தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், வடமாகாணசபையும் தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு தீர்வுகளை ஒன்றாக இணைந்து மேற்கொள்ளவேண்டும்.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் கோடிகள் பலவற்றை வழங்கி தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ் மக்களையும் விலைக்கு வாங்க அரசு எண்ணுகிறது. அதற்கு அடிகோலிகளாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண சபையின் ஒரு சில அமைச்சர்களும், உறுப்பினர்களும் இவ் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மக்கள் மத்தியில் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளதன் காரணமாக, அனைத்திற்கும் பதில் வழங்கக்கூடிய சம்பந்தன் அவர்கள் ஆழ்ந்த யோசனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
தேர்தல் காலங்களில் கட்சியில் உள்ளவர்களை அரசாங்கம் வாங்கிக்கொள்வதற்கு தம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றது. தேர்தல் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதனை தவிர்த்துக்கொள்வதன் மூலம் பாரிய ஆபத்துக்களில் இருந்து தவிர்த்துக்கொள்ளலாம். இல்லையேல் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை இரண்டினையும் விட்டு தமிழினம் வேறு திசையில் திரும்பக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், வடமாகாணசபையும் இக்காலகட்டத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.