும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்டமைப்புக்களை எவ்வாறு உடைக்கலாம் என அரசு திட்டம் தீட்டிவருகின்றது. அதன் ஓரு கட்டமாகவே இக்கட்சிகளிடையே குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழரசுக் கட்சியிலுள்ளவர்கள் தமது கட்சி எந்தவொரு ஆயுதகலாசாரங்களிலிருந்தும் வரவில்லை. அஹிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுத்தே வந்திருக்கின்றது. ஆகவே நாங்கள் தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்கின்ற போர்வையில் அவர்களுடைய நிலைப்பாடுகள் இருக்கின்றது.
ஆயுதக்கட்சிகளைப் பொறுத்தவரையில் ஒருகுடையின் கீழ் நின்று தேர்தலில் போட்டியிட்டாலும் கூட அகழிக்குள் காலை வைத்து மீளமுடியாததொரு சூழல் உருவாகும். ஆகவே கட்சிகள் அனைத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்; அங்கத்துவக் கட்சிகளாக செயற்படுவதே சிறந்தது. தற்போதைய காலகட்டத்தில் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கின்றது. மீளவும் தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தத்தினை ஆரம்பிப்பதாகவிருந்தால் ஆயுதக்குழுக்கள் இலங்கையரசினால் வரவேற்கப்பட்டு அதிகாரங்களை அவர்களுக்கு கையளிப்பார்கள். இவ்வாயுதக்குழுக்களும் பழையகுருடி கதவைத் திறடி என்ற நிலையில் கொலை, கொள்ளை, கப்பம், ஆட்கடத்தல் என்கின்ற செயற்பாடுகளில் இறங்கக்கூடும்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள் குழப்பநிலையினை உருவாக்கி அரசு அதில் குளிர்காயலாம் என நினைக்கிறது. மூத்த அரசியல்வாதிகள் மற்றும் பல ஆய்வாளர்களுடைய கருத்தின்படி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை பலவீனப்படுத்தும் அனைத்து திட்டங்களையும் அரசு ஆரம்பித்துள்ளது. குறிப்பாக வடமாகாணசபைக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் அரசின் நிகழ்ச்சிநிரல்களுக்கேற்ப செயற்படுமளவிற்கே உள்ளனர். வடமாகாண ஆளுநர் ஜி.எச்.சந்திரசிறி, சி.வி.கே.சிவஞானம், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் ப.சத்தியலிங்கம் போன்றோர் இவ்வாறு செயற்பட்டுவருவதாகவும் இராஜதந்திர வட்டாரங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலைமையும் விரைவில் மாற்றியமைக்கப்படவேண்டும். ஒருவகையில் சி.வி.விக்னேஸ்வரன் சிங்களப் பேரினவாதிகளோடு இரண்டறக் கலந்தே இருக்கின்றார். எதிர்வரும் காலகட்டங்களில் எதுவும் இடம்பெறலாம். நீதியரசராகவிருந்த சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் குறித்து நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்;டுவரப்போவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. எது எவ்வாறாகவிருப்பினும் வடமாகாணசபையில் உள்ள ஒருசிலர் மாத்திரமே தமிழ் மக்களுக்காக குரல் எழுப்புகின்றார்கள். குறிப்பாக ரெலோ கட்சியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட என்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் ரவிகரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக சசிதரன் அனந்தி ஆகிய மூவருமே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றார்கள். அவ்வாறு பிரச்சினைகளைக் கூறும் பொழுதும் அவர்களை அதிகமாக கதைப்பதற்கு சி.வி.கே.சிவஞானம் அவர்கள் அனுமதி வழங்குவதில்லை.
ஆனால் அரச தரப்பினர் உரையாற்றும் பொழுது மாத்திரம் அதிகமாக உரையாற்ற அனுமதியுண்டு. இனி ஆளுநரும் அரச பக்கம் சார்ந்து இருப்பதனால் சி.வி.கே.சிவஞானத்திற்கோ, விக்னேஸ்வரனுக்கோ அவருடைய அதிகாரத்தினை மீறி செயற்படமுடியாதுள்ளது. அதற்காக இருவரும் தமிழ்த்தேசியத்தில் பற்றில்லாதவர்கள் அல்ல என்று கூறிவிடமுடியாது. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் காரணம். ஆகவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை பதிவு செய்யாது இவ்வாறே இழுத்தடித்துக் கொண்டு செல்கின்றபொழுது அரசினால் இதரகட்சிகளை உடைக்கமுடியாத சூழ்நிலை உருவாகும். அவற்றை மனதிற்கொண்டே மாவை சேனாதிராஜா கட்சியை பதிவுசெய்யவேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை என்ற பொருட்பட தெரிவித்திருக்கின்றார் எனலாம்.
-இரணியண்-