தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசின் செயற்பாடுகளை பொறுமையோடும் நிதானத்தோடும் பார்த்திருக்கின்றோம் – சிவசக்தி ஆனந்தன் எம்.பி

372

 

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசின் செயற்பாடுகளை பொறுமையோடும் நிதானத்தோடும் பார்த்திருக்கின்றோம் – சிவசக்தி ஆனந்தன் எம்.பி

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, புதிய அரசுக்கு சந்தர்ப்பம் ஒன்று வழங்கியுள்ளோம். இந்த அரசு என்ன செய்கின்றது,  என்ன செய்யப் போகின்றது என்பதை நிதானமாகவும், பொறுமையோடும் நாங்கள் பார்த்திருக்கின்றோம். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை வீணாக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னி குறொஸ் சுகாதார நிறுவனத்தின் அனுசரணையில் பசியொழிப்புக்கான உலக மன்றம் என்ற தொண்டு நிறுவனத்தினால் மாற்று வலுவுள்ளவர்களுக்கான அரிசி பொதி வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

SONY DSC SONY DSC SONY DSC SONY DSC SONY DSC SONY DSC SONY DSC SONY DSC

வன்னி குறொஸ் சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், வடமாகாண சபை உறுப்பினருமாகிய டாக்டர் சிவமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

யுத்தத்தினால் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கனகராயன்குளம் பிரதேசமும் ஒன்று. இங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் விசேட தேவைக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றார்கள். சில கிராம சேவையாளர் பிரிவில் 100க்கும் அதிகமானவர்கள் இவ்வாறு அவயவங்களை இழந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள். யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களாகப் போகின்றது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தோம். ஆயினும் அது நிறைவேறவில்லை.

இடம்யெயர்ந்து சென்று திரும்பி வந்து மீள்குடியேறிய குடும்பங்களுக்கு சரியான வீடுகளில்லை. வீதிகள் இல்லை. மின்சாரம் இல்லை. இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த எண்ணற்ற பிள்ளைகள் தமது கல்வியை இடையில் நிறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டுள்ள இந்தக் குடும்பங்களுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்கு முயற்சித்தோம். ஆனாhல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அது முடியவில்லை. சீரான முறையில் இந்தப் பணிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாகத்தான் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அவரைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தார்கள். அதற்கேற்ற வகையில் தமது வாக்குகளைப் பயன்படுத்தி மைத்திரிபால சிறிசேனாவைப் புதிய ஜனாதிபதியாக்கினார்கள்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான பல விடயங்களை நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. அதனை நினைவூட்டுவதற்காகவே, காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனக் கோரி வடக்கு கிழக்குப் பகுதியெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

வடக்கில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாகியிருக்கின்றார்கள். இதனால் எண்ணற்ற குடும்பங்கள் பெண்களைத் தலைமை தாங்கும் குடும்பங்களாக இருக்கின்றன. இந்தப் பிரதேசத்தில் 12 ஆயிரம் சிறுவர்கள் தாய் தந்தையரை அல்லது தாயையோ தந்தையோ இழந்தவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் நிலையான வாழ்வாதாரமற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

அது மட்டுமல்லாமல், அரசியல் கைதிகளாகப் பலர் இன்னும் சிறைச்சாலைகளில் வாடுகின்றார்கள். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருக்கின்றார்கள். அவர்கள் எங்கு இருக்கின்றார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் இருக்கின்றது.

இராணுவம் காணிகளை ஆக்கிரமித்திருப்பதனால், பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகளுக்கு அப்பால் தேசிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண வேண்டிய முக்கிய பொறுப்பும் அரசாங்கத்ததைச் சார்ந்திருக்கின்றது.

புதிய அராசங்கம் முன்னெடுத்துள்ள 100 நாள் வேலைத் திட்டத்தில் இவற்றில் அவசரமாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என கோரியிருக்கின்றோம்.

பத்து வருடங்கள் அதிகார பலத்தோடு அசைக்கவே முடியாது என்ற நிலையில் ஆட்சிபுரிந்த முன்னைய அரசாங்கத்தை புரட்சிகரமான வாக்களிப்பின் மூலம் தமிழ் மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள். சர்வதேச நாடுகள் பலவற்றின் உதவியோடு முன்னைய அரசாங்கம் யுத்தத்தில் வெற்றிபெற்றிருந்தது. முன்னைய அரசு 20 நாடுகளிடம் இருந்து பெற்ற ஆயுதங்கள் மற்றும் பண உதவிகளைக் கொண்டே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் யுத்தத்தினால் அழிவுற்ற பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்காக வெளிநாடுகள் அளித்த உதவிகளைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்னைய அரசு வழங்கவில்லை. இத்தகைய ஒரு பின்னணியில்தான் அந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியது.

தேர்தலின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்தே, இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின வைபவத்தில் மைத்திரிபால சிறிசேனா புதிய ஜனாதிபதியாகப் பங்கேற்க முடிந்திருக்கின்றது. தமிழ் மக்களின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசாங்கம் 6 வருடம் தொடக்கம் 20 வருடங்கள் வரையில் சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் இளைஞர்களைப் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும். அவயவங்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக சமூகத்தில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தி;ற்காக இந்த அரசு நிதிக் கொடுப்பனவு செய்ய முன்வர வேண்டும்.

புதிய அரசாங்கத்திற்குத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவசரமாகச் செய்ய வேண்டியவை என்ன என்பதை நாங்கள் தெரியப்படுத்தியுள்ளோம். அந்த விடயங்கள் தொடர்பில் புதிய அரசாங்கத்திற்கு நினைவூட்டும் வகையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, இந்த அரசாங்கம் இது தொடர்பில் என்ன செய்யப் போகின்றது என்பதை நாங்கள் நிதானத்துடனும், பொறுமையோடும் பார்த்திருக்கின்றோம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எம் மக்களுக்கு புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகளும் பல உதவிகளைச் செய்து வருகின்றார்கள். இந்த வகையில் பசியொழிப்புக்கான உலக மன்றத்தின் நிறுவனராகிய அகிலன் முத்துக்குமாரசாமி அரிசி பொதிகளை வழங்கி உதவி வருகின்றார்;. இந்தத் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அவர் இதுவரையில் 50 ஆயிரம் கிலோ அரிசியைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழ் சிஎன்என் என்ற இணையதளத்தின் ஊடாக 60 குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் வாழ்வாதார உதவி வழங்கியுள்ளார். இதைவிட, ரிஆர்ரி வானொலியும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கும், ஏனைய வாழ்வாதார தேவைக்குமான உதவிகளை வழங்கி வருகின்றது. புலம் பெயர் மக்கள் மத்தியில் உள்ள ஊடகங்கள் வெறுமனே செய்திகளை வெளியிடும் ஊடகங்களாக இல்லாமல் தமிழ் சமூகத்தின் தேவையறிந்து உதவிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான உதவிகள் பல்வேறு தேவைகளைக் கொண்டுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதல்ல. இத்தகைய உதவிகளைச் சுட்டிக்காட்டுவதன் ஊடாக எமது மக்களின் பாரிய தேவைகளையும், அவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் புதிய அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்.

SHARE