தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும்!- சுரேஸ் எம்.பி.

337

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பாக கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்தை நாம் கோரியிருக்கின்றோம். தனித்தொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஒத்துக்கொள்ளோம்.என தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார்.

TNA_VAUNEJA1

அங்கத்துவக் கட்சிகளின் தலமைகளுக்கிடையிலான சந்திப்பு நடத்தப்பட்டு அதில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது. மாவட்ட கட்சிக் கிளைகள் எடுக்கும் தீர்மானங்களை குறித்து நாங்கள் கவலையடையவில்லை.

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழரசு கட்சிக்கு இரு வரைபுகளை வழங்கியிருக்கின்றோம். அதில் அங்கத்துவக் கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்த்தை நாம் கோரியிருக்கின்றோம். எனவே தனித்தொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஒத்துக்கொள்ளோம்.

கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழரசுக்கு பெரும்பான்மை அந்தஸ்து வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்டக் கிளைக் கூட்டத்தில் தமிழரசு கட்சிக்கு 51 வீதமும் மற்றய கட்சிகளுக்கு 49 வீதமும் என்ற அடிப்படையிலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

எனினும் நாம் தமிழரசு கட்சிக்கு, இரு வரைபுகளை வழங்கியிருக்கின்றோம். அதில் ஒரு வரைபு யாப்பு சம்பந்தமானது. மற்றய வரைபு புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தமானது. இதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தமான வரைபில் நாங்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என குறிப்பிட்டிருக்கின்றோம்.

அதனை விடுத்து ஒரு கட்சிக்கு பெரும்பான்மை அந்தஸ்தை எடுத்துக் கொள்வதை நாங்கள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. என்பதுடன், இந்த விடயம் தொடர்பாக கட்சிகளின் தலைவர்கள் கூடி பேசவில்லை. அதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 17ம், 18ம் திகதிகளிலேயே நடைபெற விருக்கின்றது.

எனவே அதற்கு முன்னதாக மாவட்டக் கிளைகளில் தீர்மானிக்கப்படும் விடயங்கள் தொடர்பாக நாங்கள் கவலையடையவில்லை. மேலும் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சி முழுமையாக தனது மறுப்பினை தெரிவித்திருக்கின்றது.

இதற்கு மேலதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பல கட்சிகளின் கூட்டமைப்பு என்னும் வகையில் ஒரு பொதுவான சின்னத்தில், தேர்தலை எதிர்கொள்வதற்கும் தமிழரசுக் கட்சி தனது மறுப்பினை தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையிலேயே இறுதியான முடிவினை நாங்கள் 17ம், 18ம் திகதிகளில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் பின்னதாகவே அறிவிக்க முடியும். அதற்கு முன்னதாக எந்தவொரு தீர்மானமும் இறுதியான தீர்மானமாக அமைய முடியாது என்றார்.

SHARE